எனக்குத் திருமணமாகிவிட்டதை யாரும் நம்பத் தயாராய் இல்லை!

‘டைட்டானிக்’ கதாநாயகி ‘கயல்’ ஆனந்தி பேட்டி
டைட்டானிக் படத்தில்...
டைட்டானிக் படத்தில்...

பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆனந்தி. எத்தனை நாயகிகள் வந்துபோனாலும் ஆந்திரத்திலிருந்து வந்த ஆனந்தி, 10 ஆண்டுகளைக் கடந்தும் தனது ‘நேச்சுரல் ஆக்டிங்’ திறமையால் நினைவில் கொள்ளப்படுகிறார். விரைவில் ரிலீஸாகவிருக்கும் ‘டைட்டானிக்’ தமிழ்ப் படத்தில் கலையரசனுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். அதையொட்டி காமதேனுவுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் ‘ஜோ’, ‘ கமலி ஃப்ரம் நடுக்காவேரி’ படத்தின் ‘கமலி’ எனப் புதுப்புது அடையாளங்கள் கிடைத்தாலும் ‘கயல்’ ஆனந்தி என ரசிகர்கள் உங்களை அழைப்பதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அந்தப் பாராட்டுக்கெல்லாம் பிரபு சாலமன் சார்தான் காரணம். எனது இயற்பெயர் ரக்‌ஷிதா. “உங்களுடைய பெற்றோர் வைத்த பெயர் ஒரு சினிமா கதாநாயகியின் பெயர்போல் உள்ளது. ஆனால், நீங்கள் எங்கள் தமிழ் நாட்டின் பெண் போல் இருக்கிறீர்கள். எனவேதான் ஆனந்தி என உங்களுக்குப் பெயர் வைத்தேன்” என்றார் பிரபு சாலமன் சார்.

இப்படியொரு பெயரை வைக்கிறேன் என்பதை அவர் எனக்குச் சொல்லவே இல்லை. ‘கயல்’ படத்தின் பிரஸ் மீட்டில் அறிவிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். என்றாலும் இப்போது நீங்கள் சொல்வதைப்போல் என்னை ரசிகர்கள் இன்னும் ‘கயல்’ ஆனந்தியாகவே பார்ப்பதில் எனக்கு ஆனந்தம்தான். அதேசமயம், கமலியும் ஜோவும்கூட என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான்.

‘நீங்கள் திருமணம் செய்துகொண்டதை நம்பமாட்டோம். பொய் சொல்லாதீர்கள்!’ என்று உங்களது ரசிகர்கள் ‘இன்ஸ்டா’வில் வந்து உருகினார்களே..?

ஆமாம்! எனக்கு மகனும் பிறந்துவிட்டான். கணவரின் பெயர் சாக்ரடீஸ் என்பதால், மகனுக்கும் கிரேக்க தத்துவ ஞானியான பிளாட்டோவின் பெயரை வைக்க ஆசைப்பட்டார். ‘பிளாட்டோ நன்மாறன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம். எனக்குக் கல்யாணம் ஆனவள் என்கிற உணர்வையே என் கணவர் வீட்டார் கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் ஒரு பெண் போல் என்னை அன்பாக, பாசமாக நடத்துகிறார்கள். எனது யோசனைகளை மதிக்கிறார்கள். நானும் என்னை ஒரு செலிப்ரட்டி என்றோ... நட்சத்திரம் என்றோ எண்ணிக் கொள்வதில்லை. ரசிகர்களில் ஒருத்தியைப்போல் அவர்கள் வீட்டுப் பெண்போல் இருக்கவே விரும்புகிறேன்.

எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்பதை தமிழ், தெலுங்கு சினிமா இயக்குநர்களும் கூட நம்பத் தயாராக இல்லை. எப்போதும்போல் எனக்கு சிறந்த கதாபாத்திரங்களைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதற்கு கைமாறாக, அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் கண்ணியத்தையும் நல்ல நடிப்பையும் எனது கதாபாத்திரங்கள் வழியாகக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

‘டைட்டானிக்’ படத்தில் என்ன கதாபாத்திரம் ஏற்றுள்ளீர்கள்?

எம்.பி.ஏ., முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தின் அட்மின் அதிகாரியாகப் பொறுப்பில் இருக்கிறேன். அப்போது, என்னுடன் கல்லூரியில் படித்த கலையரசனை மீண்டும் சந்திப்பது போன்ற கேரக்டர். கல்லூரியில் போட்ட சண்டையை மீண்டும் தொடர்கிறோம். நானும் கலையரசனும் போடும் சண்டைகளை ஆடியன்ஸ் ரொம்பவே ரசிப்பார்கள். அவ்வளவு ரியல் லைஃப் காமெடி படத்தில் உள்ளது.

முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடிப் படம். ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் முன்பு, வசனங்களைப் படித்துக்காட்டும்போதே மொத்த டீமும் விழுந்து விழுந்து சிரித்தோம். அதையேதான் திரையரங்குகளிலும் எதிர்பார்க்கிறோம். இந்தப் படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு முதல் முறையாக நடனமாடியிருக்கிறேன். ஆனால், அது நாகரிகமான நடன அசைவுகளுடன் இருக்கும். கலையரசன் சீரியஸ் ரோல்களில் அதிகம் நடித்தவர். இதில் என்னுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.

‘பரியேறும் பெருமாள்’ பரியனையும் ஜோவையும் தமிழ் ரசிகர்கள் மறக்க விரும்பவில்லை. இந்த ஜோடி ‘யூகி’ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறதே..?

இந்தப் படத்தில் நானும் கதிரும் நடிக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், இதில் நான் அவருக்கு காதலியாகவோ ஜோடியாகவோ நடிக்கவில்லை. இந்தப் படம் சோஷியல் த்ரில்லராக உருவாகி வருகிறது. இது தவிர ‘அலாவுதீனும் அற்புதக் கேமராவும்’ உட்பட 7 படங்களில் நடித்து முடித்துள்ளேன். இன்னும் ஐந்துக்கும் அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஒரு நகைக்கடை அதிபர் என்று செய்திகள் வெளியானதே... அவ்வளவு சம்பளம் உங்களுக்குக் கொடுக்கிறார்களா?

(சிரிக்கிறார்). நகைக்கடை வைக்கிற அளவுக்கு சம்மளம் வாங்க வேண்டும் என்று எனக்கும் ஆசைதான். ஆனால், நான் எனது முதலீட்டை அப்பாவிடம் கொடுப்பேன். அவர்தான் நகைக்கடை அதிபர். “படம் தயாரிக்க வரட்டுமா மகளே” என்றார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன். எப்போதுமே நமக்கு தெரியாத தொழிலில் இறங்கக்கூடாது அல்லவா?

ஒரு கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருப்பது அல்லது அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குநர் கேட்பதை நடித்துக் கொடுப்பது இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறதா?

நிச்சயமாக வேறுபாடு உண்டு. பிரபு சாலமன் சார், தனக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். நான் கதாபாத்திரமாக உணர்ந்து ஒன்றைச் செய்தால்... “நான் உருவாக்கிய ‘கயல்’ இப்படிச் செய்யமாட்டா... அவ இன்னும் ரொம்பக் கீழ. ரொம்ப சாமனியப் பொண்ணு” என்று சொல்வார். அவரைப் போன்றவர்களிடம் இயக்குநரின் நடிகராக இருந்துவிடுவதே சரி. வெற்றிமாறன் சார், “இந்தக் கேரக்டரை நீங்க மைண்ட்ல எப்படிக் கற்பனை பண்ணியிருக்கீங்களோ அப்படியே ரிப்ளக்ட் பண்ணுங்க” என்பார். இப்படி இயக்குநருக்கு இயக்குநர் நாம் மாறுபட வேண்டியிருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in