`ஒருவன், வேறொருவனாக மாறுவது நடிப்பில் சாத்தியமாகிறது’: கவிதா பாரதி

`ஒருவன், வேறொருவனாக மாறுவது நடிப்பில் சாத்தியமாகிறது’: கவிதா பாரதி

``ஒருவன், வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவனாக வாழ்வது நடிப்பில் சாத்தியமாகிறது'' என்று இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதி தெரிவித்தார்.

சின்னத்திரைத் தொடர்களை இயக்கிய வந்த கவிதா பாரதி, இப்போது முழு நேர நடிகராக மாறியிருக்கிறார். அருவி, கள்ளப்படம், படைவீரன், ராட்சசி, ரைட்டர், வீரமே வாகை சூடும் உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், சிறந்த படைப்பாளியும் கூட.

அவர் கூறியதாவது:

``படம் இயக்குவதற்காக சினிமாவுக்கு வந்தவன்தான் நான். சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. ராதிகாவின் ‘சித்தி’ தொடரில் நண்பர் ராஜ்பிரபுவுடன் இணைந்து எழுதிய வசனம் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சில தொடர்களுக்கு வசனம் எழுதினேன். சில தொடர்களை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதி ராஜாவிடம் இருந்து வந்தவன் என்பதால், இயக்கும்போது சில காட்சிகளை நடித்துக் காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அதனால் நடிப்பின் மீது ஆர்வம் அதிகமானது.

ஒருவன், வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவனாக, கோபக்காரனாக, காமெடியனாக, கொடுமையானவனாக வாழ்வது நடிப்பில் சாத்தியமாகிறது. என்னை வேறொருவனாக மாற்றிப் பார்ப்பதும், மாறிப் பார்ப்பதும் அவனைத் தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்ப்பதும் பிடித்திருக்கிறது. அதனால் நடிப்பை இன்னும் அதிகம் நேசிக்கிறேன். நடிக்கச் செல்லும் இடங்களில், என்னையும் ஓர் இயக்குநராக, நண்பராக பார்ப்பதால் சுதந்திரமாக நடிக்க முடிகிறது.

இப்போது ’பீட்ஸா 3’, ’சலூன்’, ’பம்பர்’ உட்பட சில படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படங்களுக்குப் பிறகு இன்னும் கவனிக்கப்படுவேன் என்று நம்புகிறேன். இதற்கிடையே படம் இயக்குவதற்கான முயற்சியும் இருக்கிறது. அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு கவிதா பாரதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.