Remebering Kannadasan| எம்.ஜி.ஆருக்கு அமைத்துக் கொடுத்த அரசியல் அஸ்திவாரம்!

கவிஞர் கண்ணதாசன்...
கவிஞர் கண்ணதாசன்...

இன்று, காலத்தால் அழியாப் புகழ் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் 42வது நினைவுதினம். தன் பாடல் வரிகள் மூலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் குறித்தான நினைவுகள்...

* சிறுகூடல்பட்டியில் சாத்தனாருக்கும் விசாலாட்சி தம்பதியருக்கும் எட்டாவது மகனாகப் பிறந்தவரின் இளைமைக்காலம் அந்த ஊரில் தான் கழிந்தது.

ஏட்டுக்கல்வி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே எட்டியது. ஆனால், ஏட்டுக்கல்விக்கும்,அனுபவ அறிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதி தன் ஞானத்தை நிரூபித்தார் கவிஞர் கண்ணதாசன்.

* திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதற்கு முன்பு சென்னை வந்து, கிடைத்த வேலைகள் எல்லாம் செய்தார். ’கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்தில் ’கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்பதுதான் கண்ணதாசன் எழுதிய முதல் பாட்டு.

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன்...
எம்.ஜி.ஆர்., கண்ணதாசன்...

* ’புரட்சித் தலைவர்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் ஆட்சி அரசியலுக்‍கு, தன் பாடல்கள் மூலம் வலுவான அஸ்திவாரம் அமைத்தவர் கண்ணதாசன். ’உலகம் பிறந்தது எனக்‍காக’, ’அச்சம் என்பது மடமையடா’, ’நாடு அதை நாடு’, ’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’, ’ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே’ போன்ற பாடல்கள் நடிகர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிக்கற்களாக அமைந்தன.

* கவிஞர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், மேடைப் பேச்சாளர் போன்ற பன்முகம் கொண்ட கண்ணதாசனின் படைப்புகளில் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, ‘இயேசு காவியம்’, கண்ணதாசன் தன் வாழ்க்கைக் குறிப்பாக எழுதிய ‘வனவாசம்’ போன்றவை தமிழ் வாசகர்களுக்கு அவர் அளித்தக் கொடை. இவரது ‘சேரமான் காதலி’ நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.

கவிஞர் கண்ணதாசன்...
கவிஞர் கண்ணதாசன்...

* ’மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’, ‘பாவாடை தாவணியில்’ என காலம் கடந்தாலும் மனதில் நீங்காப் பாடல்களைக் கொடுத்த கண்ணதாசன் உடல்நலக்‍ குறைவு காரணமாக 1981ம் ஆண்டு அக்‍டோபர் மாதம் 17 ம் தேதி அமெரிக்‍காவின் சிகாகோ நகரில் தனது கடைசி சுவாசத்தை நிறுத்திக்‍ கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in