பான் இந்தியா நடிகையாவது எனது டார்கெட்!

’கதிர்’ பாவ்யா த்ரிகா பேட்டி
பாவ்யா த்ரிகா
பாவ்யா த்ரிகா

இரண்டு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியான ‘கதிர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் பாவ்யா த்ரிகா. கன்னடத்தில் ஏற்கெனவே ஒரு படம் நடித்து முடித்துவிட்ட இவர், விளம்பர உலகிலிருந்து திரைக்கு வந்திருக்கிறார். ‘க்யூட்’டானா நடிப்புக்காக பாராட்டப்படும் பாவ்யா, பல மொழிகள் பேசும் வித்தையைக் கற்றுவைத்திருக்கிறார். தமிழ், கன்னடத்தைக் கடந்து பான் இந்தியா நடிகை ஆகவேண்டும் என்ற கனவை தனக்குள்ளே தக்கவைத்திருக்கும் பாவ்யா காமதேனுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து…

உங்களைக் கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்களேன்…

அம்மாவும் அப்பாவும் டெல்லியின் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். நான் ஒரு பஞ்சாபி பெண். ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்தவள். அதனால், பஞ்சாபி என்பதையே மறந்துபோய், ஒரு தமிழ்ப் பெண்ணாகத்தான் வளர்ந்திருக்கிறேன். எனக்கு சிந்தாதிரிப்பேட்டை ஃபிஷ் மார்க்கெட், மெரினா பீச், சத்யம் தியேட்டர், தாஜ் கோரமண்டல் டிஸ்கோத்தே என சென்னையில் தெரியாத இடமில்லை. அந்த வகையில் என்னை சென்னைப் பெண் என்றும் சொல்லலாம். ஸ்கூலிங் முடித்தபிறகு சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் மீடியா ஸ்டடீஸ் படித்து முடித்திருக்கிறேன். எனது சீனியர்கள் பலர், டிவியிலும் சினிமாவிலும் ஏற்கெனவே கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மீடியா ஸ்டடி படித்தீர்கள் சரி... சினிமாவில் ஹீரோயினாக எப்படி..?

மாடலிங், சினிமா என்று வர நினைக்கும் பெண்களுக்கு அப்பாக்கள்தான் வீட்டில் முதல் எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். எனது விஷயத்தில் அப்படியே தலைகீழ்! நான் அப்பாவால்தான் மீடியாவுக்குள் வந்தேன். அப்பா ராஜேஷ் த்ரிகா ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரி. பணி நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தவர், பணியுடன் மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் இருந்தார். ஆனால், வேலை பளு அவருக்கு வழிவிடவில்லை. என்றாலும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் சமந்தாவுக்கு அப்பாவாக, ‘விஸ்வரூபம்’ படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதியாக என சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மற்றும் விளம்பரப் படங்கள் பலவற்றில் நடித்தார்.

இதையெல்லாம் சிறுவயது முதல் பார்த்து வந்த எனக்கு கதாநாயகி ஆகவேண்டும் என்ற ஆவல் உருவானது. அதைப் புரிந்துகொண்ட அப்பா, அவரது சினிமா கனவை என் வழியாக நிறைவேற்றிப் பார்க்க விரும்பினார். நான் சிறுமியாக இருக்கும்போதே என்னைப் விளம்பரப் படங்களில் மாடலிங் செய்ய வைத்தார். நானும் அவரது கனவை நான் நிறைவேற்றுவது என்று முடிவு செய்தேன். 8 வயது சிறுமியாக ஒரு வார இதழின் ‘பெஸ்ட்டு கண்ணா... பெஸ்ட்’ விளம்பரத்தில் நடித்து பாப்புலர் ஆனேன். பிறகு, அடையார் ஆனந்தபவன் விளம்பரம். இப்படி நிறைய.

வளர்ந்ததும் டிக் டாக் செய்யத் தொடங்கினேன். அதில் சின்னச் சின்ன வீடியோக்கள் போட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு எனக்கு முதலில் கன்னட சினிமாவிலிருந்து அழைப்பு வந்தது. ‘டாலி’ என்கிற கன்னடப் படத்தில் தனஞ்ஜெயாவுக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டேன். அந்தப் படமும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ‘கதிர்’ படத்தின் கதை பற்றி என் தோழியின் வழியாகக் கேள்விப்பட்டு, அப்படத்தின் இயக்குநர் தினேஷ் பழனிவேலைச் சந்தித்து வாய்ப்புக் கேட்டேன். அவர் “உங்களுக்கு தமிழ் தெரியுமா?” என்று கேட்டு ஆடிஷன் செய்து தேர்வு செய்தார். இப்படித்தான் ‘கதிர்’ படத்துக்குத் தேர்வானேன்.

இந்தப் படத்தில் பிரெஞ்சு மொழி பேசி நடித்திருக்கிறீர்களே..?

கல்லூரியில் தன்னைச் சுற்றிவரும் ஹீரோவை சுற்றலில் விடுவதற்காக என்னுடைய கேரக்டர் பிரெஞ்சு மொழி பேசுவதுபோல காட்சி அமைத்திருந்தார் இயக்குநர். எனக்கோ சுத்தமாக பிரெஞ்சு தெரியாது. ஆனால், படத்தின் ஹீரோ வெங்கடேஷ் பிரெஞ்சு மொழியில் பிய்த்து உதறினார். அவர்தான் எனக்கு பிரெஞ்சு டயலாக்குகளையும், உச்சரிப்பையும் அழகாகச் சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தபிறகு இப்போது ‘பேசிக் பிரெஞ்ச் கோர்ஸ்’ படித்து முடித்துவிட்டேன். தாய்மொழி பஞ்சாபியாக இருந்தாலும் பிரெஞ்சு பேசும்போது வரும் ஓசை அவ்வளவு அழகாக இருக்கும். எனவே, அந்த மொழியை முழுவதுமாகக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு தமிழ், கன்னடம், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலம் என இப்போது ஐந்து மொழிகள் தெரியும். விரைவில் தெலுங்குப் படத்தில் நடித்து அதையும் கற்றுக்கொள்வேன். ஒரு பான் இந்தியா நடிகை ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய டார்கெட்.

பஞ்சாபி சினிமா பார்ப்பதுண்டா?

ஓ… நிறையப் பார்ப்பேன். பஞ்சாபி ‘மெயின் ஸ்ட்ரீம்’ படங்களில் பாடல்களும், ஹுயூமரும் ரொம்பவே அதிகமாக இருக்கும். நடிகர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள். ஆக்‌ஷன் அதிகம் இருக்காது. இப்போது பஞ்சாபி சினிமாவில் பெண்களுக்கான முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. பஞ்சாபி படங்களையும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இருக்கிறேன்.

‘கதிர்’ படத்தில் நடித்த அனுவம் எப்படி?

முதல் படத்திலேயே இவ்வளவு ‘வெயிட்டேஜ்’ ஆன கேரக்டர் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டு பெண் கேரக்டர்களால் படத்தின் நாயகன் கதிர் தாக்கத்துக்கு உள்ளாவார். அதில் நான் ஒருத்தி. கொஞ்சம் ‘பப்ளினெஸ்’, கொஞ்சம் ‘சீரியஸ்’, கொஞ்சம் மிஸ்டரி என கலவையான குணாதிசயங்கள் கொண்ட எனது கேரக்டர் சிறப்பாக அமைந்துவிட்டது. ஹீரோ வெங்கடேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார். ‘காதலும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்’ என்பதுதான் படத்தோட ஒன்லைனர். படத்தை அனைவரும் தியேட்டர்ல போய் பார்க்கணும்னு கேட்டுக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in