‘ஜீ தமிழ்’ உடன் கரு.பழனியப்பன் கசப்பின் பின்னணி என்ன?

‘தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
கரு.பழனியப்பன்
கரு.பழனியப்பன்

’ஜீ தமிழ்’ தொலைக்காட்சியின் ’தமிழா தமிழா’ விவாத நிகழ்ச்சியிலிருந்து கசப்போடு விலகுவதாக, அதனை நெறியாள்கை செய்து வந்த இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரபலமான மக்கள் விவாத நிகழ்ச்சி ’நீயா நானா?’. இதன் பாதிப்பில் தொடங்கிய போதும், தனி அடையாளத்துடன் புகழ் பெற்றது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ’தமிழா தமிழா’ நிகழ்ச்சி.

சினிமா பின்புலம் கொண்ட கரு.பழனியப்பன் ‘பார்த்திபன் கனவு’, ’சிவப்பதிகாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். நடிகராகவும் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி படைப்புகளிலும் வலம் வந்திருக்கிறார். இந்த வகையில் திரையிலும், திரைக்கு பின்னாலும் புகழ் பெற்றிருந்த கரு.பழனியப்பனின் இன்னொரு முகம் ’தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் வெளிப்பட்டது.

’நீயா நானா’ போன்றில்லாது, சமூக நீதி உள்ளிட்ட திராவிட சித்தாந்தங்களையும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் வெளிப்படையாக பேசினார். மேடைகளில் திறன்மிக்க சொற்பொழிவாளராகவும் விளங்கியவர், அதே பாணியில் ஒளிவு மறைவின்றி பல சமூகக் கருத்துக்களையும் தனது விவாத நிகழ்ச்சிகளில் முன்வைத்தார்.

சில தருணங்களில் அவை சர்ச்சைக்கும் ஆளானது நடந்திருக்கிறது. சாதிக்கு எதிரான விவாதத்தின்போது, நிகழ்ச்சியின் பாதியில் மாற்றுக்கருத்துள்ளோர் விலகியதும், வெளியே வந்து விமர்சித்ததும் நடந்தது. எனினும், தன் போக்கில் கரு.பழனியப்பன் தொடர்ந்தார். தற்போது இந்த முரண்பாடுகளே அவரை தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறச் செய்திருக்கின்றன.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட 'தமிழா தமிழா' பயணம் இனிதே முடிவுக்கு வந்தது! சமூக நீதி , சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. உடன் நின்ற அனைவருக்கும் அன்பும், நன்றியும்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.

’சமூக நீதி , சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில்..’ என்று கரு.பழனியப்பன் பதிவு செய்திருப்பதே, அவரது விலகலுக்கான காரணத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறது. பாஜக பின்னணியிலான ஜீ குழுமத்தின் அங்கமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், கரு.பழனியப்பன் சந்தித்திருக்கும் கசப்பு எதிர்பார்த்ததே என்று, அவருடைய பதிவை பகிர்வோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

’எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம்’ என்று கரு.பழனியப்பன் சொல்லியிருப்பது, ’தமிழா தமிழா’ பாணியில் அவர் அடுத்தக்கட்டமாக தொடரப்போகும் மற்றொரு நிகழ்ச்சியை முன்னறிவித்திருக்கிறது. அது மற்றுமொரு தொலைக்காட்சியா அல்லது யூட்யூப் சானலா என்பது இனிமேல்தான் தெளிவாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in