திராவிட நாடு முழக்கமிட்ட கலைஞரின் ‘பராசக்தி’!

70 வருடங்களாகியும் இன்றும் மறக்க முடியாத அனல் வசனங்கள்
திராவிட நாடு முழக்கமிட்ட கலைஞரின் ‘பராசக்தி’!

எங்கெல்லாம் பேச முடியுமோ, எப்போதெல்லாம் பேச முடியுமோ... அப்போதெல்லாம் நாத்திகத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஆத்திகத்தின் உள்ளடி வேலைகளை வெளியே பறையடித்துத் தெரிவித்து வந்த காலகட்டம் அது. அப்படியான அறைகூவலுக்கு அட்டகாசமாய் ஒரு மேடை கிடைத்தது அல்லது அந்த மேடை மிக அருமையாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. அது... வெள்ளித்திரை மேடை. அந்தப் படம்... பராசக்தி!

Sri Sritharan

அதற்கு முன்பும் படங்கள் வந்திருக்கின்றன. அவை சுதந்திரத்தையும் தேசியத்தையும் உணர்த்துகிற படங்களாக இருந்தன. ஆனால், இங்கே... இந்த ‘பராசக்தி’யில், திராவிடம் ஓங்கி ஒலித்தது. ‘வாழ்க வாழ்கவே... எங்கள் திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்று டைட்டில் முடிந்ததும் வருகிற முதல் பாடலே நிமிர்ந்து உட்காரச் செய்திருக்கும், ரசிகர்களை! பிறகு, நிமிர்ந்து நின்றார்கள் தமிழர்கள்!

கோயிலையும் கோயிலில் நடக்கிற ஊழல்களையும் அர்ச்சகரின் அத்துமீறல்களையும் ஆன்மிகம் பேசுகிறவரின் எல்லைமீறல்களையும் பொளேர் பொளேர் என முகத்தில் அறைந்து சொல்லும் இந்தப் படத்திற்கு, ‘பராசக்தி’ என்று பெயர் வைத்து, ஆன்மிகக் கூட்டத்தை உள்ளே இழுத்ததுதான் முதல் வெற்றியாக இருக்கும்.

உண்மையில் இப்படியொரு வெற்றி வரும் என்று தயாரிப்புத் தரப்பில் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் இந்தப் படம் என்னவோ செய்யப்போகிறது என்பதை மட்டும் உணர்ந்தார்கள். அதற்குக் காரணம்... குத்தீட்டி வசனங்கள். அந்தக் குத்தீட்டியின் முனையில் இன்னும் கூர் செய்யப்பட்ட விதமாக ஏற்ற இறக்கத்துடன் கர்ஜித்து ஓலமிட்டு உலுக்கியெடுத்த குரல். இரண்டும் கைசேர்ந்து, இரண்டறக் கலந்து, மும்மடங்கு வசூல் சாதனை செய்து, நாலாதிசையெங்கும் படம் குறித்த பேச்சு எதிரொலித்துக்கொண்டே இருந்தது. இதுவும் அப்போதைய ஆகப்பெரும் சாதனைதான்!

சீனப் போர் நடந்த காலம். பர்மாவின் ரங்கூனில் அண்ணன்கள் இருக்க, அப்பாவும் தங்கையும் மதுரையில் இருக்க, அவளின் திருமணத்திற்குக் கூட குடும்பமாகக் கிளம்பி வர முடியாத நிலைமை. எங்கோ நடக்கிற ஒரு விஷயம், எங்கெங்கோ பட்டு, அதன் எதிரொலியாக யாருக்கெல்லாமோ, என்னவெல்லாமோ நடக்கிற சமூக அவலத்தை அப்படியே தோலுரித்துக் காட்டி, பார்ப்பவர்களின் முதுகுத்தோலில் சூட்டை இழுத்த ‘பராசக்தி’ சக்தி மிக்க சினிமாக்களில் தலையாயது என்றே சொல்ல வேண்டும்.

’கடல் தண்ணீர் ஏன் உப்புக் கரிக்கிறது தெரியுமா? இங்கிருந்து அயல்நாடு சென்றவர்கள். எப்போது தாய்நாடு திரும்புவோம் என்று அழுது அழுது அந்தக் கண்ணீரால் கடல் நீர் உப்புக் கரிக்கிறது’ என்றொரு வசனம்.

சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என அண்ணன் தம்பிகள். ‘கப்பல்ல எத்தனை டிக்கெட் கேட்டீங்க... நாலு சார்... அவ்ளோ கிடைக்காதே. ப்ளீஸ் சார். 300 சீட்தானே இருக்கு. ப்ளீஸ் சார். குடும்பத்துக்கு ஒரு டிக்கெட்தான் தர முடியும். ப்ளீஸ் சார். ‘பெரிய பாரிஸ்டர். ஆனா வார்த்தைக்கு வார்த்தை எத்தனை ப்ளீஸ்’ இதெல்லாம் அங்கங்கே, வித்தக வசனங்களால் நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற காட்சிகள். அதாவது சினிமா பாஷையில் சொன்னால், இதெல்லாம் டிரெய்லர்தான். மெயின் பிக்சர் பின்னாடி!

தங்கைக்குச் சிறப்பாக நடக்கிறது கல்யாணம். நல்ல கணவன். அன்பான அப்பா. ஆனால் அண்ணன்கள் ரங்கூனில். திரைக்கதையை கனகச்சிதமாக நகர்த்திக்கொண்டே போவதெல்லாம் அசாத்தியத் திறமை. ஒருபக்கம் ரங்கூனில் இருந்து அகதிகளாய் வரும் அண்ணன்களும் அண்ணியும். இன்னொரு பக்கம் குணசேகரன் சொந்த தேசத்தில் பெண்ணொருத்தியின் வலையில் சிக்கி, பணத்தையெல்லாம் இழந்து பைத்திய முகமூடி போட்டுக்கொள்ள, குழந்தையைப் பெற்றெடுத்த கையுடன் விபத்தில் கணவனையும் அந்த அதிர்ச்சியில் தந்தையையும் கல்யாணக் கடனால் வீட்டையும் இழந்து தங்கை இட்லிக் கடை வைக்க... மும்முனையில் இருந்தும் வாழ்வதற்கான யுத்தங்களையும் கற்புடனும் உண்மையுடனும் நேர்மையுடன் வாழ இயலாச் சோக அவலங்களையும் சொல்லிக்கொண்டே போகிற துணிச்சல், அந்தக் காலத்தில் ரொம்பவே புதுசுதான்!

’தெருமுனைல இட்லிக்கடை வைச்சுக்கோ. தமிழ்நாட்டில், தாலி அறுத்தவர்களுக்கு இட்லிக்கடைதானே தாசில் உத்தியோகம்’ எனும் வசனம் அத்தனைக் கூர்மையானது. தெருவில் தூங்கும் குணசேகரனை போலீஸ்காரர் தட்டி எழுப்புவார். ’ஏய் யாருடா நீ. என்ன முழிக்கிறே’ என்பார். ’தூங்கறவனை எழுப்பினா அவன் முழிக்காம என்ன செய்வான்’. ’நீ பிக்பாக்கெட்தானே?’, ‘நான் எம்ட்டி பாக்கெட்’ என்று சுளீர் வசனங்களா, குபீர் வசனங்களா என்று புரியாமலேயே கைத்தட்டிச் சிரித்தார்கள் ரசிகர்கள்

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த கொடை... பொக்கிஷம்... ’டிரெண்ட் செட்டிங்’ சினிமா... பராசக்தி. இந்தப் படத்தின் மூலமாக தமிழினத் தலைவர் என்று போற்றும் அளவுக்கு கலைஞர் கிடைத்தார். அவரின் புத்திக்கூர்மையால் விளைந்த கூர்மையான வசனங்கள் படத்தின் வெற்றிக்கு வித்திட்டன. அடுத்தது... குணசேகரன். அந்த ஒல்லி உடம்பும் உருட்டுவிழியுமாக, சிவாஜி கணேசன் பின்னியிருப்பார். முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.

இதற்குள்ளும் இருக்கிறது சுவாரசியம். பெருமாள் முதலியார் எனும் தயாரிப்பாளர். நேஷனல் பிக்சர்ஸ் என்பது நிறுவனப் பெயர். நாடகத்தில் பார்த்த சிவாஜி கணேசனை ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் நடந்துகொண்டிருக்க, ஒருநாள், படத்துக்கு பைனான்ஸ் தயாரிப்பாளரான ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் வர, வெடவெடவென இருக்கிற சிவாஜியைப் பார்த்ததும் வெலவெலத்துப் போனார். ’யாரு அந்தப் பையன். அந்தப் பையனுக்குப் பணம் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிச்சிருங்க. ரொம்ப ஒல்லியா இருக்கான். டி.ஆர்.மகாலிங்கத்தைப் போடுங்க’ என்று செட்டியார் சொல்ல, அதிர்ந்து போனார் சிவாஜி. கலைஞரும்தான். பிறகு பெருமாள் முதலியார் அண்ணாவிடம் சொல்லி கருத்து கேட்க, ‘இந்தப் பையனையே போடுங்க. மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுப்பான்’ என்று அண்ணா சொன்னார். மாறாத உறுதியுடன் சிவாஜியையே நடிக்க வைத்தார் பெருமாள் முதலியார்.

இங்கேயும் இன்னொரு கொசுறுத் தகவல். தன் வாழ்க்கைக்கு வித்திட்ட பெருமாள் முதலியாருக்கு நன்றி சொல்லும் விதமாக, ஒவ்வொரு பொங்கலுக்கும் பெருமாள் முதலியார் வீட்டுக்குச் சென்று, அவர் குடும்பத்தாருக்குப் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி, குடும்பத்துடன் நமஸ்கரித்து, நன்றி சொல்லிவந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

’ஓ... ரசிக்கும் சீமானே’, ’ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே, முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே, காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே’, ’கா கா கா...’, ’புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே...’ என்று பாடல்களெல்லாம் ஹிட்டடித்தன. சுதர்சனத்தின் இசை, சோகத்தையும் யுத்தச் சத்த பயங்கரங்களையும் பின்னணியில் கொண்டுவந்த விதம் பாராட்டப்பட்டது.

1952-ல் வெளியான படம் ‘பராசக்தி’. ஒரு தீபாவளித் திருநாளில் வெளியானதாகப் படித்த நினைவு. படத்தில் நடித்த பலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைந்தது. திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதன் எதிரொலி... எதிரொளி என்றே கொண்டாடினார்கள்.

சிவாஜி கணேசன், சகஸ்ரநாமம், எஸ்.எஸ்.ஆர்., ஸ்ரீரஞ்சனி, பண்டரிபாய், வி.கே.ராமசாமி என மிகச்சில கேரக்டர்களைக் கொண்டு, கதையாலும் (மூலக்கதை: எம்.எஸ்.பாலசுந்தரம்), திரைக்கதை வசனத்தாலும் ஆகச்சிறந்த நடிப்பாலும் மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிற்கிறாள் ’பராசக்தி’.

‘என்ன... அன்னையா பேசுவது?’

‘முட்டாள்... அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?’

’கோயில் கூடாது என்று சொல்லவில்லை. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதே என் வருத்தம்’.

நெருப்புப்பொறியென தெறித்து விழுந்த அந்த வசனங்கள்... எங்கே திரையில் இருந்து அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்து விழுமோ என நினைக்கும் அளவுக்கு, சூடு கிளப்பின கலைஞரின் வசனக் கங்குகள்.

கால்களை இழந்த எஸ்.எஸ்.ஆர். பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து சோஷலிஸம் பேசும் காட்சிகள் அபாரம். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு சங்கம் என அந்தக் காலத்தில் பேசப்பட்டது, இன்றைக்கும் அப்படியே கையேந்தி நிற்கிறது. பெண்ணைத் துரத்தித் துரத்தி வருகிற காமுகக் கூட்டத்தின் ஆணாதிக்க உலகை, அப்போதே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் விதமும் அற்புதம்.

நீதிபதியாக கவியரசு கண்ணதாசன் அமர்ந்திருக்க, ’ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்’ என்று அவருக்கு முன்னே சிவாஜி கணேசன், பேசிய ஏற்ற இறக்க மாடுலேஷன் வசனங்களைக் கேட்டுத்தான் ரீப்பீடட் ஆடியன்ஸாக வந்து, பிரம்மாண்ட வெற்றியை வழங்கினார்கள் ரசிகர்கள். அதுமட்டுமா? நடிக்கத் தெரியுமா என்று கேட்டால் சிவாஜியைப் போலவும் ’வசனம் பேசு பாக்கலாம்’ என்றால், ’பராசக்தி’யில் கலைஞரின் வசனத்தையும் அதை சிவாஜி பேசுவதையும் பேசிக்காட்டி, நடித்துக் காட்டி, நடிப்பு சான்ஸ் வாங்கிய நடிகர்கள் பலர் உண்டு.

1952-ம் ஆண்டு வந்த படம். 70 வருடங்களாகிவிட்டன. தமிழ் சினிமாவை தன் எழுத்துகளால் வளர்த்தெடுத்தார்; வார்த்தெடுத்தார் கலைஞர். இத்தனை வருடங்கள் கழித்தும் பராசக்தி, மக்கள் மனங்களில் அப்படியே நிற்கிறது. காரணம்... கலைஞரின் சக்தி மிக்க எழுத்து!

சினிமாவிலும் அரசியலிலும் ஒரே சமயத்தில் அடுத்தடுத்து முன்னேறினார் கலைஞர் மு.கருணாநிதி. ஆக, திராவிட ஆட்சி தமிழகத்தில் மலருவதற்கான விதை... பராசக்தி!

(மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in