`வில்லனாக நடிப்பது எனக்கு பிடிக்கும்’: பாடல் வெளியீட்டு விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

`வில்லனாக நடிப்பது எனக்கு பிடிக்கும்’: பாடல் வெளியீட்டு விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

``வில்லனாக நடிப்பது தனக்கு அதிகம் பிடிக்கும்'' என்று இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் தெரிவித்தார்.

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்கும் படம் ’நதி’. கே.தாமரைசெல்வன் இயக்கும் இந்தப் படத்தில் கயல் ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். மற்றும் கரு.பழனியப்பன், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். லக்ஷ்மி சரவணகுமார் வசனம் எழுதியுள்ளார். வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சென்னையில் வெளியிடப்பட்டது.

இதில், நடிகரும் இயக்குநருமான கரு.பழனியப்பன் பேசும்போது, “இந்தப் படத்தில், வில்லனாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கேட்டார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும். இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாக இந்தப் படத்தை உருவாக்கி முடித்துள்ளார். படத்தின் இடைவேளை நிச்சயமாக ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்றார்.

இயக்குநர் தாமரை செல்வன் கூறும்போது, “இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, புது அனுபவமாக இருந்தது. கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in