
கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம், 'சர்தார்'. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஒரு கேரக்டரில் போலீஸாகவும் மற்றொரு கேரக்டரில் வயதானவராகவும் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சிம்ரன், ஷங்கி பாண்டே, லைலா, முரளி ஷர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பின்னான டிஜிட்டல் உரிமையை, ஆஹா தமிழ் ஓடிடி தளம் ரூ.20 கோடிக்கு பெற்றுள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.