கலக்கும் 'காந்தாரா': கலங்கும் பாலிவுட்

கலக்கும் 'காந்தாரா': கலங்கும் பாலிவுட்

தெற்கிலிருந்து வரும் திரைப்படங்களால் பாலிவுட் திணரும் போக்கு தொடர்கிறது. கன்னட திரைப்படமான காந்தாரா, புதிய பாலிவுட் திரைப்படங்களின் வருகைக்கு ஈடுகொடுத்து மூன்றாவது வாரமாக வசூலில் வாரிக்குவிக்கிறது.

கரோனாவுக்கு பிந்தைய திரையரங்க வெளியீடுகளில் பாலிவுட் திரைப்படங்கள் சோபிக்க வாய்ப்பின்றி தடுமாறி வருகின்றன. இதற்கு காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னக திரைப்படங்கள் இந்தியில் படையெடுத்ததை சொல்கிறார்கள். புஷ்பா, கேஜிஎஃப்-2, விக்ரம், பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படங்களின் வரிசையில், ஆர்ப்பாட்டமின்றி வெளியான காந்தாரா என்ற கன்னட திரைப்படமும் சேர்ந்திருக்கிறது.

முந்தைய திரைப்படங்களின் வெளியீடு பான் இந்தியா என்ற அறிவிப்போடு வந்தது மட்டுமன்றி, அவற்றின் பட்ஜெட் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சந்தை ஈர்ப்பும் வெற்றிக்கு காரணமாயின. ஆனால் இந்த சுவடுகள் ஏதுமின்றி வெளியான காந்தாரா அதன் உள்ளடக்கத்துக்காக பான் இந்தியா திரைப்படமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதர தென்னக மொழிகளில் கிடைத்த வரவேற்பை அடுத்து காந்தாரா இந்தி பேசவும் ஏற்பாடானது. ஆனால் வெள்ளிதோறும் வெளியாகும் புதிய இந்தி திரைப்படங்களுக்கு ஈடுகொடுத்து காந்தாரா 3 வாரங்களாக வசூலில் மேஜிக் நிகழ்த்தும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் முதலிரண்டு வாரங்களைவிட காந்தாராவின் மூன்றாவது வார வசூல் உயர்வு கண்டிருப்பதும் பாலிவுட்டில் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

இந்த வெள்ளியன்று வெளியான எதிர்பார்ப்புக்குரிய 3 இந்தி திரைப்படங்கள் காந்தாராவிடம் புறமுதுகிட்டுள்ளன. கத்ரீனா கைஃப் நடிப்பில்ஹாரர், காமெடி கலந்த ’ஃபோன் பூத்’, ஜான்வி கபூர் நடித்த ’மிலி’, ஹூமா குரேஷி- சோனாக்‌ஷி சின்கா நடித்த ’டபுள் எக்ஸ்எல்’ ஆகிய 3 இந்தி படங்களின் ஓப்பனிங்கும் காந்தாராவின் 3ஆம் வாரத்து வசூலுக்கு பின்தங்கியுள்ளன. இந்த மூன்றில் ’போன் ஃபூத்’ திரைப்படம் காந்தாராவுக்கு அடுத்த நிலையில் சுமாரான வசூல் தந்தபோதும், இதர 2 திரைப்படங்களும் திணறலோடு தொடங்கி இருக்கின்றன.

வடக்கை தாக்கும் தென்னக திரைப்படங்களால், பாலிவுட் படவுலகம் தெற்கை தழுவும் போக்கும் அதிகரித்துள்ளது. ஜான்வி கபூரின் மிலி, மலையாளத்தில் வெளியான ’ஹெலன்’ திரைப்படத்தின் இந்தி ஆக்கமாகும். இதற்கு முந்தைய ஜான்வி கபூரின் ’குட்லக் ஜெர்ரி’ திரைப்படமும், நயன்தாரா நடிப்பில் தமிழில் வெளியான ’கோலமாவு கோகிலா’வின் ரீமேக் ஆகும்.

பாலிவுட்டின் பரிதவிப்பான இந்த சூழல், தென்னக திரைக்கலைஞர்களுக்கு ஆச்சரியத்துடன் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு வெளியே இந்திய திரைப்படங்கள் என்றாலே இந்தி படங்கள் என்றிருக்கும் சமகாலத்தில், தென்னக கலைஞர்கள் அதனை உடைத்திருப்பது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும். மேலும் காந்தாரா போன்ற பட்ஜெட் குறைவான, பெரிய நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படங்கள் பான் இந்தியா வசூலில் சாதித்து வருவதும் ஒட்டுமொத்தமாய் இந்திய சினிமாவின் ஆரோக்கிய போக்கினை பிரதிபலிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in