நன்றி கெட்டவரா ராஷ்மிகா?: கடுப்பில் கன்னட திரையுலகம்

நன்றி கெட்டவரா ராஷ்மிகா?: கடுப்பில் கன்னட திரையுலகம்

வளர்த்துவிட்ட கன்னட திரையுலகை மதிக்காத ராஷ்மிகா மந்தனாவுக்கு, தடை விதிக்கக்கோரி கன்னட சினிமாவில் குரல்கள் எழுந்துள்ளன. இதனால் அங்கு வெளியாக உள்ள ’வாரிசு’ மற்றும் ’புஷ்பா-2’ உள்ளிட்ட மெகா பட்ஜெட் திரைப்படங்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளன.

குறுகிய காலத்தில் அபரிமிதமான திரை வளர்ச்சியை எட்டியவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் சாதாரணமாக அறிமுகமானவர், படிப்படியாக தெலுங்கு, தமிழ் என வளர்ந்து தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். ’நேஷனல் கிரஷ்’ என்று இந்திய இளசுகள் அவரை கொண்டாடுவதின் பின்னணியில் ராஷ்மிகாவின் அழகு, நடிப்பு, மெனக்கிடல் ஆகியவற்றுக்கு அப்பால் அவரை வளர்த்துவிட்ட கன்னட சினிமாவும் இருக்கிறது. இந்திய சினிமாவில் உச்சம் தொடும் இறுமாப்பில் ராஷ்மிகா இதனை மறந்துவிட்டார் என்று கன்னட திரைத்துறையினர் இப்போது பொருமுகிறார்கள்.

இந்தியில் ராஷ்மிகா
இந்தியில் ராஷ்மிகா

அண்மையில் காட்சி ஊடகத்துக்கான பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா, தனது பின்னணியை நினைவுகூரும் இடத்தில் அறிமுகப்படுத்திய கன்னட சினிமா நிறுவனத்தை கவனமாக தவிர்த்தாராம். அவர் அறிமுகமான ’கிரிக் பார்ட்டி’ திரைப்படம் குறித்தும், அதனை எழுதி, தயாரித்து, நடித்த ரக்‌ஷித் ஷெட்டி எதுவும் குறிப்பிடாது கடந்திருக்கிறார். ராஷ்மிகாவின் இந்த செயல் கன்னட திரையுலகை உசுப்பி விட்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி என்று மெகா பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் ராஷ்மிகா, கன்னட வாய்ப்புகளை தவிர்ப்பதாக ஏற்கனவே அவர் மீது அங்கே குற்றச்சாட்டு உண்டு. அவரது வளர்ச்சி கண்டு பொறுக்காதோரும் அதிகம். இவர்கள் ராஷ்மிகாவுக்கு எதிரான வாய்ப்பு கிடைத்ததும் கச்சிதமாக பிடித்துக்கொண்டார்கள்.

முதல் திரைப்படம் குறித்து பொதுவில் பகிராது போனதற்கு, ராஷ்மிகாவுக்கு வேறு காரணங்களும் இருந்திருக்கலாம். அவற்றில் முக்கியமானது ரக்‌ஷித் ஷெட்டி உடனான முறிந்த காதல். ’கீத கோவிந்தம்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஷ்மிகாவே எதிர்பார்த்திராத வளர்ச்சியும் வாய்ப்பும் அவரை சூழ்ந்தன. இதனால் ரக்‌ஷித் ஷெட்டியையும், அவருடனான காதலையும் கழற்றி விட்டார் ராஷ்மிகா. அவை குறித்த சங்கடங்களை தவிர்க்கும் பொருட்டு, தனக்கு முதல் வாய்ப்பளித்த பட நிறுவனம் குறித்த உரையாடலை அவர் தவிர்த்திருக்கலாம். ராஷ்மிகாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இப்படித்தான் கச்சைக்கட்டுகிறார்கள். ஆனால் இதெல்லாம் கன்னட சினிமாவில் நிந்தனைக்குரியது. எனவே படவுலகினர் பொங்கி எழுதிருக்கின்றனர்.

’நன்றி கெட்ட ராஷ்மிகாவுக்கும் அவரது படங்களுக்கும் கன்னடத்தில் தடை விதிக்க வேண்டும்’ என்ற ஆட்சேப குரல்கள் அங்கே எழுந்திருக்கின்றன. இதற்கு வலு சேர்ப்பது போல ராஷ்மிகாவின் திரைப்படங்களை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதனால் விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா-2’ ஆகிய திரைப்படங்களை அங்கே திரையிடுவதில் சிக்கல்களுக்கான சாத்தியங்கள் தட்டுப்படுகின்றன. மிகப்பெரும் தயாரிப்பு நிறுவ னங்கள், பெரும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை மீறி ராஷ்மிகாவுக்காக திரைப்படங்களுக்கு தடை விதிப்பது நடைமுறைக்கு ஆகாது என்ற குரல்களும் கேட்கின்றன. ஆனால் தடை விதிக்க வேண்டும் அல்லது அதற்கொப்ப ஏதேனும் ஒரு வகையில் கன்னட எதிர்ப்பை நிறுவ வேண்டும் என்பதில் அங்கே தீர்மானமாக இருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in