
நீதிபதி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் சேத்தன் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார். சமூக ஆர்வலரான இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ராகேஷ் என்பவருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், ஜாமீன் வழங்கியது பற்றி கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந் நிலையில் கடந்த 16- ஆம் தேதி அந்த பதிவை ரீட்வீட் செய்த சேத்தன் குமார், ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கூறியது பற்றி அவதூறு கருத்துகளை பதிவிட்டார். இதையடுத்து பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசார் தாமாக முன்வந்து சேத்தன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை துணை ஆணையர் அனுசேத், உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி சேத்தன் குமார் ஆத்திரமூட்டும் வகையில் ட்வீட் செய்துள்ளதால், அவரை கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சேத்தன் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதை அவர் மனைவி மேகா, சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆம் தேதியே ஜாமீன் வழங்கப்பட்டு விட்டாலும் தொழில்நுட்ப காரணங்களால் வெளியீட்டு உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை. திங்கட்கிழமை கிடைத்ததும் சேத்தன் குமார் வெளியே வருவார் என்று தெரிவித்துள்ளார்.