வெறும் 20 டிக்கெட்தான்: கங்கனா படம் மோசமான சாதனை

வெறும் 20 டிக்கெட்தான்: கங்கனா படம் மோசமான சாதனை

நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள படம், வசூலில் மோசமான சாதனையை படைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் தமிழில், தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர் ’தாக்கத்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். கங்கனாவுடன் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா, சாஸ்வதா சட்டர்ஜி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியானது.

ரஜ்னீஷ் கய் இயக்கிய இந்தப் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் ஏமாற்றத்தைத் தந்தது. இப்படி ஒரு மோசமான தோல்வியை எந்தப் படமும் சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ரசிகர்கள் கங்கனாவை சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வந்தனர். முதல் வாரத்தில் ரூ.10 கோடி வசூலை கூட ’தாக்கத்’ எட்டவில்லை. சுமார் ரூ.90 கோடி செலவில் இந்தப் படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படம் ரிலீஸான எட்டாவது நாளில் வெறும் 20 பேர் மட்டுமே இந்தியா முழுவதும் ’தாக்கத்’தைப் பார்த்துள்ளனர். இது மோசமான சாதனை என்று கூறப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் மோசமான தோல்வியைச் சந்தித்தாலும் ஓடிடி தளத்தில் படத்தை விற்கத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். அதன் மூலம் சில கோடிகள் கிடைக்கும் என்று நினைத்தனர். ஆனால், எந்த ஓடிடி தளமும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

ரிலீஸுக்கு முன்பே இந்தப் படத்தை ஓடிடி-க்கு விற்க முயன்றதாகவும் ’படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும், ரிலீஸுக்கு பிறகு படத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும்’ என்று நடிகை கங்கனா, தயாரிப்பாளரிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ஓடிடி தளங்களும் படத்தை வாங்காததால், பெரிய நஷ்டத்தை இந்தப் படம் சந்தித்துள்ளதாக பாலிவுட் கூறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in