நாடாளுமன்றத்தில் ‘எமர்ஜென்சி’?

காத்திருக்கும் கங்கனா
நாடாளுமன்றத்தில் ‘எமர்ஜென்சி’?

நாடாளுமன்றத்தில் தனது ’எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி கோரியிருக்கிறார் பாலிவுட் நட்சத்திரம் கங்கனா ரானவத். அவரது திரைப்படம் போலவே இந்த கோரிக்கையும் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறது.

பாலிவுட்டின் சர்ச்சைக்குரிய நட்சத்திரங்களில் கங்கனா ரானவத்தும் ஒருவர். தனது பாஜக ஆதரவு கருத்துக்கள் மற்றும் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் தொடர்பாக அரசியல் களத்தில் அதிகம் அடிபட்டு வருகிறார். அரசியலுக்கு அப்பால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டதில், ட்விட்டரின் தடைக்கும் ஆளாகி இருப்பவர் இவர்.

தமிழில் ’தாம்தூம்’ திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர், ஜெயலலிதாவின் பயோபிக் வலைத்தொடரான ’தலைவி’யிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த ’தக்கத்’ உள்ளிட்ட அண்மை திரைப்படங்கள் எதுவும் வர்த்தக ரீதியிலான வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அடுத்த திரைப்படத்தை ’எமர்ஜென்சி’ என்ற தலைப்பில் அவரே இயக்கி நடிக்கிறார்.

படத்தின் தலைப்பு மட்டுமன்றி இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா தோன்றுவதும், திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது. இந்திரா காந்தியின் பயோபிக் முயற்சி என்று சொல்லப்பட்டாலும், இந்திராவுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தே எமர்ஜென்சி தயாராவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தனது எமர்ஜென்சி திரைப்படத்துக்காக நாடாளுமன்ற வளாகத்தில் படப்பிடிப்புக்கு அனுமதிக்குமாறு மக்களவை செயலருக்கு படக்குழு சார்பில் கங்கனா கடிதம் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் மாண்புக்கும், பாதுகாப்புக்கும் உட்பட்டே புகைப்படம் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்படும் சூழலில், சினிமா படப்பிடிப்புக்கு கங்கனா அனுமதி கோரியிருப்பது விவாதங்களை எழுப்பியுள்ளது.

தனது அரசியல் செல்வாக்கால் அனுமதி பெறுவாரா அல்லது மக்களவையின் நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி மறுக்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in