கங்கனா
கங்கனா

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கங்கனாவுக்கு சம்மன்

அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக நடிகை கங்கனா ரனாவத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் ஒரு மூதாட்டி கலந்துகொண்ட புகைப்படம் அப்போது வெளியானது. அவர், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற, அதே மூதாட்டிதான் என கூறப்பட்டது.

நடிகை கங்கனா ரனாவத், அந்த மூதாட்டி கூலிக்கு போராடுபவர் என்றும் இந்த போராட்டத்துக்குக் கூலியாக ரூ.100 பெற்றுள்ளார் என ட்விட்டரில் தெரிவித்தார். இது சர்ச்சையானது. ஆனால் அந்த மூதாட்டி, தான் பஞ்சாப் மாநிலம் பகதூர்கர் பகுதியைச் சேர்ந்த மகிந்தர் கவுர் என்றும் ஷாகின் பாக் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மகிந்தர் கவுர், கங்கனா
மகிந்தர் கவுர், கங்கனா

’நடிகை கங்கனா மும்பையிலும் நான் பஞ்சாபிலும் இருக்கிறோம். எந்த அடிப்படையில் ரூ.100 வாங்கிக் கொண்டு போராடினேன் என அவர் சொன்னார்?’ என்று கேள்வி எழுப்பிய அந்த மூதாட்டி, கங்கனா, விவசாய வேலைகளை செய்ய முன்வந்தால், அவருக்கு ரூ.400 தரத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். பின்னர் அந்த ட்வீட்டை கங்கனா நீக்கினார்.

இதையடுத்து, கடந்த வருடம் ஜனவரி மாதம் கங்கனா மீது பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் மகிந்தர் கவுர் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏப்ரல் 19-ம் தேதி நேரில் ஆஜராக கங்கனாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in