’சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும்’ - சர்ச்சையைக் கிளப்பும் கங்கனா

’சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும்’ - சர்ச்சையைக் கிளப்பும் கங்கனா
கங்கனா ரனாவத்

சமஸ்கிருதத்தைத் தேசிய மொழியாக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது மொழிப் பிரச்சினையில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் சுதீப் விழா ஒன்றில் பேசும்போது, “இந்தி நமது தேசிய மொழி இல்லை” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன், “இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய்மொழி படங்களை இந்தியில் ஏன் டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி எப்போதும் நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்” என்று சொன்னார். இது சர்ச்சையானது. இதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சுதீப், அஜய் தேவ்கன் விவாதத்தில் இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

அஜய் தேவ்கன், சுதீப்
அஜய் தேவ்கன், சுதீப்

“பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு இது. அவரவர் மொழி குறித்து பெருமை கொள்வது நம் உரிமை. எப்படியிருந்தாலும் நம் நாட்டை கருத்தில் கொள்ளும்போது, அதை ஒன்றாக இணைக்க ஒரு மொழி தேவை. அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது இந்தி தேசியமொழியாக மாறியது. இந்தியை விட, தமிழ் பழமையானது என்று நீங்கள் சொன்னால், சமஸ்கிருதம் அதைவிட தொன்மையானது.

என் கருத்துப்படி சமஸ்கிருதம் தேசிய மொழியாக இருக்க வேண்டும். ஏனென்றால், கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி என இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்தே தோன்றின. இந்திக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை ஏன் தேசிய மொழியாக்கவில்லை என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. இந்தப் பிரச்சினையில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. மொழிகளை பற்றி பேசும்போது அதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இந்தியை மறுக்கிறீர்கள் என்றால், அரசியலமைப்பையும் மத்திய அரசையும் மறுக்கிறீர்கள்.

நம் நாட்டுக்குள்ளேயே இணைப்பு மொழியாக, ஆங்கிலத்தைதான் பயன்படுத்துகிறோம். அதுதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமா... அல்லது இந்தி, சமஸ்கிருதம், தமிழ் இருக்க வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும்.

அஜய் தேவ்கன் இந்தியை தேசிய மொழி என்று கூறியதில் தவறில்லை. அதே நேரம் சுதீப் சொன்னதிலும் தவறில்லை. அவர் உணர்வையும் புரிந்துகொள்கிறேன். கன்னடமும் தமிழும் இந்தியை விட பழமையானது என்று கூறினால், அதுவும் தவறில்லை. தேசிய மொழி எது என என்னைக் கேட்டால், சமஸ்கிருதம் இருக்கலாம் என நினைக்கிறேன். அது ஏன் தேசிய மொழியாக இல்லை... பள்ளிகளில் சமஸ்கிருதம் ஏன் கட்டாய மாக்கப்படவில்லை என்பது பற்றி எனக்குத் தெரியாது”.

இவ்வாறு நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்தக் கருத்தும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.