‘அதுபற்றி ஏன் வாய் திறப்பதில்லை?’ - நடிகை கங்கனா ஆவேசக் கேள்வி

 ‘அதுபற்றி ஏன் வாய் திறப்பதில்லை?’ - நடிகை கங்கனா ஆவேசக் கேள்வி

தனது படம் தோல்வி என்றால் நூறு கட்டுரைகள் வருகின்றன, மற்ற படங்கள் தோல்வி என்றால் ஏன் வாய் திறப்பதில்லை என நடிகை கங்கனா ஆவேசமாக கேட்டுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் நடித்து சமீபத்தில் வெளியான படம், ‘தாக்கத்’. ரஜ்னீஸ் கய் இயக்கிய இந்தப் படத்தில் திவ்யா தத்தா, அர்ஜுன் ராம்பால் உட்பட பலர் நடித்திருந்தனர். ஆக்‌ஷன் படமான இது ரு.85 கோடியில் உருவாக்கப்பட்டது. ஆனால் வெறும் ரூ.4 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தீபக் முகுத் கூறும்போது, ’’இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாக்கினோம். நன்றாக எடுக்கப்பட்டிருந்தும் எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் எதை ஏற்பது, எதை மறுப்பது என்பது அவர்கள் விருப்பம். ஆனால், ‘தாக்கத்’ அற்புதமான பெண்ணை மையப்படுத்திய ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்’’ என்றார். படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, தனது சொத்துக்களை விற்றதாக வந்த தகவலை அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு எதிராக தூண்டப்பட்ட பிரசாரத்தால்தான் ’தாக்கத்’ தோல்வியைச் சந்தித்ததாக கங்கனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருக்கும் பதிவில், ‘தினமும் காலையில் எழுந்து பார்த்தால், ’தாக்கத்’ ஃபிளாப் ஆனதாக நூறு கட்டுரைகள் வருகின்றன. ஆனால், ‘ராதே ஷ்யாம்’, ‘கங்குபாய் கத்யாவாடி’, ‘ஜுக் ஜுக் ஜியோ’ உட்பட பல படங்கள் பிளாப் ஆகியிருக்கின்றன. அதுபற்றி யாரும் வாய்திறப்பதில்லை. இதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதும் இருக்கிறதா?’ என்று கோபமாக கேட்டுள்ளார்.

எனினும், 'ஜுக் ஜுக் ஜியோ' படம் 2 வாரங்களில் ரூ.70 கோடிக்கு அதிகமாக வசூலித்ததாகவும், கங்குபாய் படம் ரூ.120 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகவும், சுட்டிக்காட்டியிருக்கும் இணையவாசிகள் கங்கனா தவறான தகவலைச் சொல்வதாக அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in