`சிலையில் இருக்கும் வாசகங்கள் தான் குற்றம்; சட்டத்திற்கு புறம்பாக பேசவில்லை'- ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் மனு

`சிலையில் இருக்கும் வாசகங்கள் தான் குற்றம்; சட்டத்திற்கு புறம்பாக பேசவில்லை'- ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் மனு

"தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவில் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சி நிபுணர் கனல் கண்ணன், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை கடந்த 15-ம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்து, புகார்தாரர் த.பெ.தி.க. குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, கனல் கண்ணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமான தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த மனு வரும் 29-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in