திகட்டாத நகைச்சுவை விருந்தளித்த ‘தெனாலி!’

திகட்டாத நகைச்சுவை விருந்தளித்த ‘தெனாலி!’
Updated on
3 min read

‘மருதநாயகம்’ படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டு, ‘இனி தொடர சாத்தியமில்லை’ என்று கமல் தீர்மானித்த தருணம் அது. அப்போது ரஜினி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு ‘மருதநாயகம்’ பக்கம் போனது. இருவருமே வருத்தப்பட்டார்கள். ‘’கமல் சார் கூப்பிட்டார். ‘இரண்டு படங்கள் பண்ணலாம்னு இருக்கேன். ஒரு படத்தை நான் டைரக்ட் பண்ணிக்கிறேன். இன்னொரு படத்தை நீங்களே தயாரிங்க. டைரக்டும் பண்ணுங்க. அது ஜாலியான படமா இருக்கட்டும்’னு கமல் சார் சொன்னார்’’ என்பதை ரவிகுமார், ரஜினியிடம் தெரிவித்தார். அதன்படி கமல், ‘ஹேராம்’ படத்தை தயாரித்து இயக்கி நடித்தார்.

அடுத்து, கே.எஸ்.ரவிகுமார் முதன்முதலாக தயாரிப்பில் இறங்கினார். கமலை வைத்து ஏற்கெனவே ‘அவ்வை சண்முகி’ இயக்கியிருந்தவர் இந்த முறை இயக்கியதுதான் ‘தெனாலி’. இந்த ‘தெனாலி’ டைட்டிலைச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இலங்கையைச் சேர்ந்த சோமன், என்கிற தெனாலி, சற்றே மனநலம் பாதிக்கப்பட்டவன். தவிர எதற்கு எடுத்தாலும் பயந்து நடுங்குபவன். போதாக்குறைக்கு அவன் என்ன செய்தாலும் அது எதிராளிக்கு ஏடாகூடமாகிப் போகும். டாக்டர் பஞ்சபூதத்திடம் சிகிச்சைக்காக செல்கிறான் சோமன். மனநல மருத்துவரான பஞ்சபூதத்திற்கும் இன்னொரு மனநல மருத்துவரான கைலாஷிற்கும் தொழில் போட்டி உள்ளது. தன்னைவிட தன் சிஷ்யன் பெரியாளாகிவிட்டானே எனும் கடுப்பில் இருக்கும் பஞ்சபூதம், சோமன் என்கிற தெனாலியை டாக்டர் கைலாஷிடம் அனுப்பிவைக்கிறார்.

டாக்டரோ தன் மனைவி குழந்தைகளுடனும் தங்கையுடனும் டூர் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால் ‘எனக்கு வைத்தியம் பார்க்க வேண்டியது மருத்துவரான உங்களின் கடமை’ என்று தெனாலி கெஞ்சுகிறார்.

அவரின் தொந்தரவையும் மீறி, டாக்டர் கைலாஷ் டூர் செல்கிறார். அவர் சென்ற இடத்துக்கே தெனாலியும் வந்துவிடுகிறார். நடப்பதையெல்லாம் டாக்டர் பஞ்சபூதமும் அவரின் உதவியாளரும் தூரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே, தெனாலி அடிக்கும் லூட்டியில், டாக்டர் குடும்பம் ஜாலியாகிவிடுகிறது.

குடும்பத்தில் எல்லோரும் தெனாலியுடன் ஒட்டுறவாகிவிட, டாக்டரின் தங்கையோ தெனாலி மீது காதல்கொள்கிறாள். சகலத்தையும் பார்த்து கொஞ்சம்கொஞ்சமாக மனக்குழப்பத்துக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார் தெனாலி; பிறகு சரியாகிவிடுகிறார். எல்லோரும் ஒன்று சேருகிறார்கள் என்பதை வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில், வாய்விட்டுச் சிரிக்கும் வகையில் சொல்லியிருப்பதுதான் ‘தெனாலி’ திரைப்படம்.

ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் எனும் பேனரில் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து இயக்கினார். தெனாலியாக கமல். டாக்டர் பஞ்சபூதமாக டெல்லி கணேஷ். அவரின் உதவியாளராக ரமேஷ் கண்ணா. டாக்டர் கைலாஷாக ஜெயராம். அவரின் மனைவி ஜலஜாவாக தேவயானி. தங்கை ஜானகியாக ஜோதிகா.

தவிர, மதன்பாப், சார்லி, நடிகை விஜயகுமாரி, கெளரவத் தோற்றத்தில் நடிகை மீனா, அப்துல் ஹமீது முதலானோரும் நடித்திருப்பார்கள்.

‘தெனாலி’ எனும் கதாபாத்திரப் பெயருக்கேற்ப, படம் முழுக்க சிரிப்புப் பட்டாசுகளை போட்டுக்கொண்டே இருப்பார் கமல். ஏற்கெனவே கமல் - ஜெயராம் இருவரும் ‘சாணக்யன்’ எனும் மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். பிறகு ‘பஞ்சதந்திரம்’ படத்திலும் இணைந்து நடித்தார்கள். ‘தெனாலி’ படத்திலும் இருவரின் கூட்டணி நம்மை சிரிக்கவைத்துக் கொண்டே இருக்கும். ‘எல்லாம் சிவமயம் என்று சொல்லுவார்கள். எனக்கு எல்லாம் பய மயம்’ என்று சொல்கிற வசனமும் அதைச் சொல்லும் போது கமலின் முகபாவனைகளும் அதைக் கேட்டுவிட்டு ஜெயராம் பதறிப்போவதும் சிறப்பான கலகல காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

டெல்லி கணேஷும் ரமேஷ் கண்ணாவும் சேர்ந்துகொண்டு, ஒவ்வொரு முறையும் ‘தெனாலி’ என்று சொல்லாமல், ‘அஞ்சலி’, ‘சுண்டெலி’ என்றெல்லாம் வாய்க்குவந்தது போல் தப்புத்தப்பாகச் சொல்வதும் பொறாமையால் ஒருவர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பதையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கும் காட்சியில் ஜெயராம் சிரிக்கவைப்பார். கமலோ பேசிக்கொண்டே வந்து, நம்மை கலங்கடித்துவிடுவார். படம் முழுக்க இலங்கைத் தமிழ் பேசியிருக்கும் விதமும் புதுசுதான் நமக்கு!

ஏற்கெனவே, பல வருடங்களுக்கு முன்பு, ஜி.என்.ரங்கராஜன் இயக்கத்தில் ‘எல்லாம் இன்பமயம்’ படத்தில் ஒரு வேடத்துக்கு சிலோன் பாஷைதான் பேசியிருப்பார் கமல் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

தேவயானியின் நடிப்பு கச்சிதமாக இருக்கும். அந்தக் கேரக்டருக்கு அழகாகப் பொருந்தியிருப்பார். ஜானகியாக ஜோதிகா. கமலுக்கு ஜோடியாக அவர் நடித்ததும் இதில்தான். சிரித்தே நம்மைச் சிரிக்கவைக்கும் மதன்பாப், இதில் கொறித்துக்கொண்டிருந்தபடியே மேலும் நம்மைச் சிரிக்கவைத்திருப்பார். கமலைக் கழற்றிவிட ஜெயராம் ஒவ்வொரு விஷயங்கள் செய்வதும், அதை ’ட்ரீட்மென்ட்’ என்று கமல் நினைத்துக்கொண்டு சமாளிப்பதும் யதார்த்தமாகவும் காமெடியாகவும் அமைக்கப்பட்டிருக்கும். கிரேஸி மோகனின் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்தன.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ’அத்தினி சித்தினி’ என்ற பாடலை அறிவுமதி எழுதினார். பா.விஜய் எழுதிய ‘சுவாசமே...’ பாடலை எஸ்பிபி-யும் சாதனா சர்கமும் பாடி நம்மை மயக்கியிருப்பார்கள். ’இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ’ என்ற பாடலை தாமரை எழுதினார். ஸ்ரீநிவாஸ், கோபிகா பூர்ணிமா பாடிய, பிறைசூடன் எழுதிய ‘போர்க்களம் அங்கே’ என்ற பாடலும் நம்மை என்னவோ செய்யும். ’ஆலங்கட்டி மழை’யை கலைக்குமார் எழுதியிருந்தார். டைட்டில் முடிந்ததும் தொடங்குகிற பாடலான ‘தெனாலி’ பாடலை இளையகம்பன் எழுத, சங்கர் மகாதேவன் முதலானோர் பாடினார்கள். இதில், ‘அத்தினி சித்தினி’, ‘இஞ்சாருங்கோ’, ’ஆலங்கட்டி மழை’ என்று மூன்று பாடல்களை கமல் பாடினார்.

கமலின் நகைச்சுவையும் ரசிக்கவைக்கும். அவரின் நடிப்பும் நெகிழச்செய்யும். கமல் - கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் வந்த ‘தெனாலி, 2000 அக்டோபர் 27-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானது. 22 வருடங்களாகிவிட்டன. திரையிட்ட பல அரங்குகளில் நல்ல வசூல் குவித்தது. 100 நாட்களைக் கடந்தும் வெள்ளிவிழாவும் கண்டது இந்தப் படம். தெலுங்கில் இந்தப் படத்தின் டப்பிங் உரிமையை எஸ்பிபி வாங்கி டப் செய்து வெளியிட்டார். அங்கேயும் வசூல் அள்ளினான் ‘தெனாலி’.

‘தெனாலிராமன்’ எப்படி நம்மை எப்படி குஷிப்படுத்துவானோ அதேபோலத்தான் கமலின் ‘தெனாலி’யும்! எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம்; எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in