சிங்கீதம் சீனிவாச ராவ்: கமலின் ஆஸ்தான இயக்குநருக்குப் பிறந்தநாள்!

சிங்கீதம் சீனிவாச ராவ்
சிங்கீதம் சீனிவாச ராவ்

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில நடிகர்களுக்கும்கூட ஆஸ்தான இயக்குநர்கள் உண்டு. ஏவி.எம் படங்களென்றால் கிருஷ்ணன் - பஞ்சு இயக்குவார்கள். பின்னர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். அதையடுத்து எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதேபோல், கே.பாலாஜி தயாரித்த படங்களை ஏ.சி.திருலோகசந்தர், கே.விஜயன், கிருஷ்ணமூர்த்தி முதலானோர் இயக்கினர். எம்ஜிஆர் நடித்த பல படங்களை ப.நீலகண்டன் இயக்கினார். இப்படித்தான், கமலுக்கும் அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் இயக்குநராக இருந்தவர்... சிங்கீதம் சீனிவாச ராவ்.

அதேசமயம், கமல், ராஜ்கமல் நிறுவனம் என்பதில் இருந்து சிங்கீதம் சீனிவாச ராவின் சினிமா வாழ்க்கை தொடங்கியதாக நினைத்துவிடக் கூடாது. ஆந்திராவின் நெல்லூருக்கு அருகே பிறந்த சிங்கீதம், சென்னைக்கு வந்தது பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் அவருக்கு அரசு உத்தியோகத்திலோ, எட்டுமணி நேர வேலையிலோ ஆசையோ ஆர்வமோ இல்லை. சினிமா மீதான ஈர்ப்பு, அந்தத் துறைக்குள் அவரை இட்டுச் சென்றது. இயக்குநர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தார். பிறகு, கே.வி.ரெட்டியிடமும் பிங்கலி நாகேந்திர ராவிடமும் இணை இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றினார். சினிமாவை நன்கு கற்றறிந்தார். ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரையும் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டார்.

திக்கற்ற பார்வதி
திக்கற்ற பார்வதி

நமக்கெல்லாம் நன்றாகவே தெரிந்த ‘மாயாபஜார்’ படத்தில் இவர் பணியாற்றியுள்ளார். இந்தப் படம் 1957-ம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து அவர் பணியாற்றிய தெலுங்குப் படங்களெல்லாம் நூறு நாள் படங்களாகவும் வெள்ளிவிழாப் படங்களாகவும் அமைந்தன. 1972-ல், தெலுங்கில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல கதையைத் தேர்வு செய்த வகையிலும் அதை செம்மையாக இயக்கிய வகையிலும் நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து வரிசையாக படங்களை இயக்கிக்கொண்டிருந்தார்.

இன்றைக்கு நமக்கெல்லாம் கமலின் பல படங்களை இயக்கியவர் என்றுதான் சிங்கீதம் சீனிவாச ராவைத் தெரியும். கமல் மூலமாகத்தான் ‘ராஜபார்வை’ படத்தின் வழியாக தமிழுக்கு இயக்குநராக வந்தார் என்றும் அதுதான் கமலை வைத்து அவர் இயக்கிய முதல் படம் என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், 1974-லேயே சிங்கீதம், தமிழ்த் திரையுலகிற்குள் வந்துவிட்டார். மூதறிஞர் ராஜாஜி எழுதிய கதையை, ஸ்ரீகாந்த், லட்சுமி முதலானோரைக் கொண்டு இயக்கி மொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தார். ‘திக்கற்ற பார்வதி’ எனும் அந்தத் திரைப்படம் பல விருதுகளைக் குவித்தது.

சிங்கீதம் சீனிவாச ராவ்
சிங்கீதம் சீனிவாச ராவ்

அதேபோல், கமலை வைத்து தெலுங்குப் படத்தைத்தான் முதன்முதலாக இயக்கினார். கமல்ஹாசன், ஜெயசுதா, ரோஜாரமணி முதலானோர் நடித்த அந்தப் படம் 1979-ல் வெளியாகி, தமிழிலும் டப் செய்யப்பட்டது. ‘இரு நிலவுகள்’ என்பது படத்தின் பெயர். ‘ஆனந்தம் அது என்னடா’ முதலான பாடல்கள் ஹிட்டாகின. இந்தப் படத்தில் கமல் டப்பிங் பேசவில்லை. கமலுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர்... ஒய்.ஜி.மகேந்திரன் என்பது கொசுறுத் தகவல்.

இதன் பின்னர் தெலுங்குப் படங்களும் கன்னடப் படங்களுமாக வரிசையாகப் பண்ணிக் கொண்டிருந்த சிங்கீதம் சீனிவாச ராவை, ஹாசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தொடங்கி முதன்முதலாகத் தயாரித்த ‘ராஜபார்வை’ படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் கமல். தமிழில் ‘திக்கற்ற பார்வதி’க்குப் பின்னர், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடித் தமிழ்ப் படமாக ‘ராஜபார்வை’யை இயக்கினார் சிங்கீதம்.

கமலுக்கும் சிங்கீதம் சீனிவாசராவுக்கு ஒருதலைமுறைக்கான வயது இடைவெளி உண்டு. என்றாலும் இருவருக்குள் அப்படியொரு நட்பும் அந்நியோன்யமும் புரிதலும் இருந்தது. பிறகு கமல் நடித்த ’பேசும் படம்’ இயக்கினார். பார்வையில்லாத நாயகனைக் கொண்டு ‘ராஜபார்வை’ எடுத்த இயக்குநர், பேசவே பேசாத மெளனமொழிப் படத்துக்கு ‘பேசும்படம்’ எனப் பெயரிட்டார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில், ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தை இயக்கினார். சிங்கீதம், கமல், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலானோரின் கைவண்ணத்தில், ‘குள்ள அப்பு’ ரகசியம் இன்றுவரைக்கும் சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. இதனிடையே தெலுங்கிலும் கன்னடத்திலும் படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். கமல் அழைத்தால், தமிழ் சினிமாவுக்கு வந்துவிடுவார்.

வேலைக்குச் செல்லும் மூன்று பெண்களுக்கு மேலதிகாரி கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளை வாழைப்பழத்தில் ஊசி செருகுவது போல சொல்லும் ’மகளிர் மட்டும்’ படத்தை, காமெடியாகவே சொல்லி, கலகலக்க வைத்தார். பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், நான்கு கமலை வைத்துக்கொண்டு இவர் விளையாடிய ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படம், டிவியில் ஒளிபரப்பினால், வேலைக்கு லீவு போட்டுவிட்டு தங்களை மறந்து சிரிக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமின்றி நான்கு இந்திப் படங்களையும் இயக்கியிருக்கும் சிங்கீதம் சீனிவாசராவ், எதற்கும் கோபப்படவே மாட்டாராம். காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதற்கு முதல்நாளே மிகப்பெரிய திட்டமிடலுடன் தயாராகி விடுவாராம். ஸ்பாட்டுக்கு வந்தால், மளமளவென டென்ஷனே இல்லாமல், நினைத்தபடி காட்சிகளை முடித்துவிடுவதில் சூரர் என்று கமல் இவரைப் பாராட்டியிருக்கிறார்.

பிரபுவை வைத்து ‘சின்ன வாத்தியார்’ படத்தை இயக்கினார். கலகலவென காமெடிப் படமாக உருவாக்கி அசத்தினார். ’’சிங்கீதம் சீனிவாசராவுக்கு கதை சொல்லும் பாணி நன்றாகவே தெரியும். தனக்கென்று பாணி என்றெல்லாம் அவர் வைத்துக் கொள்ளமாட்டார். ஒரு படத்தை எல்லோரும் ரசிப்பதற்கு என்னென்ன பாணியையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதுவே சிங்கீதம் அண்ணாவின் பாணி” என சினிமாவின் பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் தெரிவித்துள்ளார்.

நடிகை சுதா சந்திரனை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. உண்மையாகவே கால் இழந்து, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட சுதா சந்திரனை நாயகியாக்கி, ‘மயூரி’ எனப் படமெடுத்து, நாட்டியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த படமாக அதை உருவாக்கி, தெலுங்கிலும் தமிழிலுமாக மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார்; விருதுகளையும் அள்ளினார் சிங்கீதம்.

இவர் இயக்கிய படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன; வசூல் குவித்திருக்கின்றன. அந்தந்த மாநில விருதுகளையும் தேசிய விருதுகளையும் வாங்கியிருக்கின்றன.

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மத்தியில் இவரின் முகம் கூட தெரியாமல்தான் இருந்தது. ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் டைட்டிலில், பயாஸ்கோப்பை வைத்துக்கொண்டு, ‘கதைகேளு கதைகேளு சுகமான கதைகேளு’ என்ற பாடலுக்கு சிங்கீதம் நடித்தபோதுதான் பெரும்பாலான ரசிகர்களுக்கு இவர் முகம் பரிச்சயமானது; பிரபலமானது.

படைப்பாளிகள், தொழிலாளர்கள் என திரையுலகம் இரண்டுபட்டுக் கிடந்த நிலையில், படம் எடுக்க முடியாத சூழல். அப்போது ’தொழிலாளிகள் பக்கம்தான் நான்’ என்று சொன்னார் கமல்.

அத்துடன் நின்றுவிடாமல், அவசரம் அவசரமாகப் படத்தை எடுத்து மிகப்பெரிய ஹிட்டாக்கியும் காட்டினார். அப்போதும் இப்போதும் எப்போதும் பார்க்கிற படமாகத் திகழ்ந்த ‘காதலா காதலா’ படத்தையும் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார். ஜோதிகா நாயகியாக நடித்த ‘லிட்டில் ஜான்’ படத்தை இயக்கினார்.

அமைதியே உருவானவர். ஆர்ப்பாட்டங்கள் இல்லாதவர். படப்பிடிப்புத் தளத்தில் எப்படியோ அப்படியே வாழ்க்கையிலுமாக நிதானமும் அமைதியுமாகவே இருப்பவர். “கமலுக்கும் எனக்கும் அப்படியொரு புரிதல் உண்டு. அவர் என்ன நினைப்பார்னு எனக்கு முன்னாடியே தெரியும். நான் என்ன நினைக்கிறேன்னு அவர் முன்னாடியே தெரிஞ்சிக்குவார். என்னவோ எங்களுக்குள்ளே இப்படியொரு பந்தம்” என்று கமல்ஹாசன் குறித்து நெகிழ்ந்து சொல்கிற சிங்கீதம் சீனிவாசராவ், இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். ‘சம்யுக்தா’ என்ற படத்தின் பின்னணி இசையை சங்கர் கணேஷ் வழங்க, அந்தப் படத்தின் பாடல்களுக்கு சிங்கீதம் சீனிவாசராவ் இசையமைத்தார்.

பேச்சைவிட செயலே முக்கியம் என காரியத்தில் இறங்கி, திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல சாதனைகளைப் புரிந்த சிங்கீதம் சீனிவாச ராவுக்கு செப்டம்பர் 21 பிறந்தநாள். தனது 91-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நாமும் அவரை வாழ்த்துவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in