கமல்: தேடலின் விசித்திர நாயகன்!

கமல்ஹாசன் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
கமல்: தேடலின் விசித்திர நாயகன்!

’மை டியர் ராஸ்கல்’ என்று பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தைப் பார்த்துவிட்டு, குருநாதர் கே.பாலசந்தர், தன் சிஷ்யப்பிள்ளை கமலின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் பாராட்டி கடிதம் எழுதியதை இன்றைக்கும் பொக்கிஷமாக வைத்திருக்கிறார் கமல்ஹாசன். ‘அன்புள்ள கமல். உன் மேல் எனக்குக் கோபம். உண்மையிலேயே உன் மேல் எனக்குக் கோபம். இத்தனை ஆண்டுகாலம் திரையுலகில் இருந்துகொண்டு, இன்னுமா உயர்ந்த விருதுகளையெல்லாம் வாங்காமல் இருக்கிறாய்?’ என்று ‘சலங்கை ஒலி’ படம் முடிந்த கையுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், கமலுக்கு எழுதிய கடிதமும் பொக்கிஷப் பாதுகாப்புடன் கமலிடம் இருக்கிறது. இவை மட்டுமா பொக்கிஷம்... கமல் எனும் மகா கலைஞனே நம் திரையுலகின் பொக்கிஷம்தானே!

ஐந்து வயதில் நடிப்புலகிற்குள் புகுந்த ஒருவர், இத்தனை ஆண்டுகாலம் தன் வயதையொத்த அனுபவங்களுடனும் தன் வயதுக்கும் அனுபவத்துக்கும் நிகரான புகழுடனும் உச்சாணிக்கொம்பில் இருக்கிறாரென்றால்... இந்தச் சாதனையை நிகழ்த்தியவர்கள் இந்தியத் திரையுலகில் கமலைத் தவிர வேறும் எவருமில்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏவி.எம் எனும் பிரம்மாண்ட நிறுவனத்தின் கதவுகள், சிகப்புக்கம்பளமிட்டு வரவேற்று ‘களத்தூர் கண்ணம்மா’வில் களமிறக்கியது கமல்ஹாசனை. ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர், சந்திரபாபு, தங்கவேலு முதலானவர்களுடன் நடிக்கும்போதே தொடங்கிவிட்டது பாலபாடம். ’போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பார்கள். ஆனால் கமலுக்கு எதுவுமே ‘பத்தல பத்தல’ தான்!

பிரபல இசைமேதை டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் பாட்டுக் கற்றுக்கொண்டார். இன்னொரு பக்கம்... நாடக உலகின் மேதைகளில் ஒருவரான டி.கே.சண்முகம் அண்ணாச்சியை குருவாக ஏற்றுக்கொண்டு நாடகங்களில் நடித்தார். அந்தப் பக்கம் பார்த்தால், நடனத்தைக் கற்றுக்கொண்டு பரத அரங்கேற்றமெல்லாம் செய்தார். பிரபல நடன இயக்குநரான தங்கப்பன் மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்து வேலை பார்த்தார்.

இளம் வயதிலேயே கமலைவிட அதிக வயதுகொண்டவர்கள் அதிக அளவில் கமலுக்குப் பழக்கமானார்கள். ’மாமா’ என்று ஜெமினியையும் ‘அம்மா’ என்று சாவித்திரியையும் அழைத்தாலும் இருவரும் நண்பனைப் போல கமலிடம் பழகினார்கள். இயக்குநராக வேண்டும் என்கிற கனவும் ஆசையும் கமலுக்கு இருந்தது. ஜெமினி கணேசன் பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார். ‘’இவனை உதவி டைரக்டரா சேத்துக்கோ பாலு’’ என்று கேட்டார். ஆனால் இயக்குநர் சிகரம், கமலை நடிகராக்கினார். ஏவி.எம் கமலின் பால்யத்தில் அவரை நடிகனாக்கியது. இளைஞன் கமலை கே.பாலசந்தர் ‘அரங்கேற்றம்’ மூலம் வார்த்தெடுத்தார். ஒவ்வொரு படத்திலும் கமலை ஒவ்வொரு விதமாகப் பயன்படுத்தி, பட்டைத்தீட்டி, ஜொலிக்கவிட்டார்.

எழுபதுகளின் மத்தியிலேயே, கமலைவிட அதிக வயதுகொண்ட இயக்குநர் ஆர்.சி.சக்தியின் நட்பு கிடைத்தது. இருவரும் அப்படியொரு நண்பர்களானார்கள். கமல் முதன்முதலாகத் திரைக்கதை எழுதி ‘உணர்ச்சிகள்’ படம் வெளிவந்தது. இதேசமயத்தில் கேரளம்தான் கமலை அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டது. ‘கன்யாகுமரி’ படம்தான் கமல் கதாநாயகனாக நடித்த முதல் படம். ஆக, தமிழ், மலையாளப் படங்களின் ஆக்கமும் இரண்டு பக்கமும் கிடைத்த ஊக்கமும் கமலுக்குக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருந்தன. கமலின் வெற்றி, கற்றுக்கொண்டதில் இல்லை. கற்றுக்கொண்டே இருப்பதில்தான் இருக்கிறது.

ஒருபக்கம் நாவல்கள் படித்தார். எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன், மாலன், சுப்ரமண்ய ராஜூ முதலானவர்கள் நண்பர்களானார்கள். இன்னொரு பக்கம், இயக்குநர் மகேந்திரன், சந்தானபாரதி என நண்பர்கள் கிடைத்தார்கள். கதை எழுதினார். கவிதைகள் எழுதினார். எத்தனையோ படங்களுக்கு டைட்டிலில் பெயர் வராமல் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கேரள பாலுமகேந்திரா, கன்னடத்தில் எடுத்த ‘கோகிலா’ எனும் முதல் படத்துக்கு கமலே நாயகன். அந்தக் காலத்திலேயே சிங்கீதம் சீனிவாசராவ், கமலை வைத்து எடுத்த தெலுங்குப் படம் ஹிட்டாகி, தமிழில் ‘இரு நிலவுகள்’ என்றாக வெளிவந்தது.

‘தம்பீ... வாடாகண்ணு’ என்று ‘களத்தூர் கண்ணம்மா’ சமயத்தில் தோளில் தூக்கிவைத்துக்கொண்ட அப்போதைய உதவி இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தன் படங்களில் நாயகனாக்கிக்கொண்டார். கே.பாலசந்தர், இங்கே கமலை அரங்கேற்றியது போலவே, தெலுங்கிலும் ‘மரோசரித்ரா’ கொடுத்தார். ‘சங்கராபரணம்’ எனும் தெலுங்குப் படம் டப் செய்யப்படாமலேயே தமிழிலும் மிகப்பெரிய ஓட்டம் ஓடி, சாதனை நிகழ்த்தியது. அதற்கு முன்னதாகவே ‘மரோசரித்ரா’ அந்த சாதனையைச் செய்துவிட்டிருந்தது.

தேவராஜன் இசையில், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் ‘அந்தரங்கம்’ எனும் படத்தில் ‘ஞாயிறு ஒளிமழையில்’ என்று பாடினார். அங்கே கமலுக்குள் இருந்த பாட்டுக்காரனும் எட்டிப்பார்த்தான். ஹாசன் புரொடக்‌ஷன்ஸ் உருவாக்கி ‘ராஜபார்வை’ எடுத்தார். பின்னாளில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்றாக்கி பல படங்களை உருவாக்கினார். அங்கே, ஒட்டுமொத்தமாக ஒரு படத்தையே உருவாக்கி திரையில் காட்டுகிற மொத்த வணிகத்தையும் அறிந்துவைத்திருந்தார். ஒரு துறைக்குள் கிளைகிளையாக இருக்கும் துறைகளுக்கெல்லாம் புகுந்து, அவற்றின் இண்டுஇடுக்குகளைக் கூட கற்றறிந்தவர் கமல்ஹாசனாகத்தான் இருக்கும்.

நமக்குத்தான் ஓடுகிற ஓடாத படங்கள் என்கிற பகுத்துப் பிரித்தல். வசூல் தந்த படங்கள், வசூல் தராத படங்கள் என்கிற கணக்குகள். ஆனால் கமலுக்கு எப்போதுமே பரீட்சை எழுதிக்கொண்டே இருக்கிற ஒரு மாணவ மனநிலைதான் போல! ‘பேசும்படம்’ மாதிரி பேசாத படம் கொடுப்பார். ‘குணா’ போல் ஒரு படம் பண்ணுவார். குள்ள அப்புவாக வருவார். உதயமூர்த்தி எனும் சமூக ஆர்வலராக, சேவகராகவே வாழ்வார். இவற்றுக்கெல்லாம், இந்தச் சோதனைகளுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்தவை பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம். பாலசந்தரின் படங்கள், அவரின் நடிப்பின் பரிமாணங்களை அவருக்கே காட்டிக்கொண்டு வந்தன. ‘16 வயதினிலே’ கமல் எனும் பண்பட்ட நடிகனை அடையாளம் காட்டியது. நடுவே பாலுமகேந்திரா ‘மூன்றாம் பிறை’யில் முழுநிலவென கமலைப் பிரகாசிக்கவைத்தார். 1987-ம் ஆண்டு, ‘நாயகன்’ மூலம் கமல் தன் பரீட்சார்த்த முயற்சிகளை அதீதமாக அள்ளியெடுத்துக் கொண்டு பயணிக்கத் தொடங்கினார்.

நடுவே, மும்பை உலகில், ‘ஏக் துஜே கே லியே’, 'சாகர்', 'சனம் தேரி கஸம்', 'கிரப்தார்' என்று ரவுண்டு வந்தார். வங்கப்படத்தில்கூட நடித்திருக்கிறார் கமல். இமேஜ் எனும் சதுரவட்ட நீள அகல வரையறைகள், கமல் எனும் கலைஞனுக்கு இல்லவே இல்லை. ‘காதலா காதலா’ மாதிரி படம் பண்ணுவார். ‘ஹேராம்’ மாதிரி படம் இயக்குவார். ‘சிங்காரவேலன்’ மாதிரி கிராமத்துக் கதை எடுப்பார். தன் திரைக்கதை, வசனத்தால் ‘தேவர் மகன்’ என்று கம்பீரம் காட்டுவார். சிம்ரனின் பார்வையில் இருந்து கதை சொல்வது போல ‘பஞ்ச தந்திரம்’ படத்தை எடுத்தார். அவரவர் பார்வையில் சொல்லப்படுகிற ‘விருமாண்டி’யையும் எழுதி, இயக்கி, தயாரித்து ஜல்லிக்கட்டுக் காளை போல துள்ளியெழுந்தார்.

அப்பாவியாக ‘சிப்பிக்குள் முத்து’ படத்தில் நடித்தவரா, அதற்கு முன்பு பரதக் கலைஞராக ‘சலங்கை ஒலி’யில் நடித்தது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே, கம்ப்யூட்டர் நமக்குத் தெரியாத காலத்தில் ‘விக்ரம்’ கொடுத்தார். சத்யராஜை தன் தயாரிப்பில் நாயகனாக்கி, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ கொடுத்தார். கடனுதவி கேட்டு வந்த பாலுமகேந்திராவுக்கு ‘சதி லீலாவதி’ வாய்ப்பைக் கொடுத்து, பாலுமகேந்திரா எனும் கலைஞனை அதே கம்பீரத்துடன் இருக்கவைத்தார்.

சுஜாதாவுடன் இணைவார். பாலகுமாரனுடன் இணைவார். புவியரசுவை பக்கத்தில் வைத்துக்கொள்வார். அழகான தோற்றத்துடன் ‘கலைஞன்’ படத்தில் வருவார். அசிங்கமான முகத்துடன் ‘குணா’ படத்தில் வருவார். ‘அன்பே சிவம்’ மாதிரி படம் கொடுப்பார். ‘அவ்வை சண்முகி’ மாதிரியும் படம் தருவார். ‘மனோகரா’, ‘இருவர் உள்ளம்’ மாதிரியான படங்களைக் கொடுத்த மாபெரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தை, ‘ராஜபார்வை’யில் தாத்தாவாக நடிக்கவைத்து அழகு பார்த்தார்.

அந்தக் காலத்திலேயே 108 வயதுகொண்ட கிழவராக மலையாளப் படத்தில் நடித்தார். ‘கடல்மீன்கள்’, ‘சங்கர்லால்’ என அப்போதே வயதான தோற்றத்தில் நடித்தார். ‘எல்லாம் இன்ப மயம்’ படத்தில் ஜாலியாக வேஷங்கள் போட்டார். பின்னாளில், பத்து அவதாரங்கள், பத்து கதாபாத்திரங்கள் என்று கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘தசாவதாரம்’ பண்ணினார். நாடக உலகிலும் தெலுங்கு உலகிலும் தமிழ்த் திரையுலகிலும் நற்பெயர் எடுத்த மெளலியை திடீரென அழைத்து, ‘பம்மல் கே.சம்பந்தம்’ இயக்கச் செய்தார். கமலின் தேடல் என்பது ஆரம்பித்து முடிவதல்ல. ஆரம்பித்துக் கொண்டே இருப்பதுதான் கமலின் தேடல் அகராதி!

‘ஆங்கிலப்படத்துக்கு இணையான படம்’ என்று அந்தக் காலத்தில் விளம்பரம் செய்வார்கள். அப்படிச் சொல்லாமலேயே, ‘குருதிப்புனல்’ படத்தை அப்படித்தான் எடுத்திருந்தார் கமல். ‘மீரா’ இயக்கிய பி.சி.ஸ்ரீராமை அழைத்து இயக்கச் சொன்னார். இப்படித்தான் கமல். இவர்தான் கமல்... என்றெல்லாம் வரையறுக்க முடியாத மகா கலைஞன் அவர்!

ஒலிக்கலவையில் புதுமைகள் செய்வார். நேரடி ஒலிப்பதிவில் இறங்குவார். அன்றைக்கு கேமராவில் பதிவு செய்து, அப்போதே எடிட் செய்யும் கேமராவைப் பயன்படுத்துவார். பாடுவார், பாட்டு எழுதுவார். கதை எழுதுவார். திரைக்கதை அமைப்பார். இயக்குவார். தயாரிப்பார். எஸ்பிபி-யையும் இளையராஜாவையும் ‘அண்ணன்’ என்று விளித்து உருகுவார். தன் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு ‘வாய்ஸ்’ மட்டும் கொடுத்து பங்கேற்பார். ‘சார், நான் உங்க பயங்கர ரசிகன்’ என்று சொன்ன இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து, ‘விக்ரம்’ பண்ணச் சொல்லுவார்.

நல்ல தோழியான நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு அப்போதே ‘நீயா’ பண்ணிக்கொடுத்தவர் பின்னாளில் ‘பாபநாசம்’ படமும் செய்துகொடுத்தார். நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, டெல்லி கணேஷ் என்று பழைய மாபெரும் கலைஞர்களைப் போற்றிக்கொண்டே இருப்பார். பயன்படுத்திக்கொண்டே இருப்பார். நாசர், அஜய்ரத்னம் என்பவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி அவர்களை உயரவைத்துக்கொண்டே இருப்பார். விசித்திரங்களைத் தேடிக்கொண்டே இருப்பவர் கமல். சொல்லப்போனால், கமல்ஹாசன் எனும் கலைஞனே விசித்திரன் தான்!

நவம்பர் 7-ல் பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் என்கிற உலக நாயகன் என்கிற மகாகலைஞனை வாழ்த்துவோம்.

வாழ்த்துகள் கமல் சார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in