கமல் - சிங்கீதம் கூட்டணியில் பேசாமல் பேசிய ‘பேசும் படம்’

- மெளனமாக வந்து, இன்றைக்கும் நாம் பேசிக்கொண்டிருக்கும் ‘டார்க் ஹ்யூமர்’ படம்!
கமல் - சிங்கீதம் கூட்டணியில் பேசாமல் பேசிய ‘பேசும் படம்’

’பணம்தான் நேர்மையைத் தீர்மானிக்கிறது’ என்பார்கள். ஒருவன் நேர்மையுள்ளவனாகவோ நேர்மையற்று இருப்பவனாகவோ இருப்பதற்கு நடுவே பணம் கோடுகிழித்து கபடி விளையாடுகிறது. எண்பதுகளின் இறுதி வரை, ‘படிச்சிருக்கேன், ஆனா படிப்புக்கேத்த வேலை கிடைக்கல’ என்று வலியுடன் புலம்புகிற இளைஞர்கள் ஏகப்பட்ட பேர் உண்டு. ‘எங்கிட்ட மட்டும் பணம் இருந்துச்சுன்னா...’ என்று கனவு கண்டவர்கள் இருக்கிறார்கள். ‘பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை; ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை’ என்பதை பட்டதாரி இளைஞன் புரிந்து கொள்கிறான். நமக்கும் சொல்லிக் கொடுக்கிறான். அதுவும் எப்படி? ஒரு வரி கூட பேசாமல், ஒரு வார்த்தை கூட பேசாமல், மெளனமாக இருந்தே நமக்குச் சொல்லிக் கொடுத்த படம்தான் ‘பேசும் படம்’.

‘ராஜபார்வை’ என்று டைட்டில் வைப்பார் கமல். ஆனால் நாயகனுக்கு பார்வை இருக்காது. அதேபோலத்தான் ‘பேசும்படம்’ என்று தமிழில் தலைப்பு வைத்திருப்பார். ஆனால், படத்தில் யாருமே பேசமாட்டார்கள். ஆனால் ஒவ்வொரு காட்சியும் கதையை, காட்சியை, காட்சியின் காதலை, கேலியை, கிண்டலை, பழிவாங்குதலை, துரோகத்தை உணர்த்திவிடும்.

அந்த ஒண்டுக்குடித்தன போர்ஷனின் பெயர் ஆனந்தபவனம். தங்கியிருக்கும் இடத்தின் பெயரில் இருக்கும் ஆனந்தம், அந்தப் பட்டதாரி இளைஞனுக்கு இல்லை. காரணம்... படித்தவனுக்கு வேலை கிடைக்கவில்லை. காசுக்கு வழியில்லை. விழி பிதுங்குகிற அளவுக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி பல் துலக்குபவன். எங்கே நாற்றம் இருக்கிறதோ அந்த இடத்துக்கு மட்டும் சோப் நுரையைக் காட்டி அலசுபவன். கால் டம்ளர் டீ குடித்து வயிறு வளர்ப்பவன். ஆனால், அவன் கனவுலகம் வேறு.

தற்காலிக வேலைக்கான க்யூ. கடைசி ஆளாக நிற்பவன், நம்பிக்கை இழக்கிறான். ஓரிடத்தில் பிச்சைக்காரனை சந்திக்கிறான். ‘நல்லவேளை, பிச்சையெடுக்கும் நிலைமை தனக்கில்லை’ என்பது போல், பாக்கெட்டில்  இருந்து எட்டணாவை ஸ்டைலாக சுண்டிக் காட்டுகிறான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், சட்டை மடிப்பில், காலருக்கு உள்ளே, கிழிந்த கோட்டுக்கு உள்ளே, காதுக்கு உள்ளே, அமர்ந்திருக்கும் கோணிப்பையின் கீழே என்று காசும் பணமுமாகக் காட்ட, வெலவெலத்துப் போகிறான். ‘ச்சே... நமக்கு நல்ல வாழ்க்கையே இல்லியா?’ என்று அங்கலாய்க்கிறான்.

மிகப்பிரமாண்டமான டிபார்ட்மெண்ட் ஸ்டோர். உள்ளே சென்று பார்க்க ஆசை அவனுக்கு. ஒவ்வொரு பொருளாகத் தொட்டுப் பார்க்கிறான். அங்கே, தோடு வாங்குகிற நாயகியைச் சந்திக்கிறான். அவளுடைய அப்பா மேஜிக்மேன். அங்கே அவர் செய்யும் மேஜிக்கைப் பார்த்து மிரண்டுபோகிறான். பிறகு, வேலைக்கான க்யூவில் நிற்கிறான். வெறுத்துப் போய் அங்கே ஓரமாக நிற்கிறான். மீண்டும் நாயகியின் தரிசனம்.

வேலை தேடி அலையாய் அலைந்து வருபவன், நட்சத்திர அந்தஸ்து கொண்ட, ‘புஷ்பக்’ எனும் ஹோட்டலைப் பார்க்கிறான். அங்கே காரில் இருந்து இறங்குகிற குடிகாரன், மிகப்பெரிய பணக்காரன். கொஞ்சூண்டு சாப்பிட்ட ஐஸ்க்ரீமை அப்படியே தூக்கிப் போடுகிறான். பர்ஸில் இருந்து பணம் எடுக்க, அவ்வளவு பணம் கீழே. அவனையும் அந்த ஹோட்டலையும் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொள்கிறான்.

அந்தப் பணக்காரனுக்கு மனைவி. அவனுக்கு நண்பனும் உண்டு. தன் மனைவிக்கும் நண்பனுக்கும் அப்படியான உறவு. இதெல்லாம் அவனுக்குத் தெரியாது. பணக்காரனைக் கொல்ல, நண்பன் சதித்திட்டம் தீட்டி ஒருவனை அனுப்புகிறான்.

அதேசமயம், நள்ளிரவில் நடுரோட்டில் வந்துகொண்டிருக்கும் பட்டதாரி இளைஞன், ரோட்டோரத்தில் மயங்கி விழுந்து கிடக்கிற பணக்கார குடிகாரனைப் பார்க்கிறான். அவனைத் தூக்கமுடியாமல் தூக்கிவந்து, தன் ஒண்டுக்குடித்தன குடியிருப்பில் தன் வீட்டில் வைத்து அடைத்துவிட்டு, ‘புஷ்பக்’ என்கிற நட்சத்திர ஹோட்டலின் சாவியை எடுத்துக் கொண்டு செல்கிறான்.

அந்தப் பணக்காரனை போதையிலேயே வைத்திருப்பதும், இங்கே ஹோட்டலில் சொகுசு வாழ்க்கை வாழ்வதுமாக நாட்களைக் கடத்துகிறான். மீண்டும் பிச்சைக்காரனை சந்திக்கிறான். கோட்டும் சூட்டுமாக, கூலிங்கிளாஸெல்லாம் போட்டுக்கொண்டு, பாக்கெட்டில் இருந்து கத்தைகத்தையாகப் பணத்தை எடுத்து பிச்சைக்காரனிடம் காட்டுகிறான். அதிலொரு பெருமிதம் அவனுக்கு.

இந்த நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியிருக்கும் நாயகிக்கும் அவனுக்கும் பூக்கிறது காதல். ‘அது வேணுமா, இது வேணுமா’ என்று பணத்தால் வாங்கித்தர நினைக்கிறான் அவன். அவளோ... இடிந்த கட்டிடத்தின் மேலே, பூத்திருக்கும் வெள்ளைப்பூக்களைப் பறித்துத்தரக் கேட்கிறாள். வியந்து போய், பறித்துக் கொடுக்கிறான்.

ஒருகட்டத்தில் பணக்காரக் குடிகாரனைக் கொல்ல, நண்பன் ஏவிவிட்ட ஆள், இந்த அறையில் தங்கியிருக்கும் இளைஞனைக் குறிவைக்கிறான். பிறகு அவனைப் பின் தொடர்ந்து செல்லுகிறான் இளைஞன். அங்கே பணக்காரனின் மனைவிக்கும் நண்பனுக்குமான உறவும் அதனால் நண்பனே கொல்ல முடிவு செய்திருப்பதும் தெரியவருகிறது. ‘ச்சே... பணம் படுத்தும்பாடு’ என்பதாக உணருகிறான்.

பிச்சைக்காரனை வந்து பார்க்கிறான். அங்கே அவன் இறந்து கிடக்க, அவனிடம் இருக்கும் பணத்தை அடித்துபிடித்து எல்லோரும் பொறுக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். இறந்து கிடப்பவனிடம் இப்போது எதுவுமே இல்லை. கார்ப்பரேஷன் வண்டி அந்த சடலத்தை அள்ளிச் செல்கிறது.

இதையடுத்து, பணக்காரன் என்று என்னை நம்பாதே என்பதை விளக்கி காதலிக்கு கடிதம் கொடுக்கிறான் பட்டதாரி இளைஞன். அத்துடன், ‘புஷ்பக்’ ஹோட்டலின் முதலாளி, ஒரு சாதாரண டீக்கடையில் தொடங்கி, படிப்படியாக உழைத்து, வளர்ந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை வளர்ந்திருப்பதையும் அறிகிறான். பணக்கார குடிகாரரை எந்த இடத்தில் இருந்து தூக்கிக்கொண்டு தன் அறைக்குக் கொண்டு வந்தானோ அதே இடத்தில் போடுகிறான். மயக்கம் தெளிந்தவர், ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறார் பணக்காரர். அங்கே மன்னிப்பு கேட்டு எல்லா விவரமும் சொல்லி கடிதம் வைத்திருக்கிறான். அதைப் படித்து உணருகிறார். ஹோட்டலை விட்டு வெளியே வருகிறார். மனைவி வருகிறார். இருவரும் இணைந்து செல்கிறார்கள். தன்னிடம் இருக்கும் மது பாட்டில்களைத் தூக்கி வீசுகிறார் பணக்காரர்.

காதலி ஊரைவிட்டுச் செல்கிறாள். காரில் இருந்தபடி, தன் விலாசத்தை எழுதி அவனை நோக்கி வீசுகிறாள். அந்த முகவரிப் பேப்பர், காற்றில் பறந்து செல்கிறது. கூடவே அந்தக் காதலும்! மீண்டும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான க்யூவில் நிற்கிறான் என்பதுடன், மெளனமாக ஓடி, மெளனமாகவே முடிகிறது ‘பேசும்படம்’. ஆனால் படம் முழுக்க நம்மால்தான் மெளனமாக இருக்கமுடியவில்லை.

பணம் முக்கியம் என நினைக்கும் வேலையில்லா இளைஞன். பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் இருக்கும் குடிகாரன். கணவருக்கு துரோகம் செய்யும் மனைவி, மனைவியையும் சொத்துகளையும் அபகரிக்கத் திட்டம் போடும் நண்பன், பிச்சையெடுத்து நாலு காசு பார்க்கும் பிச்சைக்காரன், கால் ஊனமான நிலையிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அளவுக்கு உயர்ந்து நின்று ஹோட்டலைப் பராமரிக்கும் எளிமையான முதலாளி, மேஜிக் மூலம் சின்னச்சின்ன திருட்டுகள் செய்யும் நாயகியின் அப்பா மேஜிஷியன். உண்மையான அன்புதான் காதலின் ஊற்று என்பதைப் புரியவைக்கும் நாயகி... என பேசாமொழிப் படத்தில் ஆயிரம் விஷயங்கள் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன.

கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் மிக முக்கியமானவரான சிங்கீதம் சீனிவாசராவ், புகழ்மிக்க இயக்குநராக கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த போது, ஒரேயொரு காட்சி மட்டும் வசனங்களே இல்லாமல் எடுக்கப்பட்டது. இதை உணர்ந்த சிங்கீதம், ஒரு படம் முழுக்க எவரும் பேசாமல் இருந்தால் எப்படியிருக்கும், அப்படியொரு கதையைச் சொன்னால் எப்படியிருக்கும் என்று யோசித்தார். படத்தின் கதையையும் திரைக்கதையையும் இரண்டே வாரங்களில் எழுதி, கமல்ஹாசனிடம் சொல்ல, அசந்து போனார் கமல்ஹாசன். உடனே ஒப்புக்கொண்டார். வேலை இல்லாத பிரச்சினை, குடும்பக் குழப்பம், துரோக நட்பு, காதல் துளிர்த்தல், இளைஞனின் கனவு என்பதையெல்லாம் காமெடி கலந்து அதேசமயம் துயரங்களைச் சொல்லமுடிவெடுத்தார்கள்.

இன்றைக்கு ‘டார்க் ஹ்யூமர்’ என்கிற வார்த்தை மிகப்பிரபலம். வருடத்துக்கு நான்கைந்து படங்களாவது ‘டார்க் ஹ்யூமர்’ காமெடிப் படமாக வெளிவருகின்றன. ஆனால் எண்பதுகளின் இறுதியில் இந்த வகை காமெடி அப்போதைய ரசிகர்களுக்கு பழக்கமில்லை. புதிதும் கூட! ’புஷ்பக விமானம்’, ‘புஷ்பக்’, புஷ்பக்விமானம்’, ‘பேசும்படம்’ என இந்தி, கன்னட, தெலுங்கு, மலையாள, தமிழ் என பல மொழிகளில் வந்தன. டைட்டில்தான் மாற்றம் செய்யப்பட்டது. மற்றபடி, படத்தில்தான் வசனங்களோ பாடல்களோ எதுவுமே இல்லையே!

பட்டதாரி இளைஞனாக கமல். மெளன மொழிப் படம் என்பது கமல் எனும் யானைக்குக் கொடுக்கப்பட்ட சரியான தீனி. அமலாவும் அப்படித்தான். மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பணக்கார குடிகாரராக சமீர் காகர், ஒரு போதையுடனே அழகுற நடித்திருப்பார். கொலை செய்ய வருபவராக டினு ஆனந்தும், துரோகம் செய்யும் நண்பனாக பிரதாப் போத்தனும், மேஜிஷியனாக கே.எஸ்.ரமேஷும் பிச்சைக்கார கதாபாத்திரத்தில் பி.எல்.நாராயணாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள்.

மந்தாகினி சித்ரா எனும் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. சிங்கீதம் சீனிவாசராவுடன் இணைந்து இந்த நிறுவனம் தயாரிக்க, கெளரிசங்கரின் ஒளிப்பதிவில் படம் முழுக்க கண்ணில் ஒற்றிக்கொள்கிற வண்ணத்தில் ஜொலித்தது; காட்சிக்குக் காட்சி நம்மிடம் பேசியது. ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணியின் பணி மகத்தானது. எல்.வைத்தியநாதனின் இசை, காதலையும் சோகத்தையும் காமெடியையும் கலந்துகட்டி, நமக்கு உணர்த்தியபடி படம் முழுக்கப் பயணித்தது.

ஒண்டுக்குடித்தனத்தில் கழிவறைக்குச் செல்ல நடக்கிற சடுகுடுகள், மேஜிக் செய்பவரைப் பார்த்து நாமும் மேஜிக் செய்ய முனையும் விளைவு, பார்த்ததும் ஏற்படுகிற காதல், பணத்தை கட்டிலில் பரப்பிவைத்து அப்படியே படுத்துக் கொள்கிற ஏக்கம், எதைச் சாப்பிடுவது என்றே தெரியாமல் தவித்து அதிலொரு கை, இதிலொரு கை என்று சபலப்படுகிற மனசு, பிச்சைக்காரனைப் பார்த்து அலட்டல், பணக்காரனைப் பார்த்து பொருமல், உழைப்பால் உயர்ந்தவரைப் பார்த்து மனம் திருந்துகிற நேர்மை, கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு மாறாக, கணவரின் நண்பன் தன் கணவனையே கொலைச் செய்யும் அளவுக்குச் சென்றுவிட்டதை அறிந்து திருந்துகிற மனைவி, திருந்தியவளை ஏற்றுக்கொண்டு, குடிப்பழக்கத்தை விடுகிற பணக்காரர் என்று படம் சொல்லும் சேதிகள் ஏராளம்!

இந்தப் படம் வந்த காலங்களில், ‘டிவி டெக் -  வீடியோ கேசட்’ என்பவை மிகப்பிரபலம். 20 ரூபாய்க்கு ‘டெக்’ வாடகைக்குத் தருவார்கள். பத்து ரூபாய் அல்லது எட்டு ரூபாய்க்கு வீடியோ கேசட் வாடகைக்குக் கொடுப்பார்கள். என் தோழி லதா என்பவள் எனக்காக எனக்குப் பிடித்த பழைய படங்கள், ‘பேசும்படம்’ என பதினைந்து வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு வாங்கிக் கொடுத்தாள். என் மாமா (அக்காவின் கணவர்) ‘டெக்’ வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டில் டிவி இல்லை. மாமா, டிவியும் டெக்கும் கொடுக்க, மூன்று நாட்கள் இரவுகளை, வீடியோக்கள் நிறைத்து, மனதில் சடுகுடு விளையாடின. இத்தனைக்கும் நான் மேலக்கல்கண்டார் கோட்டை சண்முகா தியேட்டரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, அங்கே வந்தது ‘பேசும்படம்’. முதல்நாளன்று திருச்சி மாரீஸ் ராக் தியேட்டரில் பார்த்தாலும் பிறகு அடுத்த வாரத்தில் இரண்டு மூன்று முறை பார்த்தாலும் தியேட்டரில் வேலை பார்க்கும் போது ஒவ்வொரு காட்சியும் பார்த்தாலும், மூன்று நாட்களின் இரவுகளில் இந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருந்தேன் நண்பர்களுடன்!

அந்த அளவுக்கு கவர்ந்த ‘பேசும்படம்’, எல்லா மொழிகளிலும் (!) வந்து, மெளனமாக வெற்றியை சந்தித்தது. பல லட்சங்களுக்குள் படத்தை எடுத்து, கோடிகளை வசூல் செய்தது. சிங்கீதம் சீனிவாசராவ் - கமல்ஹாசன் இணைந்த கூட்டணியின் மற்றுமொரு பெருமுயற்சி இது. பக்கம்பக்கமான வசனங்களையும் பஞ்ச் பஞ்ச் ஆன வசனங்களையும் அரைமணிக்கொரு பாடல்களையும் கேட்டுப் பார்த்து ரசித்து வந்த நமக்கு, இந்த ‘பேசும்படம்’ வேறொரு விதமாக நம் ரசனையை மேம்படுத்தியது. உசுப்பிவிட்டது. எல்லா மாநிலங்களிலும் இந்தப் படத்துக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன. சிறந்த நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என பல விருதுகள் கிடைத்தன!

1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி  வெளியானது ‘பேசும்படம்’. படம் வெளியாகி, 35 ஆண்டுகளாகின்றன. இன்னும் இந்தப் படத்தை உரக்கப் பேசிக்கொண்டே இருக்கிறோம். படத்தைப் பார்க்காதவர்கள், ‘பேசும்படம்’ எனும் பேசாத படத்தை ஒருமுறை பாருங்கள். பிறகு படத்தைப் பற்றித்தான் எல்லோரிடமும் பேசிக்கொண்டே இருப்பீர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in