‘இதற்காக ஏன் சார் வர வேண்டும்?’ - கமலைக் கேட்ட சூர்யா

 ‘இதற்காக ஏன் சார் வர வேண்டும்?’ - கமலைக் கேட்ட சூர்யா

‘விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒத்துக் கொண்டது மற்றும் நடிகர் சிவக்குமார் உடனான நட்பு ஆகியவை குறித்து கமல்ஹாசன் பகிர்ந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'விக்ரம்' அடுத்த மாதம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது. இதில் நடிகர் சூர்யா கடைசி நேரத்தில் நடிக்க வந்தது மற்றும் அவரது சிறப்புத் தோற்றம் பற்றி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.

அதில், "நடிகர் சூர்யாவை நாங்கள் கடைசி நேரத்திலேயே இந்தப் படத்தில் நடிக்க அழைத்தோம். இதற்கு முன்பு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சூர்யாவை நடிக்கவைக்க திட்டம் இருந்தது. ஆனால் அது சரியாக அமையாமல் அடுத்தடுத்து தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்போது இந்தப் படத்தில்தான் அது அமைந்தது. இத்தனைக்கும் நாங்கள் சூர்யாவை நேரில்கூட பார்க்கவில்லை. கடைசி நேரத்தில் தொலைபேசியில் அழைப்பு விடுத்ததும் உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு வந்தார்.

அவர் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்குக்கூட நான் செல்லவில்லை. அவர் நடித்து முடித்ததும்தான் என்னால் அங்கு போக முடிந்தது. என்னைப் பார்த்ததும், ‘இதற்காக ஏன் சார் வர வேண்டும்?’ என்று மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் கேட்டார். நடிகர் சிவகுமார் எனக்கு அண்ணன். நானும் அவரும் அப்போதெல்லாம் வேலை முடித்ததும் பனகல் பார்க்கில் மிளகாய் பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு பேசிய நாட்கள் உண்டு. அப்படியான நட்பு எங்களுடையது. ஆனால் அவரது மகன் சூர்யா என்னை அண்ணன் என்றுதான் அழைப்பார். அப்போதெல்லாம் அவரை இப்படி என் படத்தில் நடிக்கவைப்பேன் என்பது எங்களுக்குத் தெரியாது. அது இனிமேலும் தொடரும்" என கமல் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமில்லாமல் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் 'கேஜிஎஃப்' திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் போல ஒரு வலுவான கதாபாத்திரம். அவர் வரும்போது தியேட்டரில் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்வார்கள் என்று இந்தப் படத்தின் எழுத்தாளர் ரத்னா தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in