'கமல் சாரை சர்வதேச நடிகராகக் கொண்டாட வேண்டும்': நடிகர் மாதவன் நெகிழ்ச்சி!

'கமல் சாரை  சர்வதேச நடிகராகக் கொண்டாட வேண்டும்': நடிகர் மாதவன் நெகிழ்ச்சி!

கமல்ஹாசன் குறித்தும், 'விக்ரம்' படத்தின் கதைக்களம், அதில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது என பல விஷயங்களை யூடியூப் தளம் ஒன்றிற்கு நடிகர் மாதவன் தான் நடித்த 'ராக்கெட்ரி' படம் தொடர்பாக கொடுத்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் மாதவன் பேசியிருப்பதாவது: சக நடிகராகவே இதை நான் சொல்கிறேன். கமல் சாரை போல ஒரு சிறந்த நடிகர் என்று யாரும் இல்லை. அவர் நமக்கு எல்லாம் ஒரு அடையாளம். அவர் எனக்கு நண்பர் என்று சொல்ல முடியாது. அப்படி யோசிக்கக் கூட முடியாது. அதை எல்லாம் தாண்டி அவர் ஒரு மேதை.

நான் அவருடைய தீவிர ரசிகன், பக்தன் என்று கூடச் சொல்லலாம். அவர் நடித்த 'விக்ரம்' வசூலில் ஒரு புதிய வரலாற்றை தற்போது படைத்திருக்கிறது. இது எல்லாமே நேரம் என்று தான் சொல்ல வேண்டும். கமல் சாரின் திறமையைக் கொண்டாட வேண்டிய நேரமிது. சாதாரணமாக அல்ல, அவரை ஒரு சர்வதேச நடிகராக கொண்டாட வேண்டும். இதை அவர் ஒரு நட்சத்திரம் என்பதற்காக மட்டும் கொண்டாட வேண்டுமென்று சொல்லவில்லை. 'விக்ரம்' உண்மையிலேயே ஒரு நல்ல கதைக்களம் கொண்ட படமாக இருக்கிறது. இந்த வயதில் கூட அவருக்கு இப்படி ஒரு படம் தேர்ந்தெடுக்க தைரியம் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு தான் அவர் வருவார் என்பதையும், இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தில் யாரால் நடிக்க ஒப்புக் கொள்ள முடியும்? இப்படி வந்தால் படம் ஜெயிக்கும் என்று முன் கூட்டியே கணிக்கக் கூடிய அந்த தொலைநோக்குப் பார்வைதான் படத்தையும், அவரையும் இன்று ஜெயிக்க வைத்திருக்கிறது. மேலும், தமிழ் சினிமாவையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உதவி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in