‘விக்ரம்’ விளம்பரம்: கபிலுடன் கைகோக்கும் கமல்!

‘விக்ரம்’ விளம்பரம்: கபிலுடன் கைகோக்கும் கமல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்கிறது.

ஜூன் 3-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக கமல் நடித்திருக்கிறார். படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

மிகத் தீவிர கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ், ஓர் இயக்குநராக கமலை இயக்கிய அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், '36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குநரை என் உலக நாயகன் பாராட்ட!' எனப் பதிவிட்டதுடன் கமலுடனான புகைப்படத்தையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.

படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அதற்கான புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த வாரம் தெற்கு ரயில்வேயைச் சேர்ந்த ஒரு ரயிலின் பெட்டிகளில் மிக பிரம்மாண்டமாக 'விக்ரம்' போஸ்டர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது ரசிர்களைக் கவர்ந்தது. இதுமட்டுமல்லாமல் இந்த மாதம் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'விக்ரம்' திரையிடப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'காமெடி நைட்ஸ் வித் கபில்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் கமல்.

திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களுடன் கபில் சர்மா நடத்தும் இந்நிகழ்ச்சி வட இந்திய ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஒன்று. இந்தியிலும் 'விக்ரம்' படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷனுக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார் கமல். கபில் சர்மாவுடன் கமல்ஹாசன் செட்டில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கமல் தரப்பு இதை உறுதிசெய்திருக்கிறது!

Related Stories

No stories found.