`வீட்டில் வெங்கடாஜலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறையாது’: கமல் இப்படி பேசியது ஏன்?

`வீட்டில் வெங்கடாஜலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறையாது’: கமல் இப்படி பேசியது ஏன்?

``வீட்டு காலண்டரில் வெங்கடாஜலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறைந்துவிடாது'' என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். ஜூன் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ``தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் ஒட்டி பிறந்தவை. இரண்டையும் பிரிக்க முடியாது. இங்கு முழு நேர அரசியல்வாதி என யாரும் கிடையாது. நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை, முழு நேர நடிகனும் இல்லை. பாதி நேரங்களில் நடிக்காததால், பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறேன். வருடத்துக்கு ஒரு படம் நடியுங்கள் என்று சிலரும் 3 படங்கள் நடியுங்கள் என்று சிலரும் சொல்கிறார்கள்.

நான் அரசியலுக்கு வந்தபோது, இதையே பலரும் வற்புறுத்தினார்கள். சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர், என் வீடு வந்து சட்டை நனையும் அளவுக்கு அழுதார். என் தகுதிக்கு மீறிய புகழை மக்களான நீங்கள் கொடுத்து இருக்கிறீர்கள். அதை நான் திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் அவர்களை மகிழ்விக்காவிட்டால் அது நம்பிக்கைத் துரோகம். தமிழ்நாட்டு மக்கள் 65 வருடங்களாக, ஒரு குழந்தையை போல தோளில் போட்டு என்னை வளர்த்திருக்கிறார்கள். நான் தடுமாறி விழும்போது என்னை எழுந்திருக்க வைத்தவர்களும் அவர்கள்தான்.

விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ்
விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ்

அரசியல் களத்தில் புது நாகரிகத்தைக் கொண்டு வர நான் அரசியலுக்கு வந்தேன். இப்போது மொழி குறித்து பேசுகிறார்கள். இந்தியாவின் சிறப்பே பன்முகம் தான். எல்லோரும் இணைந்து கைகோர்த்து செல்வதுதான் இந்தியா. எனக்கு தமிழும் சரி, இந்தியும் சரி சுமாராகத்தான் பேச வரும். நாம் இந்திப் படிப்போம், சீன மொழி படிப்போம், விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால் தாய் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழைத் தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்து போராடுவோம்.

டிஜிட்டல் வந்ததால் தியேட்டர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். வீட்டு காலண்டரில் வெங்கடாஜலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறைந்துவிடாது. நல்லவற்றை எப்போதும் ஏற்க வேண்டும்'' என்றார்.

விழாவில் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, அனிருத், பா.ரஞ்சித், ஐசரி கணேஷ், நடிகைகள் ராதிகா, லிஸி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in