
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று அம்மாநில கலாசித்திர அகாடமி தலைவர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கேரள சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. கரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, இந்த விழா நடைபெற இருக்கிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் 18-ம் தேதி விழாவை தொடங்கி வைக்கிறார். 14 தியேட்டர்களில் 180 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
கடந்த வருடம் முதல் தற்போது வரை மறைந்த திரைக் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது. புத்ததேப் தாஸ்குப்தா, திலீப்குமார், லதா மங்கேஷ்கர், கே.எஸ்.சேதுமாதவன், பி.பாலச்சந்திரன், குஞ்சுகுட்டன், நெடுமுடி வேணு, கே.பி.ஏ.சி லலிதா உட்பட பலருக்கு அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.
மறைந்த இயக்குநர் சேதுமாதவன் பல மலையாளத் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் இயக்கத்தில் தேசிய விருதுபெற்ற ’மறுபக்கம்’ என்ற தமிழ்த் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகுமார், ராதா, ஜெயபாரதி நடித்திருந்தனர். தேசிய விருது பெற்ற இந்தத் திரைப்படம் திரையிடும்போது கலந்துகொள்ள, நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படக் இருக்கிறது என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில், ஐஎஸ் பயங்கரவாத தாக்குதலில் இரு கால்களையும் இழந்த துருக்கியை சேர்ந்த இயக்குநர் கலன் கவுரவிக்கப்பட இருக்கிறார்.