பிக்பாஸ் எவிக்‌ஷனில் கமல்ஹாசன்?!

இந்த சீஸனோடு விலக யோசனை
பிக்பாஸ் எவிக்‌ஷனில் கமல்ஹாசன்?!

அதிகரிக்கும் திரைப்பட பணிகள், அரசியல் கடமைகள் உள்ளிட்ட காரணங்களால், நடப்பு சீஸனோடு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விடைபெற இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே, மக்கள் மத்தியிலான அதன் ஏகோபித்த வரவேற்புக்கும் வெற்றிக்கும், நிகழ்ச்சியை முன்னின்று வழங்கிய கமல்ஹாசனும் முக்கிய காரணமானார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமலின் ஒளிவட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கால்பதிக்க உதவிகரமானது.

கமல்ஹாசனின் இயல்பான ஹாஷ்யங்கள், குற்றம் கண்ட இடத்திலும் கடித்தோச்சி மெல்ல எறியும் பாங்கு, விசாலமான பல்துறை அறிவு உள்ளிட்டவை, இதர இந்திய மொழிகளில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்து தமிழை தனித்து காட்டின. சுயபுராணம் மற்றும் அறிவுஜீவிகளுக்கே உரிய சிறு இம்சைகள் தென்படினும், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசனையும் பிரித்து பார்க்க முடியாத நிலை உருவானது.

கமல்ஹாசனுக்கும் பிக்பாஸ் தளம் அவசியமாக இருந்தது. கலைத்தாகம் மிகுந்த கமல்ஹாசனின் திரைப்படங்கள் விமர்சகர்களால் வரவேற்பு பெற்றபோதும் வணிக ரீதியிலான வெற்றிக்கு தடுமாறவே செய்யும். அப்படி அடுத்தடுத்து பொருளாதாரத்தில் அடிவாங்கிய கமலுக்கு, பிக்பாஸ் வாய்ப்பு ஆசுவாசமளித்தது. மேலும் அரசியலில் கால்வைத்ததும் தனக்கே உரிய நுணுக்கமான அணுகுமுறையால், பிக்பாஸ் மேடையை தனக்கான அரசியல் மேடையாகவும் அவ்வப்போது மாற்றிக்கொண்டார்.

தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தவும், கொள்கைகளை முன்வைக்கவும், அரசியல் எதிரிகளை சதாய்க்கவும் பிக்பாஸ் தளம் அவருக்கு உதவவும் செய்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா காரணமாக இதர நட்சத்திரங்கள் மக்களிடமிருந்து துண்டாப்பட்டபோது, பிக்பாஸ் வாயிலாக நேயர்களின் வரவேற்பரையில் கமல் உலாவினர்.

முரண்பாடுகளுக்கு பேர்போன கமலுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவை வெடிக்கச் செய்திருக்கின்றன. நிகழ்ச்சியின் தொடக்கமாக விளம்பரதாரர்கள் பெயர்களை சொல்வதில் தொடங்கி நிகழ்ச்சியின் ஆட்சேபகரமான உள்ளடக்கங்கள், போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில், தனக்கான நிலையிலிருந்து கமல் பின்வாங்கவே இல்லை.

அதே போன்று ஓடிடியில் வெளியான 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோதே அதற்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இருக்காது என ஊகித்தார். அது உண்மையானதில், திரைப்பட பணிகளை காரணமாக்கி ஓடிடி நிகழ்ச்சியிலிருந்து கமல் வெளியேற, அவர் இடத்தை சிம்பு நிரப்ப முயன்றார். இதனால் இந்த 6-ம் சீஸனுக்கே கமல்ஹாசன் இடம்பெறுவாரா என்ற ஐயங்கள் தலைகாட்டின.

அதற்கேற்ப கமல் பிரவேசித்த அரசியல் களம் அவரை கால்வாரியது. வெற்றிகளைப் போலவே கமல் பார்க்காத தோல்விகளும் இல்லை. மீண்டெழ தகுந்த தருணத்துக்காக காத்திருந்தார். அதிமுகவில் கோஷ்டி பூசல், திமுகவில் உதயநிதி உதயம் ஆகியவற்றின் மத்தியில் வெற்றிடம் தென்படுவதாக கணித்தார். ஒப்பீட்டளவில் ஜூனியரான நடிகர் விஜய் அமைதியாக அரசியலுக்கு தயாராகும்போது, பழுத்த தான் விலகியிருப்பது சரியில்லை என்று கமல் முடிவெடுத்தார். அதன்படியே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் இணைய முடிவெடுத்திருக்கிறார். இந்த அரசியல் காரணங்களுக்கு அப்பால் திரைத்துறை சார்ந்த பணிகளும் கமல்ஹாசனை நெருக்கி வருகின்றன.

விக்ரம் வெற்றியில் குதூகலம் கண்ட கமல்ஹாசன், அடுத்தடுத்து வந்த திரைப்பட வாய்ப்புகளுக்கு தயங்காது சம்மதித்திருக்கிறார். அப்படி சுமார் அரை டஜன் படங்களில் கமல்ஹாசன் தனது அடுத்தக்கட்ட திரைப் பயணத்தை தீர்மானித்திருக்கிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் மூலம் புதிய படங்களை உருவாக்குவதிலும் கமலுக்கு நேரம் அதிகம் தேவைப்பட்டது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு இரண்டாம்பட்சமாக மாறியது.

கமலின் அதிருப்தியை அதிகமாக்குவது போல, இந்த சீஸனின் போட்டியாளர்களும், திரைக்கு பின்னிருந்த படைப்பாளர்களும் அடிக்கடி சொதப்பி வைத்தனர். மக்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு குறைந்தால் அது தன்னையும் பாதிக்கும் என்பதை கமல் உணர்ந்தார். பிக்பாஸ் சீஸன் 6, சுவாரசியமாக செல்வதற்கு தன்னாலான பங்களிப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிப் பார்த்தார். நிகழ்ச்சி அலுப்புத் தட்டுவதாக, மறைமுகமாகவும் நேரிடையாகவும் சொல்லிப்பார்த்தார்.

எந்தவொரு பிரபல நிகழ்ச்சிக்குமே உரிய எழுச்சியைப் போன்று, சரிவும் தவிர்க்க முடியாதது என்பதை கமலும் உணர்ந்தே இருக்கிறார். இதனால் இந்த சீஸனோடு அவர் பிக்பாஸ் தமிழுக்கு முழுக்க போடவிருக்கிறார் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். இவை தற்போதைய நிலவரம் மட்டுமே. அடுத்த சீஸன் ஏற்பாடுகளுக்குள் எதுவும் நடக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in