’கே.பாலசந்தருடன் ஒன்றாக இருந்த காலம்...’ - விருந்து கொடுத்த சிரஞ்சீவிக்கு கமல் நன்றி

’கே.பாலசந்தருடன் ஒன்றாக இருந்த காலம்...’ - விருந்து கொடுத்த சிரஞ்சீவிக்கு கமல் நன்றி

தனக்கு விருந்து கொடுத்த நடிகர் சிரஞ்சீவிக்கு நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன், கே.பாலசந்தருடன் ஒன்றாக இருந்த காலத்தை நினைவுகூர்ந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம், தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், செம்பன் வினோத், நரேன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நேற்று நடந்தது.

இதில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு நடிகர் சிரஞ்சீவி, தனது வீட்டில் விருந்து வைத்தார். இதில் இந்தி நடிகர் சல்மான் கானும் கலந்துகொண்டார். இதுபற்றி நடிகர் சிரஞ்சீவி, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

’நன்றி சிரஞ்சீவி காரு. கே.பாலசந்தரின் கீழ் நாம் ஒன்றாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்ததில் மகிழ்ச்சி. நண்பர் சல்மான் பாயுடன் உரையாடியதும் சிறப்பாக இருந்தது. அது இனிய மாலையாக அமைந்தது. எங்களை உபசரித்த உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி’ என்று ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதே போல இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in