லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார்... உதவி இயக்குநர்களுக்கு அப்பாச்சி பைக்: சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு கார்... உதவி இயக்குநர்களுக்கு அப்பாச்சி பைக்: சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் சொகுசு காரை பரிசளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்,நரேன், செம்பன் வினோத் நடித்துள்ள படம் 'விக்ரம்'. சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் கமல்ஹாசனையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

படம், வெளியான இரண்டே நாளில் உலகம் முழுவதும் நூறு கோடி வசூலித்தது. தொடர்ந்து வசூலித்து வருகிறது.

'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி, கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் ’அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள், உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தால் நெகிழ்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "லைஃப் டைம் செட்டில்மென்ட் லெட்டர். இதைப் படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது! நன்றி ஆண்டவரே" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன், லக்சஸ் சொகுசு காரை பரிசளித்துள்ளார். உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு, அப்பாச்சி 160 ஆர்டிஆர் இரு சக்கர வாகனத்தை கமல் வழங்கியுள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in