‘விக்ரம்’ விளம்பரம்: சுவைபடத் தயாராகும் புதிய வீடியோவில் உலக நாயகன்!

‘விக்ரம்’ விளம்பரம்: சுவைபடத் தயாராகும் புதிய வீடியோவில் உலக நாயகன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் திரையில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

பா.இரஞ்சித்துடன் அடுத்த படம், லோகேஷூடன் மீண்டும் ஒரு படம் ஆகியவை குறித்த அறிவிப்புகள், கமல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க விரும்பியது என பல ஹைலைட்டான தருணங்கள் நேற்றைய நிகழ்வில் அரங்கேறின.

இப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் போன மாதத்தில் இருந்தே படத்தின் புரோமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டது. அந்த வகையில், தென்னிந்திய ரயில் பெட்டிகளில் பிரம்மாண்டமாக 'விக்ரம்' பட போஸ்டர் ஒட்டப்பட்டது. தனக்கு மிகவும் பிடித்த ரயிலில் இருந்தே 'விக்ரம்' பட புரொமோஷன் வேலைகள் ஆரம்பித்ததில் மகிழ்ச்சி எனவும் கமல் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்ததாக, கடந்த மே 11-ம் தேதி படத்தின் முதல் பாடலான 'பத்தல பத்தல' வெளியானது. “இந்தப் பாடல் யூடியூபில் கடந்துள்ள பார்வைகளும் இது ட்ரெண்டிங்கில் உள்ளதும் எனக்கே புதிதாக இருக்கிறது, இதுவரை நானும் பெறாதது” என கமல்ஹாசன் நேற்று இசைவெளியீட்டு விழா மேடையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லேஜ் குக்கிங் சேனலைச் சேர்ந்த சிலர் நடித்து இருப்பதாகவும், அவர்கள் சமைப்பது போன்ற சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் 'விக்ரம்' படத்தின் புரொமோஷன்களின் ஒரு பகுதியாக வில்லேஜ் குக்கிங் சேனலைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் விரைவில் வீடியோவில் தோன்ற இருக்கிறார். இதற்கான ஷூட் விரைவில் ஆரம்பிக்கிறது. 'KamalHassan Virunthu With Village Cooking Channel' என ரசிகர்கள் வீடியோவுக்காக எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

சுவாரசியமான சமையல் முறைகளுக்காவும் அதனை வித்தியாசமான ஒலியுடன் அவர்கள் பேசும் விதத்திற்காகவும் புகழ்பெற்றது இந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்'. இதற்கு முன்பு தேர்தல் சமயத்தில் ராகுல் காந்தி இவர்கள் கிராமத்திற்கு வந்து இவர்களுடன் உணவருந்திய வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in