கமல் - கிரேஸி கூட்டணி சிரிக்கச் சிரிக்கச் சொன்ன ‘மகளிர் மட்டும்!’

- வில்லன் நாசரை காமெடி நாயகனாக்கிய கமல்!
மகளிர் மட்டும் படத்தில்...
மகளிர் மட்டும் படத்தில்...

தான் ஒரு மகா நடிகன் என்றாலும் தான் தயாரித்த சில படங்களில் மற்ற நடிகர்களை நாயகர்களாக்கி அழகு பார்ப்பவர் கமல். ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தில் சத்யராஜ், ‘நளதமயந்தி’, விக்ரமை வைத்து ‘கடாரம் கொண்டான்’ முதலான படங்களைத் தயாரித்த கமல் படைத்ததுதான் ‘மகளிர் மட்டும்’. படத்தின் நாயகன், அதுவரை வில்லத்தனங்களில் நம்மை மிரட்டிக்கொண்டிருந்த நடிகர் நாசர்!

அலுவலகத்தில் ஆணாதிக்க வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் தொல்லைகளைச் சமாளிக்க, மூன்று பெண்கள் சேர்ந்து, கைகோத்துக்கொண்டு, எடுக்கும் அடுத்தக்கட்ட அலப்பறை சரவெடிகள்தான் ‘மகளிர் மட்டும்’.

’மகளிர் மட்டும்’
’மகளிர் மட்டும்’

அந்தக் குடும்பம், கணவன், மனைவி, குழந்தை என அழகாக இருக்கிறது. மிடில் கிளாஸ் குடும்பம். யூனியன் பிரச்சினையால் ஸ்டிரைக். இதில் வேலையிழந்து கணவன் வீட்டில் முடங்கவேண்டிய நிலை. கைக்குழந்தையுடன் அல்லாடுகிறது குடும்பம்.

அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், படித்த மனைவி வேலைக்குச் செல்கிறார். குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டையும் கவனித்துக் கொண்டிருக்கிறான் கணவன். அந்த மனைவியின் பெயர் ஜானகி.

கீழ்த்தட்டுக் குடும்பம். சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் குடிகாரக் கணவன் ஒருபக்கம், வறுமை இன்னொரு பக்கம் என வெந்துநொந்து போகிறாள் மனைவி. சம்பாதிக்கும் பணத்தில், பாதி குடிக்கே போய்விட, மீதிப் பணம் குடும்பத்துக்குப் போதவில்லை. படிக்காத மனைவி எங்கேனும் வேலைக்குப் போக நினைக்கிறாள்.

அப்படி வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான், குடும்பத்தில் மூன்று வேளையும் சாப்பிடமுடியும் என்கிற நிலை. ஜானகி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் ‘ஹவுஸ் கீப்பிங்’ வேலை செய்கிறாள். போதைக்கு அடிமையாகிப்போன கணவனுக்கு வார்க்கப்பட்ட அந்த பரிதாப மனைவியின் பெயர்... பாப்பம்மா!

அந்தப் பெண் ஹைகிளாஸ் குடும்பம். அவளுக்கு வேலையைப் பறிகொடுத்து வீட்டில் இருக்கிற கணவன் இல்லை. குடிகாரப் புருஷனிடமும் சிக்கிக் கொள்ளவில்லை. ஆமாம்... அவளுக்குக் கல்யாணம் இன்னும் நடக்கவில்லை. ’’கையில இவ்ளோ பணம் கொடுங்க. இத்தனை பவுன் நகைகள் வேணும். பையனை கஷ்டப்பட்டு படிக்கவைச்சிருக்கோம். அதான் கேக்கறோம்’’ என்று அவளைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரிடம், ’’மாப்பிள்ளைக்கு நான்தான் தாலி கட்டுவேன்’’ என்கிறாள். அதனால் திருமணம் கைகூடாமல் போகிறது.

‘’இப்போதைக்கு கல்யாணம் வேணாம். நான் வேலைக்குப் போறேன்’’ என்று சென்னைக்கு வந்து, ஜானகியும் பாப்பம்மாவும் வேலை பார்க்கும் அந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், டிசைனராக வேலைக்குச் சேருகிறாள். கம்ப்யூட்டருடனும் நவீனங்களுடனும் உறவாடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பெயர்... சத்யா!

ஆக, மேல்தட்டுக் குடும்பத்தில் இருந்தும் நடுத்தரக் குடும்பத்தில் இருந்தும் விளிம்பு நிலைக் குடும்பத்தில் இருந்தும் வேலைக்கு வருகிற மூன்று பெண்களும் அங்கே இருக்க, அலுவலக மேனேஜர் பாண்டியன், நல்ல சம்பளம், கார், பங்களா, மனைவி என்று உற்சாகத்துக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லாமல் வாழ்கிறார்.

சபலக் கேஸான பாண்டியன், பெண்களுக்கு அடிக்கடி தொந்தரவுகளைக் கொடுக்கிறார். கூட்டிப்பெருக்க வரும் பாப்பம்மாவையும் விடமாட்டார். டைப் செய்து அக்கவுண்ட்ஸ் பார்க்கும் ஜானகியையும் சும்மா அனுப்பமாட்டார். டிசைனிங் செய்கிற சத்யாவிடமும் சில்மிஷம் பண்ணுவார். ஒருகட்டத்தில், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் தங்கள் வேதனைகளையும் கோபங்களையும் கொட்டி ஆறுதல் தேடிக்கொள்ள, அங்கே அவர்களின் நட்பு இன்னும் பலப்படும்!

சத்யாவாக ரேவதி. ஜானகியாக ஊர்வசி. பாப்பம்மாவாக ரோகிணி. அலுவலக மேனேஜர் பாண்டியனாக கதையின் நாயகன் நாசர்.

’மகளிர் மட்டும்’ நாகேஷ்
’மகளிர் மட்டும்’ நாகேஷ்

ரேவதியிடம் ஒருவகையில் அத்துமீறுகிறார். ஊர்வசியிடம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உரசுகிறார். ரோகிணியிடம் கட்டிப்பிடித்து அத்துமீறுகிறார். இந்த மூன்றுபேரும் மூக்கன் என்கிற பட்டப்பெயர் கொண்ட பாண்டியனின் கொட்டத்தை அடக்கவேண்டும். அதற்கு முன்னதாக, மேனேஜருக்கு கூஜா பிடிக்கும் ஆள்காட்டி, மாதவியை (‘பசி’ சத்யா) தட்டி வாயடைக்க வேண்டும் என்று ஒருபுள்ளியில் சிந்தனையைக் குவிக்கிறார்கள்!

அலுவலகத்தில், நாசருக்கு காபி போட்டுக்கொடுக்கும் பணியும் ஊர்வசியுடையது. இதில் எலி மருந்து டப்பாவும் சர்க்கரை டப்பாவும் ஒரேமாதிரி இருப்பதை, ஏற்கெனவே ரோகிணியிடம் சொல்லிக் குறைபட்டுக் கொண்டிருப்பார் ஊர்வசி.

’’கீழே இருக்கிற எலி மருந்து டப்பாவை, ஏன் டேபிள் மேல வைக்கிறே’’ என்று திட்டுவார். இந்த நிலையில், நாசர் காபி கேட்க, அப்போது டேபிளில், எலி மருந்து டப்பா இருக்க, அதை சர்க்கரை என்று நினைத்து, காபியில் கலந்து நாசருக்குக் கொடுப்பார் ஊர்வசி. நாசரின் சுழல் நாற்காலி கொஞ்சம் டேமேஜாகியிருக்கும். ஏற்கெனவே விழுந்திருப்பார். ’’இதை சரிபண்ணுங்கப்பா’’ என்று திட்டியிருப்பார். ஆனால், நாற்காலி இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஊர்வசி வைத்துச் சென்ற காபியை எடுக்க முனையும் போது அந்த சுழல் நாற்காலியால் விழுந்து மயங்கிவிடுவார் நாசர். காபிக் கோப்பை ஒருபக்கம், சிந்திய காபி ஒருபக்கம், நாசர் ஒரு பக்கம் மயங்கிய நிலையில்... என்றிருப்பதைப் பார்த்த ரேவதி, நாசரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வார்.

இந்த விஷயம் ஊர்வசிக்கும் ரோகிணிக்கும் தெரியவந்து, அவர்களும் ஆஸ்பத்திரி செல்வார்கள். அதேசமயத்தில், தீவிரவாதி ஒருவன் சயனைடு சாப்பிட்டு செத்துப் போயிருக்க, போலீஸார் தீவிரவாதி உடலுடன் அங்கே வர, போலீஸைப் பார்த்து மூன்று பேரும் பயந்துபோவார்கள். , ’’ஸாரி இறந்துட்டாரு’’ என்று போலீஸாரிடம் டாக்டர் சொல்ல, நாசர் இறந்துவிட்டதாக தப்பாகப் புரிந்துகொண்டு கதறிப் பதறி உளறித் தவிப்பார்கள் மூன்று பெண்களும்!

’மகளிர் மட்டும்’ இந்தி ரீமேக்கில் கமல்
’மகளிர் மட்டும்’ இந்தி ரீமேக்கில் கமல்

நாசரின் பிரேதத்தை ஆய்வு செய்யும்போது காபியில் விஷம் கலந்தது தெரிந்துவிடும் என்பதால், பிரேதத்தைக் கடத்தத் திட்டமிடுவார்கள். இந்தக் களேபரத்தில், தீவிரவாதியின் உடலை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்தத் தீவிரவாதி (சடலம்)... நாகேஷ்.

ஒருவழியாக இது ஓய்ந்திருக்க, நாசருக்கு மயக்கம் தெளிந்துவிடும். எலிமருந்து விஷயமும் தெரிந்துவிடும். இதைவைத்தே மூன்று பேரையும் ’ப்ளாக்மெயில்’ செய்து தன் தோட்டவீட்டுக்கு வரச் சொல்லுவார் நாசஎ. அவர்களுடன் ஜாலியாக இருக்கத் திட்டமிடுவார். நாசரின் இந்தத் திட்டத்தைக் கொண்டே, தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்வார்கள் மூன்றுபேரும்!

அந்த மூன்று பெண்களும் சபலக்கேஸ் ஆசாமியிடம் இருந்து தப்பினார்களா, ஜொள்ளுப்பார்ட்டி மேனேஜரின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் நிர்வாகத்துக்குத் தெரிந்ததா? இறுதியில் என்னதான் ஆனது என்பதுதான் ‘மகளிர் மட்டும்’. இப்படியொரு கதையை, அழ அழச் சொல்லாமல், சிரிக்கச் சிரிக்கச் சொன்னதுதான் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஸ்பெஷல்!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த படம். கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசன் கிரேஸிமோகனுடன் இணைந்து எழுதினார். கமலின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கினார். . இளையராஜாவின் இசையில் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில் மிகச் சிறப்பான படம் என்று எல்லோரும் சிரித்து ரசித்து, ரசித்துச் சிரித்துக் கொண்டாடினார்கள்!

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அச்சு அசலாக அதற்குள் பொருந்தி, நடிப்பாலும் முகபாவங்களாலும் முத்திரை பதிக்கக் கூடிய அசாத்திய நடிகைகள் ரேவதியும் ஊர்வசியும் ரோகிணியும்! மூன்று பேரும் தங்களின் மாறுபட்ட நடிப்பால், படத்தை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்திக் காட்டினார்கள்.

அதிலும் அப்பாவித்தனமான ஊர்வசியும் வார்த்தைக்கு வார்த்தை ’கவுன்ட்டர்’ கொடுத்துக்கொண்டே இருக்கிற ரோகிணியும் இந்த இரண்டு பேருக்கும் நேர்மாறாக, நின்று நிதானித்து யோசித்துச் செயல்படுகிற ரேவதியும் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அமர்க்களப்படுத்துவார்கள். சென்னை பாஷையில் ரோகிணி கலக்கியெடுத்தது தனி எபிஸோடு!

கிரேஸி மோகனின் வார்த்தை கபடிகளைச் சொல்லவேண்டுமா என்ன? ’’என்ன தைக்கிறே?’’ என்று 'பசி' சத்யா கேட்பார். ’’சல்வார் கமீஸ்’’ என்று வேலை பார்க்கும் பெண் சொல்லுவார். ’’உயரம் ரொம்ப கம்மியா இருக்கு. இது சல்வார் ’கம்மீஸ்’. ஜப்பானுக்குத்தான் அனுப்பணும்’’ என்பார் ‘பசி’ சத்யா. நாசர் சொல்லி, பட்டுப்புடவை வாங்கக் கடைக்குச் செல்வார் ஊர்வசி. ஒரே நிமிடத்தில் புடவையை செலக்ட் செய்வார். ஆச்சரியப்பட்டுப் போவார் கடைக்காரர். ’’இது எனக்கில்ல. இன்னொருத்தருக்கு’’ என்பார் ஊர்வசி. ’’அதானே பாத்தேன்’’ என்பார் கடைக்காரர்.

ஆஸ்பத்திரியில் இருந்து ’’தீவிரவாதி பாடியைக் காணோம்’’ என்று இன்ஸ்பெக்டர், மேலதிகாரிக்கு போன் செய்து சொல்வார். வீட்டில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அதிகாரி, ’’என்னய்யா நீங்க?’’ என்று திட்டுவார். அப்போது பாத்ரூமில் இருந்து குளித்துவிட்டு அவரின் மனைவி வருவார். ’’என்னாச்சுங்க’’ என்று அக்கறையுடன் கேட்பார். ’’பாடி மிஸ்ஸிங்’’ என்பார். ’’நானும் அதைத்தாங்க தேடிக்கிட்டே இருக்கேன்’’ என்று சொல்ல, துளியும் ஆபாசம் இல்லாத இந்தக் காட்சியும் வசனமும் கேட்டு, சிரித்துச் சிரித்தே டயர்டானார்கள் ரசிகர்கள்!

படம் நெடுக, வார்த்தை விளையாட்டுகளாலும் சின்னச் சின்னக் காமெடிகளாலும் அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அன்றாட வாழ்க்கையில் நேரும் டீஸிங்குகளையும் டார்ச்சர்களையும் பளீரென்றும் பொளேரென்றும் சொல்லியிருப்பதுதான் ‘மகளிர் மட்டும்’ படத்தின் ஸ்பெஷல் வெற்றி!

இறந்த நாகேஷை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி, வயிற்றை சிரித்துச் சிரித்தே பதம் பார்க்கும். பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு செல்ல, பக்கத்தில் இருப்பவர்கள் பலரும் அந்த சுடுகாடு, இந்த சுடுகாடு என்றே டிக்கெட் கேட்பார்கள். ’’டிக்கெட் எடுத்தாச்சா?’’ என்று நாகேஷிடம் கண்டக்டர் கேட்க, ’’அவரு எப்பவோ டிக்கெட் எடுத்துட்டாரு’’ என்று ரோகிணி சொல்ல, ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பினார்கள் ரசிகர்கள். போதாக்குறைக்கு, தலைவாசல் விஜய், பிணத்துடன் சண்டை போடுவார். அந்தக் காட்சி முழுக்க பிணமாக இருந்தே அப்ளாஸ் அள்ளிக்கொள்வார் நாகேஷ் (படத்தின் இந்தி ரீமேக்கில், நாகேஷ் கதாபாத்திரத்தில் பிணமாக நடித்தவர் கமல்ஹாசன். ஆனால், ஏனோ படம் வெளிவரவே இல்லை).

வில்லனாகப் பார்த்துப் பழகிய நாசர், இதில் நாயகன். அதுவும் காமெடி நாயகன். ஏதேதோ ஜாலங்கள் செய்து நொந்துபோய், மனைவி ரேணுகாவிடம் புடவையைக் கொடுப்பது முதலான காட்சிகளில் நாசரின் நடிப்பு அசத்தல் ரகம்!

இறுதியில், நிறுவனத்தின் முதலாளியாக கமல் வருவது ஆடியன்ஸ்க்கான சர்ப்ரைஸ். மேனேஜர் நாசருக்கு ஃபனிஷ்மென்ட் தருவதும், ஊர்வசியின் கணவருக்கும் ரோகிணியின் கணவருக்கும் நல்ல வேலைக்கு சிபாரிசு செய்து வைத்திருப்பதும் என மளமளவென விஷயங்களைச் சொல்ல, நாம் எல்லோருமே ‘அப்பாடா’ போடுவோம்! முத்தாய்ப்பாக, ரேவதியிடம், ’’என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா?’’ என்று கமல் கேட்பதும் ரேவதி நாணுவதுமாக ‘சுபம்’ கார்டு போடுவார்கள்.

ஊர்வசியின் அப்பாவித்தனம் ஒருபக்கம் கைத்தட்டல்களை அள்ளும். ரோகிணியின் மெட்ராஸ் பாஷையால் இன்னொரு பக்கம் விசில் பறக்கும். ரேவதியின் நிதானம் பிரமிக்கவைக்கும். படத்தின் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். பாடல்களை வாலி எழுதினார். இதில் சுவாரஸ்ய ஆச்சரியம்... படத்தில் ஒரே நாயகன். ஆனால், எஸ்பி.பி, எஸ்.என்.சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி என மூன்று ஆண் குரல்கள் பாடியிருக்க, மூன்று நாயகிகள் இருந்தாலும் பின்னணியில் ஒரே நாயகியாக எஸ்.ஜானகி, மூவருக்கும் விதம் விதமாகக் குரலெடுத்து பிரமிப்பூட்டினார்.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ’மகளிர் மட்டும்’ 1994-ம் வருடம், பிப்ரவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. 29 ஆண்டுகள் ஆனாலும் இன்றைக்கும் ‘மகளிர் மட்டும்’ மகிழ்ச்சி மத்தாப்பாய் வெடித்துக்கொண்டே இருக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in