காமகோடியன்: பூஞ்சிட்டுக் குருவிகளின் காதலன்!

- கவிஞர் காமகோடியன் நினைவு தின பகிர்வு
காமகோடியன்: பூஞ்சிட்டுக் குருவிகளின் காதலன்!

படங்களைக் கூட பலரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், பாடல்களுடன் பயணிக்கிறவர்கள் இங்கே அதிகம். அதிலும் பாடியவர்களைக் கூட மறந்துவிடுகிறவர்கள், பாடலின் வரிகளில் தங்கள் மனம் பறிகொடுத்து லயித்திருப்பார்கள். சில தருணங்களில், பாடலை எழுதியவரைக் கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால், காலங்கள் கடந்தும் பாடலையும் பாட்டு வரிகளையும் சொல்லி சிலாகித்துக் கொண்டே இருப்போம்தானே. இப்படி பல பாடல் வரிகளின் மூலம் நம் நெஞ்சம் தொட்ட பாடலாசிரியர்களில் கவிஞர் காமகோடியனும் ஒருவர்.

மதுரைப்பக்கம்தான் சொந்த ஊர். எல்லோரையும் ஈர்த்த சினிமா, இவரையும் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. சிறுவயதில் இருந்தே கவிதைகளிலும் மரபுக்கவிதைகளிலும் நாட்டம் இருந்தது. நிறைய எழுதிக்குவித்தார். நட்பு வட்டத்தில் இவருக்கு இவையெல்லாம் சேர்த்து தனித்ததான அடையாளத்தைக் கொடுத்தது. சினிமாவுக்குப் பாட்டெழுதும் ஆசை இன்னும் அதிகமானது.

போதாக்குறைக்கு இயக்குநர் மாதங்கன், இவரின் உறவினர். உடனே சீனிவாசன், சென்னைக்குக் கிளம்பி வந்தார். மாதங்கனிடம் தன் ஆசையைச் சொல்லி அவருடனேயே தங்கிக் கொண்டார். ஆமாம், கவிஞர் காமகோடியனின் இயற்பெயர் சீனிவாசன். அப்போது மாதங்கனும் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டுதான் இருந்தார். அந்தச் சமயத்தில், பத்திரிகைகளுக்கு கவிதைகள் எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார் சீனிவாசன். இவரின் கவிதையில் ஒரு நயமும் லயமும் இருப்பதை அறிந்த ‘இதயம் பேசுகிறது’ மணியன், சீனிவாசனை அழைத்தார். திறமையானவர்களை மனம் திறந்து பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தி, அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் முனைப்பு கொண்டவர் மணியன்.

சீனிவாசனையும் அப்படித்தான அழைத்துப் பாராட்டினார். “நிறைய எழுதுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார். “கவிதை எழுதுபவர்களுக்கு வித்தியாசமாகப் பெயர் இருக்கவேண்டும். அதுதான் முதலில் எல்லோரையும் கவர்ந்துவிடும். அதனால், சீனிவாசன் என்ற பெயரில் எழுதாதீர்கள். உங்களுக்கு நானே புனைப்பெயர் வைக்கிறேன்’’ என்று மணியன் சொன்னார். சீனிவாசன் சம்மதித்தார். காஞ்சி காமகோடி பீடத்தின் மீது அளவற்ற பக்தியும் மரியாதையும் கொண்டிருந்த மணியன், சீனிவாசனுக்கு ‘காமகோடியன்’ என்று பெயர் சூட்டினார். சீனிவாசன் கவிஞர் காமகோடியன் என்றானார்.

அவர் பெயர் சூட்டிய ராசியோ என்னவோ... இயக்குநர் மாதங்கனுக்கு படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு மாதங்கனுக்கு எல்லாவகையிலும் உதவிகள் செய்தார் காமகோடியன். மாதங்கனின் இயக்குநராகும் கனவு அங்கே பூர்த்தியானது. அதேபோல் தன் உறவினராகவும் தனக்கு எல்லாவகையிலும் பக்கபலமாகவும் இருந்த காமகோடியனின் பாடல் எழுதும் ஆசையையும் அங்கே ஆரம்பித்துவைத்தார் மாதங்கன்.

’வாழுகின்ற மக்களுக்கு/ வாழ்ந்தவர்கள் பாடமடி/ பெற்றவர்கள் பட்ட கடன்/பிள்ளைகளைச் சேருமடி/ சேர்த்து வைத்த புண்ணியம்தான்/ சந்ததியைக் காக்குமடி’ என்கிற தன் முதல் பாடலிலேயே கவனம் ஈர்த்தார் காமகோடியன்.

1980-ம் ஆண்டு, ஜேசுதாஸ் பாடி, ‘பொன்னகரம்’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றது. சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார்கள்.

இந்தப் பாடலுக்குப் பிறகு மெல்லிசை மன்னரின் இசையில், சங்கர் கணேஷ் இசையில், சந்திரபோஸ் இசையில் என பல பாடல்களை எழுதி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவந்தார் காமகோடியன். ஆனாலும் முதல் பாடலில் தடம் பதித்த அளவுக்கு பெரிய அளவில் பாடல்கள் அமைந்துவிடவில்லை அவருக்கு!

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் படத்துக்கு கவிஞர் வாலி பாட்டெழுத வந்திருந்தார். அப்போது சிவாஜியின் சகோதரர் வி.சி.சண்முகம், கவிஞர் வாலியிடம்,

‘ஆடொன்று வளர்ப்பார்கள் தம் வீட்டில்/ அதை அன்பாக மேய்ப்பார்கள் வயர்காட்டில்/ உறவொன்று விருந்தென்று வரும்போது/ அந்த வெள்ளாடு உணவாகும் அப்போது’ என்ற காமகோடியனின் முதல் பாடலின் வரிகளைச் சுட்டிக்காட்டி, ‘’பட்டுக்கோட்டையார் மாதிரி எழுதிருக்கீங்க’’ என்று வாலியைப் பாராட்டினார். ’’அட... இந்தப் பாட்டா? அருமையான பாட்டாச்சே. ஆனா இதை நான் எழுதலியே. யாரோ புது ஆள் எழுதினதுன்னு நினைக்கிறேன். ரொம்ப அற்புதமா எழுதிருக்காரு’’ என்று வாலியும் சேர்ந்து பாராட்டினாராம்.

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் படத்துக்கு பாடல் எழுதச் சென்ற வாலி, மறக்காமல் அவர்களிடம், ‘’உங்களோட ‘பொன்னகரம்’ படத்துல அந்தப் பாட்டை எழுதியவர் யாரு?’’ என்று கேட்க, ‘’புதுசா எழுத வந்திருக்கிற காமகோடியன்’’ என்று சொல்லியிருக்கிறார்கள். பிறகு காமகோடியனைத் தேடிப்பிடித்து கவிஞர் வாலி மனம் திறந்து பாராட்டி மகிழ, நெகிழ்ந்து போனார் கவிஞர் காமகோடியன்.

காமகோடியன் குறித்து கவிஞர் முத்துலிங்கத்திடம் பேசியபோது அவர் இப்படிச் சொன்னார்; ’’கவிஞர் வாலி எனும் பெருந்தன்மை மனிதர் அத்துடன் நின்றுவிடவில்லை. இளையராஜாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, காமகோடியனைப் பற்றிச் சொல்லி, ‘அந்தக் கவிஞருக்கு பாட்டெழுத வாய்ப்பு கொடுங்கள்’ என்று வாலி சொல்ல... உடனே இளையராஜா தன் உதவியாளரை அழைத்தார். ’காமகோடியன் வீடு எங்கே இருக்குன்னு விசாரிச்சு நாளைக்கு காலைல பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரச்சொல்லுங்க’ என்று அனுப்பிவைத்தார்.

நள்ளிரவில், தேனாம்பேட்டையில் இருந்த காமகோடியனின் வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து, கதவைத் தட்டி, விஷயத்தைச் சொல்ல, மறுநாள் இளையராஜாவின் இசைக்கு பாடல் எழுதுகிற வாய்ப்பு காமகோடியனுக்குக் கிடைத்தது’’ என்று சொன்னார் கவிஞர் முத்துலிங்கம்.

இயக்குநர் ஃபாசிலின் ‘பூவிழி வாசலிலே’, மோகன் நடித்த ‘நினைக்கத் தெரிந்த மனமே’ , சத்யராஜ் நடித்த ‘வாழ்க்கைச் சக்கரம்’, சிவாஜி நடித்த ‘ஞானப்பறவை’, பிரபு நடித்த ‘பொன்மனம்’, ராமராஜன் நடித்த ‘அண்ணன்’, அஜித் நடித்த ‘தொடரும்’, சூர்யா நடித்த ‘மெளனம் பேசியதே’ உட்பட பல படங்களுக்குப் பாடல்கள் எழுதினார் காமகோடியன். இவற்றில் பல படங்களுக்கு ஒரு பாடல், இரண்டு பாடல் எழுதினார். சில படங்களுக்கு மொத்தப் பாடல்களையும் எழுதுகிற வாய்ப்பையும் பெற்றார்.

ஒருகட்டத்தில், தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டு வந்த படங்களுக்கும் எழுதினார். சந்திரபோஸ் இசையில், காமகோடியன் எழுதிய ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’ பாடல் மிகபிரபலம் அடைந்தது. ’ஒரு தொட்டில் சபதம்’ என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை முணுமுணுக்காதவர்களே இல்லை.

’ஒரு பக்கம் பாசமம்மா/ மறுபக்கம் நேசமம்மா/ இரண்டுக்கு நடுவுல நானே

மிருதங்கம் போலானேன்/ தலைமேல தூக்கச்சொன்னா/ மலகூட பாரம் இல்ல/

மனம் தூக்கும் பாரம் / இன்று தாங்காத சுமையாச்சு / என் நண்பன் கத கூற ஒரு சாட்சி நானுண்டு / ஆனாலும் தங்கச்சிக்கு யாரால வாழ்வுண்டு?’ என்று கதையின் சாரத்தை, தன் வரிகளில் சுமந்து கொடுத்திருந்தார் காமகோடியன்.

’’நல்ல மனிதர். என்னை எங்கு பார்த்தாலும் மரியாதையும் அன்பும் ததும்பப் பேசுவார். சில சமயம், ‘முத்துலிங்கம் சார்’ என்பார். சில சமயம் ‘கவிஞரே...’ என்பார். பேசுவதற்காகப் பார்த்துக் கொள்கிறோமோ இல்லையோ, பார்க்கிற போதெல்லாம் நிறையவே பேசுவோம். மனம்விட்டுப் பேசுவார். எளிய மனிதர். கலப்படப் பேச்சு இல்லாதவர். நல்ல வரிகளின் சொந்தக்காரர். அவரைப் பார்க்கிற போதெல்லாம், ‘இளையராஜா அவ்வளவு சீக்கிரத்துல யாருக்கும் வாய்ப்பு கொடுக்கமாட்டாரு. உன்னைத் தேடி கூப்பிட்டு கொடுத்திருக்காரு. நல்லாப் பயன்படுத்திக்கோ’’ என்று சொல்லுவேன். ‘சரி கவிஞரே’ என்று கைப்பிடித்து சொல்லுவார்’’ என்று நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட கவிஞர் முத்துலிங்கம், இன்னொன்றும் சொன்னார்.

’’ஐ.பி.ஆர்.எஸ்.னு ஒரு அமைப்பு. Indian Performance Right Society ங்கறது அதோட விரிவாக்கம். இது என்னன்னே எனக்குத் தெரியாது. இதைப்பத்தி எல்லாம் எனக்கு விவரமா எடுத்துச் சொல்லி, புரியவைச்சு, என்னைக் கையோட அந்த அலுவலகத்துக்குக் கூட்டிட்டுப் போய் உறுப்பினராக்கினார் காமகோடியன். பாடலாசிரியர்களின் பாடல்களுக்கு ராயல்டி தர்ற அமைப்பு இது. எப்படியும் வருஷத்துக்கு எனக்கு ஒன்றரை லட்சமோ ரெண்டு லட்சமோ வந்துக்கிட்டிருக்கு இதுலேருந்து! இதுக்குக் காரணம் கவிஞர் காமகோடியன் தான்’’ என்று சொல்லி நெகிழ்ந்தார் முத்துலிங்கம்.

காமகோடியன் வரிகளால் நம்மை ஈர்த்தார். நல் மனதால் கவிஞர்களையும் ஈர்த்திருக்கிறார். 1945-ம் ஆண்டு பிறந்த காமகோடியன், 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி காலமானார். அவர் பறக்கவிட்ட பூஞ்சிட்டுக் குருவி, காலம் உள்ளவரைக்கும் எங்கோ பாடிக்கொண்டுதான் இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in