எனக்குப் பிடித்த ஹீரோ மோகன்லால்!

கல்யாணி பிரியதர்ஷன் பேட்டி
கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்

மலையாள தேசத்தையும் தாண்டி, தென்னிந்தியா முழுவதும் ‘ஹிருதயம்’ மலையாளப் படத்தைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். அந்தப் படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் தற்போது கேரளத்தின் செல்ல டார்லிங். இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி தம்பதியின் கலை வாரிசு. தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமான கல்யாணி, அதன்பிறகு சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் வந்தார். இப்போது மலையாளம், தெலுங்கு, தமிழ் என பிஸியாகியிருக்கும் அவர், காமதேனுவுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி.

சினிமா எந்த வயதில் உங்களுக்கு அறிமுகமானது?

மிகச் சிறிய வயதிலேயே... பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால், அப்பா தன்னுடைய அசிஸ்டென்டுகளின் நடுவில் அமர்ந்து டிஸ்கஸ் செய்துகொண்டிருப்பார். அல்லது பள்ளி முடிந்து நேரே ‘செட்’டுக்கு அழைத்துக்கொண்டு போவார்கள். அங்கே ஷூட்டிங் நடுவில்தான் நான் வளர்ந்தேன் என்று சொல்வேன். அப்பா கேமராவுக்கு பின்னாலிருந்து அனைவரையும் இயக்குபவர். ஒரு ஷாட்டை எடுப்பதற்காக ஒவ்வொரு விஷயத்திலும் அவர் செலுத்தும் கவனம், பிறகு அந்த ஷாட்கள் இணைந்து எப்படி ஒரு காட்சியாக உருப்பெற்று வருகிறது என்பதை நிறைவில் பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

பள்ளிப் படிப்பை முடித்தபிறகு அப்பாவின் படங்களிலும், சில பாலிவுட் படங்களிலும், தமிழில் ‘இருமுகன்’ படத்திலும் புரொடக்‌ஷன் டிசைன் துறையில் வேலைசெய்தேன். சில படங்களில் ஆர்ட் டிபார்ட்மென்ட் அசிஸ்டென்டாக வேலை செய்த அனுபவமும் உள்ளது. இப்படித்தான் சினிமாவுக்குள் ஒருத்தியாக ஆனேன்.

பிறகு, நடிப்பைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

ஒரு கட்டத்தில், “நீ ஏன் உன் அம்மா போல கேமராவுக்கு முன்னால் நிற்கக்கூடாது?” என்று நண்பர்களும், உறவினர்களும் கேட்கத் தொடங்கினார்கள். எனக்கு கேமரா நடுக்கம் கிடையாது என்றாலும் நடிக்கமுடியும் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நடிப்புப் பயிற்சிக்கு செல்லவும் விருப்பமில்லை. அம்மா நடிகை என்பதால் அவரது திறமை எனக்கு இருக்கும்தானே என்று ஒருநாள் திடீரென்று தோன்றியது. அன்றைக்கே தெலுங்குப் படவுலகிலிருந்து ‘ஹலோ’ படத்துக்காக வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.

முதல் நாள் படப்பிடிப்பில் நடுங்கிப்போய் விட்டேன். ரம்யா கிருஷ்ணன் மேடம், ஜெகபதி பாபு சார், ஹீரோ அகில் என எல்லோரும் இருந்தார்கள். அதுவொரு நகைச்சுவைக் காட்சி. என்னை எல்லோரும் கிண்டல் செய்வது போன்ற அந்தக் காட்சியில் ஏற்பட்ட பதற்றத்தால் என் புருவம் துடிக்க ஆரம்பித்து விட்டது. பிறகு ரம்யா கிருஷ்ணன் மேடம்தான் எனக்கு தைரியம் கொடுத்தார். ஐந்தாவது டேக் ஓகே ஆனது.

அப்பாவின் இயக்கத்தில் ‘மரக்காயர்’ படத்தில் நடித்தபோது எப்படியிருந்தது? அவர் இயக்கிய படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது?

மகள் என்று பாவப்பட்டு ஒரு ‘ஸ்பெஷல் அப்பியரன்ஸ்’ ரோல் கொடுத்தார். என்றாலும் அவரது செட்டில், அவரது இயக்கத்தில் ஒரு நடிகையாக அவர் முன்னால் நின்றபோது இதயம் படபடவென அடித்துகொண்டது. அப்பாவை கோபப்படுத்திவிட்டால் அவ்வளவுதான்... அதற்காகவே பயந்து பயந்து ஆனால், ஒழுங்காக நடித்துக்கொடுத்தேன். அப்பாவின் எல்லா படங்களுமே எனக்குப் பிடிக்கும் என்றாலும் ‘காலாபானி’ தான் என்னுடைய ஃபேவரைட். அன்றுமுதல் இன்றுவரை மோகன்லால்தான் எனது ஃபேவரைட் ஹீரோ!

அம்மாவின் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த அம்சம்?

அவரது நடிப்பை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. அவரது ரியலிஸ்டிக் முக பாவங்கள் எனக்குப் பிடிக்கும். ‘மை டியர் ராங் நம்பர்’ (1983) படத்தில் அவரது நடிப்பையும் நடனத்தையும் நிறைய ரசித்திருக்கிறேன். 80-களில் அம்மா நடித்த படங்களையெல்லாம் மீண்டும் பார்க்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. அவரது படங்களைப் பார்க்கப் பார்க்க என்னால் இன்னும் நன்றாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

திரையுலகப் பிரபலங்களின் வாரிசு எனும்போது உங்களுக்கு கூடுதல் அனுகூலம் அல்லவா?

நெப்போட்டிசம் என்பது தொடக்கத்தில் உதவலாம். ஆனால், தொடர்ந்து உதவும் என்று சொல்ல முடியாது. ஆடியன்ஸ் அவர்களுடைய மனதில் நமக்கு இடம்கொடுக்க வேண்டும். அது, நமக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களைப் பொறுத்துதானே தவிர, நான் பிரியதர்ஷன் - லிஸி தம்பதியின் மகள் என்பதற்கான சலுகையாக இருக்காது.

மலையாள சினிமாவைப் பொறுத்தவரை திறமை இருக்கிறதா, கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறாரா என்று தான் பார்ப்பார்கள். சிபாரிசுகளின் வழியாகவும் நமது பெற்றோர்களின் திணிப்பாலும் நம்மைத் தலையில் சுமந்துகொண்டு செல்ல யாரும் விரும்புவதில்லை. ஒரே நல்ல விஷயம், எனது அப்பாவையும் அம்மாவையும் தெரிந்த மூத்த நடிகர்களுடன் நடிக்கும்போது அவர்கள் என் மீது காட்டும் அக்கறையும், பாதுகாப்பும் பாராட்டப்பட வேண்டியது. இது முதல் தலைமுறை நடிகர்களுக்குக் கிடைக்காது என்று சொல்லுவேன்.

தமிழில் சிவகார்த்திகேயன், சிம்பு என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் உங்கள் கேரக்டர் என்பது சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லையே..?

இரண்டு பேருமே திறமையான பெரிய நடிகர்கள். இரண்டு படங்களுமே ஹீரோக்களை மையமாக வைத்து உருவானவை. ஆனால், அந்த இரண்டு படங்களின் கதையைக் கேட்டதும் இந்தப் படங்களில் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னை இன்று தமிழ் ரசிகர்களுக்குத் தெரிகிறது என்றால், சிவாவும் சிம்பும் தான் காரணம்.

பொதுவாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நிறைய சாப்பிட்டு, எடை கூடியவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம். கல்யாணி மட்டும் எப்படி இத்தனை ஒல்லியான ஹீரோயினாக இருக்க முடிகிறது?

சினிமாவில் வேலை செய்யத் தொடங்கும் முன் நானும் கொஞ்சம் குண்டாகத்தான் இருந்தேன். கேமராவுக்கு பின்னாலான பணிகளில் ஈடுபட்டபோது எல்லா எடையும் குறைந்துபோய்விட்டது. பிறகு, நடிக்கலாம் என்று ஒப்புக்கொண்ட பிறகு சாக்லேட், ஸ்வீட், ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தியாகம் செய்துவிட்டேன். சடசடவென்று ஒரே வருடத்தில் 7 கிலோ எடை குறைந்து 49 கிலோவுக்கு வந்துவிட்டேன். இப்போது என்னுடைய எடை அதுதான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in