கள்வன் - சினிமா விமர்சனம்

கள்வன் - ஜி.வி.பிரகாஷ், இவானா
கள்வன் - ஜி.வி.பிரகாஷ், இவானா

சத்தியமங்கலம் மலையடிவார கிராமத்தைச் சேர்ந்த கெம்பன் என்ற கெம்பராஜும் (ஜி.வி.பிரகாஷ்), அவர் நண்பர் சூரியும் (தீனா) சின்ன சின்னத் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள். ஒரு நாள் திருடப்போன வீட்டில், நர்சிங் மாணவி பாலாமணியை (இவானா) பார்க்கும் கெம்பராஜுக்கு காதல் வருகிறது. தன்னைப் பின் தொடரும் கெம்பனை எச்சரிக்கும் அவர், முதியோர் இல்லம் ஒன்றில் இருக்கும் தாத்தா ஒருவரிடம் (பாரதிராஜா) கருணையோடு இருக்கிறார். அந்த தாத்தாவை தத்தெடுக்கிறார், கெம்பன். காதலுக்காக அவரை தத்தெடுப்பதாக நினைக்கும்போது, கெம்பனின் திட்டம் வேறொன்றாக இருக்கிறது. அது என்ன? கெம்பனின் காதலை இவானா ஏற்றாரா? இல்லையா? என்பது படம்.

கள்வன் - ஜி.வி.பிரகாஷ், தீனா, பாரதிராஜா
கள்வன் - ஜி.வி.பிரகாஷ், தீனா, பாரதிராஜா

மலை சார்ந்த கதைக்களங்களைத் தேர்வு செய்யும்போது ஒளிப்பதிவாளர்களுக்கு கொண்டாட்டம்தான். எந்த பக்கம் ஷாட் வைத்தாலும் அது பசுமையை படர்த்தி ‘விஷூவல் ட்ரீட்’டை கேட்காமலேயே கொடுக்கும். இதிலும் அப்படியே. இயக்குநர் பி.வி.ஷங்கர்தான், படத்தின் ஒளிப்பதிவாளரும் என்பதால் விஷுவலாக ரசிக்க வைக்கிறது படம்.

வனவிலங்கு தாக்கி இறந்தால் அரசு வழங்கும் உதவி தொகையைப் பெற, நாயகன் போடும் திட்டம்தான் படத்தின் ஒன்லைன். அழகான ஒன்லைனை பிடித்த இயக்குநர், காதல், மோதல், திருட்டு, பரிதாப தாத்தா, அவருக்கான பிளாஷ்பேக், வனவிலங்கு துரத்தல் எனச் சம்பவங்களை அதற்குள் அடுக்கிய விதத்தில், சிலவற்றில் மட்டுமே சுவாரஸ்யம் இருக்கிறது.

கள்வன் - இவானா
கள்வன் - இவானா

திருடனைக் காதலிக்கும் நாயகிகள், தமிழ் சினிமாவில் இன்னும் தொடர்வது ஆச்சரியம்தான். முதல் பாதியை கலகலப்பாகக் கொண்டு செல்ல, கையாண்டிருக்கும் காமெடிகளில் சில ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இரண்டாம் பாதியில் ஜி.வி.பிரகாஷும் தீனாவும் காவல் காக்கும் காமெடி சிரிக்க வைக்கிறது.

அப்பாவி தாத்தா, உறுமும் புலியிடம் சிக்கும் குழந்தையை காப்பாற்றும்போது, படத்தின் நாயகனை போலவே நாமும் நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால், தாத்தா கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அவருக்கான பின் கதையும் அழுத்தமாக இல்லாததால் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த கதாபாத்திரத்துக்கு அனுபவ நடிப்பால் ஆழமாக உயிர் கொடுத்திருக்கிறார், பாரதிராஜா. அவர் பார்வையும் உடல் மொழியும் ரசிக்க வைக்கின்றன. ஜி.வி.பிரகாஷ், கெம்பனாக மாற கடுமையாக உழைத்திருக்கிறார். தீனா, ஹீரோக்களின் நண்பர்கள் செய்யும் வேலையை செய்கிறார். காதலனின் சுயரூபம் தெரியும்போது, சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் இவானா. ‘ஞான் நாயரல்லா, நம்பூதிரி’ என்று அடிக்கடிச் சொல்கிற யானை பாகன் சிரிக்க வைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘கட்டழகு கருவாச்சி' ஹிட் லிஸ்ட்வகை. கிளைமாக்ஸில் காட்சியின் வேகத்துக்கு இழுத்துச் செல்கிறது ரேவாவின் பின்னணி இசை. நீளும் முதல் பாதி காட்சிகளுக்குத் தாராளமாகக் கத்திரி போட்டிருக்கலாம், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ்.

திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால், இந்த ‘கள்வன்' நம்மை மேலும் கவர்ந்திருப்பான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in