‘உன் சூடான மூச்சுக்காற்று எனக்கானது’: அன்னையர் தினத்தில் அசர வைத்த காஜல்!

‘உன் சூடான மூச்சுக்காற்று எனக்கானது’: அன்னையர் தினத்தில் அசர வைத்த காஜல்!

அன்னையர் தினத்தையொட்டி நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையுடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘நீல் கிட்சுலு’ என பெயரிட்டுள்ளனர். இதன் காரணமாக படங்கள் மற்றும் தன்னுடைய சினிமா தொடர்பான பணிகளுக்கு சிறிது காலம் பிரேக் விட்டிருக்கிறார் காஜல். குழந்தை பிறந்த போது அந்த குழந்தையை வரவேற்று, தனக்கான எல்லா சக்தியையும், அன்பையும் அந்த குழந்தை கொடுத்ததாக மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்.

இதனையடுத்து இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்கள் குழந்தைகளுடனும், அம்மாவுடனுமான புகைப்படங்களைப் பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காஜலும் அம்மாவாக தனது முதல் அன்னையர் தினத்துக்கு தனது குழந்தை நீலுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, " அன்புள்ள நீல், நீதான் எனக்கு முதலானவன். நீ எனக்கு என்றுமே எவ்வளவு விலை மதிப்பற்றவன் என்பதை உனக்கு உணர வைக்க வேண்டும். என்னுடைய கைகளில் முதல் முறையாக உன்னை ஏந்திய தருணம், உன் சிறு கைகளைப் பற்றியது, உன் சூடான மூச்சுக்காற்று, உன் அழகான கண்கள் எல்லாம் எனக்கானவை. உன் மேல் எப்போதும் அளவு கடந்த அன்பு உண்டு. நீ என் முதல் குழந்தை, என் முதல் மகன், என்னுடைய எல்லாமும். இனி வருகின்ற வருடங்களில் உனக்கு சிறந்தவைகளைக் கற்றுக் கொடுப்பேன். ஆனால், அதற்குள் நீ எனக்கு ஏராளமான விஷயங்களை கற்றுக் கொடுத்து விட்டாய். தாய்மை என்பதை புரிய வைத்திருக்கிறாய். சுயநலம் இல்லாதது எப்படி என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறாய்.

இதெல்லாம் எனக்குப் பயமாக இருந்தாலும், இதெல்லாவற்றையும் விட அழகாக இருக்கிறது. இன்னும் நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மேலும், " நான் முதன் முறையாக இதெல்லாம் கற்றுக் கொள்ள நீ காரணமாக இருந்ததற்கு நன்றி. உன்னைத் தவிர வேறு யாராலும் இதை செய்திருக்க முடியாது. என் குட்டி இளவரசனே, கடவுள் உன்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். நீ வலிமையானவனாக, அன்பானவனாக, அனைவருக்கும் பிடித்த ஒருவனாக வளர வேண்டும். தைரியமானவனாகவும், பண்பானவனாகவும் இருக்க வேண்டும். இதெல்லாம் ஏற்கெனவே உன்னில் நிறைய இப்போதே பார்க்கிறேன். நீ என்னுடையவன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. என் சிறியவனே நீ தான் என் சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே. அதை நீ என்றும் மறக்காதே" என்று தனது முதல் பதிவினை காஜல் பகிர்ந்துள்ளார். காஜலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.