’என் கதையை திருடிவிட்டார்கள்’: பிருத்விராஜ் படத்துக்கு புது சிக்கல்

’என் கதையை திருடிவிட்டார்கள்’: பிருத்விராஜ் படத்துக்கு புது சிக்கல்

கதையை திருடி படமாக்கியுள்ளதாக பிருத்விராஜ் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், அர்ஜுன் அசோகன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’கடுவா’. தமிழில், ‘வாஞ்சிநாதன்’, ‘ஜனா’, ‘எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷாஜி கைலாஷ் இதை இயக்கியுள்ளார். அவர் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் இது. படத்தை பிருத்விராஸ் புரொடக்‌ஷனும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்துள்ளனர்.

வரும் 30 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய, கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தனது கதையை திருடி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த மகேஷ்.எம் என்பவர், கேரள மாநில பாலக்கோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனு பரிசீலிக்கப்படாததால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. பின்னர் இது தொடர்பாக பிருத்விராஜ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கும் ஸ்கிரிப்ட் டைரட்டர் ஜினு வர்கீஸ் ஆபிரகாமுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ரிலீஸ் நேரத்தில் நீதிமன்றம் அனுப்பியுள்ள இந்த நோட்டீஸால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடுவாகுன்னல் குருவச்சன் கதையை வைத்து ’ஒட்டகொம்பன்’ என்ற படமும் உருவாகியுள்ளது. அதில் சுரேஷ் கோபி ஹீரோவாக நடித்துள்ளார். சுரேஷ் கோபி படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in