’பீஸ்ட் ஓடினா எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன?’

தயாரிப்பாளர் கே.ராஜன் கொந்தளிப்பு
’பீஸ்ட் ஓடினா எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன?’
’தொடாதே’ பாடல் வெளியீட்டு விழாவில்...

’பீஸ்ட்’ படம் பற்றி என்னிடம் கேட்கிறார்கள், அது ஓடினால் எனக்கென்ன, ஓடவில்லை என்றால் என்னக்கென்ன? என்று தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார்.

கருடன் பிலிம் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.ஜெயக்குமார் தயாரித்துள்ள படம், ’தொடாதே’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி அலெக்ஸ் இயக்கியுள்ளார். இதில் காதல் சுகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். ஒளிப்பதிவு ராஜேஷ். ராஜா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநரும் தயாரிப்பாளருமான கலைப்புலி ஜி.சேகரன், லியாகத் அலிகான், ஈ.ராமதாஸ், ராசி அழகப்பன், கஸாலி, விருமாண்டி, முத்துக்காளை உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

காதல் சுகுமார், கே.ராஜன்
காதல் சுகுமார், கே.ராஜன்

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது: உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பெரிய வெற்றி பெறும் படங்கள்தான் பெரிய படம், பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்களே, சிறிய படம். பல கோடி செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். 100 கோடி ரூபாய்க்கு மேலும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம், 30 கோடி ரூபாய்தான் வசூலிக்கிறது. ஆனால், ஹீரோக்கள் மட்டும் சம்பளத்தை 110 கோடி ரூபாய் என்று உயர்த்தி விடுகிறார்கள்.

இப்ப கூட ஒரு நடிகர், 65 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தவர், 105 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். 100 கோடிக்கு மேல் இருந்தால் வாங்க, இல்லைனா வராதீங்க என்று சொல்றாராம். இப்படி அவர்களுக்கு 100 கோடி சம்பளமாக கொடுத்தால் படம் என்ன ஓடுகிறதா? நான் எந்த நடிகரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. என்னிடம் ‘பீஸ்ட்’ படம் பற்றி கேக்குறாங்க, பீஸ்ட் ஓடினால் எனக்கென்ன, ஓடலனா எனக்கென்ன? இதை சொல்றதுக்காக நான் பயப்படவில்லை. நான் விஜய்கிட்ட தேதி கேட்டு நிற்கப் போவதில்லை, பணம் கேட்டு நிற்க போவதில்ல. தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும், அதற்கு முன்னணி நடிகர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்காகத் தான் நான் குரல் கொடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.