
உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கக்கூடிய ‘கப்ஜா’ திரைப்படம் எப்படி இருக்கிறது?
கடந்த 2018-ல் வெளியான ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் கன்னடத் திரையுலகிற்கு உலக அளவில் புது வெளிச்சம் பாய்ச்சியது. இப்போதிருக்கும் இளம் தலைமுறையினர் பலரையும் கன்னடத் திரையுலகத்தின் பக்கம் திருப்பியது என்றே சொல்ல வேண்டும். அதற்கடுத்து, ‘கே.ஜி.எஃப்.’ தாக்கத்தில் பல கதைகள் வெளியானது. அதை ஒட்டியே, பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் வெளியாகி இருக்கிறது ‘கப்ஜா’. சுதந்திரப் போராட்டத் தியாகி ஒருவரின் மகன் எப்படி பலரையும் எதிர்க்கக்கூடிய மாஃபியா டானாக வளர்ந்து நிற்கிறான் என்ற ஒருவரிக்கதைதான் ‘கப்ஜா’.
சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டமான 1945-ல் தொடங்குகிறது கதை. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் மகன் அரகேஸ்வரன் (உபேந்திரா). தன் தாய் மற்றும் மூத்த சகோதரனுடன் வசித்து வருகிறான். தந்தை இறப்புக்கு பிறகு இவர்கள் மூவரும் அமரேஸ்வரம் என்ற ஊருக்கு வந்து வாழ்கிறார்கள். விமானப்படை வீரராக தனது வாழ்வைத் தொடங்கும் அரகேஸ்வரன், காலத்தின் கட்டாயத்தால் மாஃபியா டானாக மாறுகிறான். தனது ராஜ்ஜியத்தை பிடித்ததற்காகவும், ராஜ பாரம்பரிய கலாச்சாரத்தை மீறி தனது மகளை திருமணம் செய்ததற்காகவும் அரகேஸ்வரனை கொல்ல கதாநாயகி மதுமதியின் (ஷ்ரேயா) தந்தை முரளி அரசாங்க அளவில் தனது செல்வாக்கை உபயோகப்படுத்துகிறார். அதில், அரகேஸ்வரனின் சாம்ராஜ்யத்தை முடிக்க காவல்துறை அதிகாரியாக வருகிறார் கிச்சா சுதீப். அரகேஸ்வரன் மாஃபியா டானாக மாறியது ஏன், எப்படி? இறுதியில் யார் வென்றார்கள் என்பதைச் சொல்வது தான் ‘கப்ஜா’.
முன்பே சொன்னதுபோல, ‘கே.ஜி.எஃப்’ பாதிப்பில் உருவான கதைதான் ‘கப்ஜா’. கதை மட்டுமில்லாது காட்சி, இசை என படம் நெடுக அந்தப் படத்தையே நினைவுப்படுத்தி செல்கிறது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீளும் இந்தப் படத்தின் கதையில் கதாநாயகின் முகம் பதியவே நெடுநேரம் எடுத்துக் கொள்கிறது. அதன் பிறகுமே சண்டை, காதல், எமோஷன் என எல்லா காட்சிகளுக்குமே எந்தவித அழுத்தமும் இல்லாமல், ஒரே மாதிரியான ரியாக்ஷன்களை தந்து போகிறார் உபேந்திரா. ஷ்ரேயா, முரளி, கிச்சா சுதீப் என முக்கிய கதாபாத்திரங்கள் கதைக்குத் தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். பல காட்சிகளில் இவர்களைத் தேட வேண்டி இருக்குமளவுக்கு திரை முழுக்க காட்சிக்கு காட்சிக்கு ஆட்களும் நிறைந்திருக்கிறார்கள். சுதந்திரம், தியாகம் என ஆரம்பிக்கும் கதை பின்பு கதாநாயக பிம்பத்துக்குள் சிக்கிக் கொள்வது பரிதாபம்.
’கே.ஜி.எஃப்’ படத்திற்கு இசையமைத்துள்ள ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். பாடல்கள், காட்சிகள் என படம் நெடுகவே, காதுகளுக்கு இரைச்சலாகவே இம்சிக்கும் இசை ‘கே.ஜி.எஃப்’ஐயும் அடிக்கடி நினைவுபடுத்துகிறது. வலுவில்லாத வசனங்களும், நாயகனை சுற்றியே கட்டமைத்திருக்கும் மாஸ் காட்சியமைப்புகளும், ரத்தம் தெறித்துக் கொண்டே இருக்கும் வன்முறையும் ஒருக்கட்டத்தில் மேலதிக அயர்ச்சியையே கூட்டுகிறது.
படத்தின் ப்ளஸ் என்று குறிப்பிட வேண்டுமென்றால், அதன் மேக்கிங்கை சொல்லலாம். பீரியாடிக் ட்ராமா கதை எனும்போது, அதற்கேற்ற ரெட்ரோ உடைகளும், ஒளிப்பதிவும் நல்ல திரையரங்க அனுபவத்தினைக் கொடுக்கிறது. கதையில் சிவராஜ்குமார் வருகையும் படத்தின் க்ளைமேக்ஸ் லீடும் சுவாரஸ்யம்.
மொத்தத்தில், ‘கப்ஜா’ படம், ‘கே.ஜி.எஃப்’ படத்தைப் பிரதி எடுக்க முயன்ற மற்றுமொரு படைப்பு என்ற வட்டத்திற்குள் சிக்கி இருக்கிறது!