திரை விமர்சனம்: காத்துவாக்குல ரெண்டு காதல்

திரை விமர்சனம்: 
காத்துவாக்குல ரெண்டு காதல்

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிக்கும் மனிதனின் வாழ்வில் நிகழும் அதிசயங்களும், அபத்தங்களுமே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன் என்னும் ராம்போ (விஜய் சேதுபதி) துரதிருஷ்டத்தின் மனித உருவமாக தன்னைக் கருதுகிறான். ராம்போவின் குடும்பத்தில் அவனுக்கு முந்தைய தலைமுறையில் யாருக்கும் திருமணம் நடக்கவில்லை. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தோரைத் திருமணம் செய்துகொள்கிறவர்கள் இறந்து விடுவார்கள் என்கிற மூட நம்பிக்கைதான் இதற்குக் காரணம். இந்தத் தடையைக் கடந்து அவ்வூரில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் இஸ்லாமிய பெண்ணைக் காதலித்து மணக்கிறார் ராம்போவின் தந்தை. ஆனால், ராம்போ பிறந்தவுடன் அவர் இறந்துவிடுகிறார்.

ராம்போவின் தாய் பக்கவாதம் தாக்கி படுக்கையில் விழுகிறார். ராம்போ மழையில் நனைய விரும்பினால் மழை உடனடியாக நின்றுவிடுகிறது. அவர் மிகவும் விரும்பும் சாக்கோ பார் ஐஸ்கிரீமை அவருக்கு எப்போதும் கிடைப்பதேயில்லை. எல்லாவாற்றுக்கும் மேலாக, ராம்போ தன் தாய்க்கு அருகில் செல்லும்போதெல்லாம் அவருக்கு நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. இதனால் தாயை விட்டு தான் எவ்வளவு தொலைவு விலகியிருக்கிறோமோ அவருக்கு அவ்வளவு நன்மை என்று முடிவெடுக்கும் ராம்போ சிறுவனாக இருக்கும்போதே ஊரைவிட்டு ஓடிப் போகிறார்.

வளர்ந்தபிறகு சென்னையில் பகல் நேரத்தில் ஓலா கேப் ஓட்டுநராகவும் இரவு நேரத்தில் ’பப்’ எனப்படும் உயர்ரக மதுபானக் கூடத்தில் பெளன்சர் ஆகவும் பணியாற்றுகிறார். பெற்றோரை இழந்து தங்கையையும் வளர்ச்சி குறைபாடுடைய தம்பியையும், தனது பிள்ளைகள் போல் வளர்த்துவரும் கண்மணி கங்குலி (நயன்தாரா), இதய நோயாளியான தந்தையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தனக்கு விருப்பமில்லாத ஆடவனுக்கு தோழியாக பொழுதை கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் கதிஜா (சமந்தா) இருவரும் ராம்போவுக்கு அறிமுகமாகிறார்கள். அறிமுகம் நட்பாகி நட்பு காதலாக மலர்கிறது. ராம்போ தங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும் கண்மணியும், கதிஜாவும் இந்தச் சூழலை எப்படிக் கையாள்கிறார்கள், ராம்போ இதனை எப்படி சமாளிக்கிறார், மூவருக்கும் இறுதியில் நடப்பது என்ன என்பவற்றை மீதிக் கதையில் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிப்பது அல்லது திருமணம் செய்துகொண்டோ செய்துகொள்ளாமலோ சேர்ந்து வாழ்வது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் நிறைய வந்துள்ளன. இவற்றில் சில படங்கள் சூழ்நிலை சந்தர்பத்தால் நாயகன் இரண்டு பெண்களுடன் சேர்ந்துவாழ வேண்டிய நிலை ஏற்பட்டதாக சித்தரிக்கப்படும். திட்டமிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுடன் வாழ விரும்பும் ஆண்களின் கதைகளும் தமிழ் சினிமாவில் வெற்றிகரமான திரைப்படங்கள் ஆகியிருக்கின்றன.

ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை போன்ற விஷயங்களில் பொதுச் சமூகத்தின் புரிதலும் அக்கறையும் அதிகரித்திருப்பதாக கருதப்படும் நவீன யுகத்தில் ஒரு ஆண், இரண்டு பெண்களைத் திட்டமிட்டுக் காதலிப்பது போல ஒரு படம் வெளியாகியிருப்பது நகைமுரண். பிறப்பிலிருந்து பின்தொடரும் துரதிருஷ்டம், மூடநம்பிக்கையால் துணையின்றி தனித்துவிடப்பட்ட குடும்ப உறவுகள், அம்மாவின் உடல்நிலை ஆகிய சென்டிமென்ட் சார்ந்த காரணங்களைச் சொல்லி ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கும் நாயகனின் மனநிலைக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது. நாயகன் தன் காதலிகளை தனது பாலியல் இச்சைக்கான கருவியாக பார்க்காமல் சொல்லப்போனால் அவர்களிடம் பாலியல் உறவையே நாடாதவனாக, அவர்களுடன் நட்பாகப் பழகுவதை மட்டுமே விரும்புகிறவனாக காண்பிக்கப்படுகிறான்.

சம்பந்தப்பட்ட இரு பெண்களும் முதலில் நாயகனுக்காகப் போட்டி போட்டாலும் இறுதித் தருணத்தில் இன்னொருவருக்காக தான் விரும்பியவனைத் ’தியாகம்’ செய்ய முன்வருவதிலும் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் நம் சமூகக் கட்டமைப்புக்கு மரியாதையளிக்கும் நோக்கம் வெளிப்படுகிறது. சமூகத்துக்குத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் திரைப்படம் என்னும் அவப்பெயரைத் தவிர்க்க இயக்குநர் திரைக்கதையில் இத்தனை முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் இவை அனைத்தும் வெற்று சமாளிப்புகளாகவே எஞ்சுகின்றன.

இத்தகைய மேற்பூச்சுகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் இந்தப் படம் திட்டமிட்டு ஒரே நேரத்தில் இரண்டு பெண்களின் காதலைப் பெறும் ஆணின் வேட்கையை அதில் உள்ள கள்ளத்தனத்தை மறைமுகமாகவேனும் நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அந்த வகையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஜாலியான கேளிக்கைப் படம் எனும் போர்வையில் மோசமான கருத்துகளைத் திணிக்கும் பிரச்சினைக்குரிய படைப்பாகவே அமைந்துள்ளது.

இதுபோன்ற கருத்துரீதியிலான பிரச்சினையை மறந்துவிட்டுப் பார்த்தாலும் ஒரு ஆண், இரண்டு பெண்களைக் காதலிப்பதை முன்வைத்து ஒரு கலகலப்பான பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்கும் நோக்கமும் முழுமையாகக் கைகூடவில்லை. விசித்திரமான சூழ்நிலைகளை அவற்றில் சிக்கிக்கொண்ட கதாபாத்திரங்களின் எதிர்பாரா எதிர்வினைகளின் மூலம் நகைச்சுவையும் சுவாரசியமும் நிறைந்த காட்சிகளைப் படைப்பதில் திறமைவாய்ந்தவர் என்பதை ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தில் நிரூபித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

அந்தப் படத்துக்குப் பிறகு அவர் விஜய் சேதுபதி- நயன்தாராவுடன் கைகோத்திருக்கும் இரண்டாவது படம் முந்தைய படம் கொடுத்த கலகலப்பில் பாதியைக்கூட தரவில்லை. மூடநம்பிக்கையின் காரணமாக, துணையின்றி தனித்துவிடப்பட்ட குடும்பம். துரதிருஷ்டம் காரணமாக அன்னையைப் பிரிந்து வாழும் நாயகன், தம்பி தங்கையை வளர்க்க வேண்டியிருப்பதால் திருமணம் தள்ளிப்போகும் நடுத்தர வர்க்க பெண்ணாக ஒரு நாயகி, தந்தையின் பொருட்டு விருப்பமில்லாத உறவில் சிக்கிக்கொண்டுள்ள பணக்கார நவீன பெண்ணாக இன்னொரு நாயகி என சுவாரசியமான பின்னணிகளையும் சூழல்களையும் இந்தப் படத்திலும் உருவாக்கிவிட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் இவற்றை வைத்து நகைச்சுவையும் கலகலப்பும் நிறைந்த சில தருணங்கள் மட்டுமே வாய்த்திருக்கின்றன. நாயகனுக்கு இரண்டு பெண்களுடனும் காதல் ஏற்படுவதற்கான காட்சிகள் புதுமையுடனும் சுவாரசியமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் முதல் பாதியை ஓரளவு ரசித்தபடியே கடந்துவிட முடிகிறது.

ஆனால் இரண்டு பெண்களுக்கும் உண்மை தெரிந்துவிட்ட பிறகு இரண்டாம் பாதியில் நிகழ வேண்டிய களேபரங்கள் கலகலப்பின்றி மிக சாதாரணமாகவே கடந்துசெல்கின்றன. ராம்போவின் குடும்பத்துக்காக அவன் மீதான கோபத்தை ஒதுக்கிவைத்து கண்மணியும், கதீஜாவும் ஒரு சமரசத்துக்கு முன்வருவது, ராம்போவின் குடும்ப உறுப்பினர்களுக்கு துணைதேடி திருமணம் செய்துவைப்பது, குறிப்பாக, அவனது அத்தையின் சொல்லப்படா காதலைத் தேடிக் கண்டுபிடித்து காதலனுடன் சேர்த்துவைப்பது என ஆங்காங்கே ரசிக்கத்தக்க அம்சங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இரண்டாம் பாதி திருப்தி அளிக்கவில்லை.

படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவருமே கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பதற்கு சொல்லும் உணர்வுபூர்வமான காரணம் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும் அதை அவர் சொல்லும் விதத்தில் ஒரு மனிதன் தன் இதயத்திலிருந்து சொல்வதுபோன்ற உளப்பூர்வதன்மையைக் கொண்டுவந்துவிடுகிறார்.

ராம்போவுக்காக போட்டிபோடும்போது ஒருவரை இன்னொருவர் நக்கலடித்து மட்டம் தட்ட முயல்வதும் பிறகு நண்பர்களாக பரிணமிப்பதும் ஆகிய காட்சிகளில் நயன்தாரா, சமந்தா இருவருமே அதகளம் செய்திருக்கிறார்கள். துணை நடிகர்களில் விஜய் சேதுபதியின் அத்தையாக நடிப்புக்குள் அடியெடுத்துவைத்திருக்கும் டான்ஸ் மாஸ்டர் கலா கவனம் ஈர்க்கிறார். விஜய் சேதுபதியின் முதலாளியாக ரெடின் கிங்க்ஸ்லியும், உதவியாளராக மாறனும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் காதுகளுக்கு மட்டுமல்லாமல் படமாக்கப்பட்ட விதத்தில் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

மொத்தத்தில் தலைப்புகேற்றபடி காற்றுவாக்கில் கடந்துசெல்லத்தக்க படமாகவே அமைந்திருக்கிறது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in