காக்கிச் சீருடையில் தானும் ஒரு தொழிலாளி என வாழ்ந்து காட்டிய கே.விஸ்வநாத்!

கே.விஸ்வநாத்
கே.விஸ்வநாத்காக்கிச் சீருடையில்...

உயிர்ப்பு மிக்க படங்களை வழங்கிய படைப்பாளி கே.விஸ்வநாத்தின் மறைவை, இன்னமும் தெலுங்குத் திரையுலகமும் தமிழ்த் திரையுலகமும் ஜீரணிக்க முடியாமல் தவித்து வருகின்றன.

மொத்த இந்தியாவுக்கும் கே.விஸ்வநாத்தைத் தெரிந்தது... அவருடைய ‘சங்கராபரணம்’ படத்தின் மூலம்தான். வயது முதிர்ந்த சோமயாஜுலுவையும் அப்போது பிரபலமாகாத மஞ்சு பார்கவியையும் வைத்துக்கொண்டு, அவர் உருவாக்கிய ‘சங்கராபரணம்’ படம் வெளியான அதே நாளில் (பிப்ரவரி 2ம் தேதி) அவரின் மரணம் நிகழ்ந்திருப்பது, கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

‘’நான் முறைப்படி கர்நாடக சங்கீதமெல்லாம் கற்றுக்கொள்ளவில்லை’’ என்று பல மேடைகளில் மறைந்த பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

1980-ம் ஆண்டு என்பது மெல்லிசை மன்னர் ஒருபக்கமும் இளையராஜா இன்னொரு பக்கமும் ராஜபாட்டை நடத்திக் கொண்டிருந்த காலம். ஆனால், கே.விஸ்வநாத், தன் ‘சங்கராபரணம்’ படத்துக்கு திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவனைத்தான் இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுத்தார். மேலும் நிறைய படங்களில், அவரைப் பயன்படுத்தினார்.

முழுக்க முழுக்க கர்நாடக சாஸ்திரிய சங்கீதங்கள் நிறைந்திருக்கும் பாடல்கள்தான் எல்லாமே! கே.விஸ்வநாத்துக்கு சங்கீத ஞானம் உண்டு. அவர் நினைத்திருந்தால், கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றறிந்த கே.ஜே.ஜேசுதாஸைப் பாடவைத்திருக்கலாம். ஆனால், எப்படி நடிப்பை வாங்கவேண்டும், எப்படியான இசையைப் பெற வேண்டும், எப்படியாக பாட வைக்க வேண்டும் என்பதையெல்லாம் முழுமையாக அறிந்திருந்த கே.விஸ்வநாத், தன் உறவினரான எஸ்பி.பி. மீது நம்பிக்கை வைத்துப் பாடல்களைக் கொடுத்தார். அவரும் பாடினார். அந்தப் பாடலுக்காக எஸ்பி.பி-க்கு தேசிய விருதும் கிடைத்தது.

“உறவு, சொந்தம் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். படப்பிடிப்புக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவுக்கும் வந்துவிட்டால், விஸ்வநாத் வேறொரு மனிதராகவே மாறிவிடுவார். மற்ற சமயங்களில் வெள்ளைவெளேரென்று ஆடைகள் உடுத்துவார். ஆனால், வேலை நேரத்தில், ‘நானும் தொழிலாளிதான்’ என்பது போல், காக்கி நிற உடையையே அணிவார். அதற்காக, கடிந்து கொள்ளவோ, திட்டியோ வேலை வாங்கமாட்டார். எல்லோர் மீதும் மரியாதையும் அன்பும் வைத்திருப்பார்’’ என்று கே.விஸ்வநாத் குறித்து எஸ்பி.பி ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

தொழிலின் மீது அப்படியொரு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர் கே.விஸ்வநாத். மற்ற தருணங்களில் வெண்மை நிறை சட்டைகளை அணிவதும் நீல நிறச் சட்டைகள் அணிவதும் ரொம்பவே பிடிக்கும் அவருக்கு. பெரும்பாலும் வேஷ்டி அணிவதைத்தான் விரும்புவாராம். அதேபோல், நெற்றியில் விபூதிப்பட்டையும் நடுவே கோபி சந்தனம் போல் நீளமாக சந்தனமும் இட்டுக் கொள்ளும் கே.விஸ்வநாத், மிகுந்த சிவபக்தர். ஆனால், படப்பிடிப்புக்கு வந்துவிட்டால், நெற்றியில் திருச்சின்னங்கள் இருக்காது. படப்பிடிப்புத் தளத்துக்கு வந்ததும், நடிகர் நடிகைகள் எப்படி காட்சிக்கு தகுந்த, கதைக்குத் தகுந்த ஆடைகளை அணிந்துகொள்வார்களோ... அதேபோல், கே.விஸ்வநாத், தொழிலாளர்களைப் போல் காக்கி நிற உடைகளை அணிந்துகொண்டு, “நான் ரெடி... எல்லாம் ரெடியா?’’ என்று கேட்பாராம்.

’சிப்பிக்குள் முத்து’ படம் வெளியான தருணத்தில் கமல் வாரப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், கே.விஸ்வநாத் குறித்து கேட்கப்பட்டது. ‘’ஆர்.சி.சக்தியண்ணன், ஷூட்டிங் ஸ்பாட்டில் காக்கி டிரஸ்தான் போட்டுக்குவார். கே.விஸ்வநாத் சாரும் அதேபோல காக்கி யூனிஃபார்ம் மாதிரி போட்டுக்கிட்டுத்தான் எங்களையெல்லாம் வேலை வாங்குவார். அவருக்கு வயசுல சின்னவங்க பெரியவங்கன்னு வித்தியாசமெல்லாம் இல்லை.

அதேபோல, பெரிய நடிகர் சின்ன நடிகர்னு பாகுபாடெல்லாம் இல்லை. எல்லார்கிட்டயும் மரியாதையாவும் பண்பாவும் பழகற குணம் அவருக்கு. பாக்கறதுக்கு, கொஞ்சம் முரட்டுத்தனமான ஹெட்மாஸ்டர் மாதிரி தெரிவார். ஆனா, நெருங்கிப் பழகும்போதுதான் தெரியும், அவர் ஒரு குழந்தை மாதிரின்னு. லைட்மேன்ஸ்கிட்ட தோள்ல கைபோட்டுத்தான் பேசுவாரு. அவரோட உடை, நடவடிக்கைகளை எல்லாம் பாத்துட்டு, ‘நீங்க என்ன கம்யூனிஸ்ட்டா?’ன்னு கூட கேட்டிருக்கேன். அதுக்கு அவர் சிரிச்சிகிட்டே... ’இதுக்கு கம்யூனிஸ்டா இருக்கணும்னெல்லாம் அவசியமா என்ன? மனுஷனா இருந்துட்டாலே போதுமில்லையா கமல்?’னு சொன்னார்’’ என்று கமல் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷெட்யூல் பிரித்து, ஒருநாளின் கால்ஷீட்டுகளை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்வார் விஸ்வநாத் என்கிறார்கள் தெலுங்குத் திரையுலகினர். காலையில் ஒன்பது மணிக்குப் படப்பிடிப்புத் தொடக்கம் என்றால், காக்கி உடையுடன் எட்டரைக்கெல்லாம் ரெடியாகிவிடுவாராம். அதேபோல், ஆறுமணிக்கு படப்பிடிப்பு நிறைவு என்று சொல்லிவிட்டால், மிகச்சரியாக முடித்து ‘பேக் அப்’ சொல்லிவிடுவாராம்.

மழை, நினைத்த மாதிரி மேகக் கூட்டமில்லை, சூரிய வெளிச்சம் மாறிவிட்டது முதலான காரணங்களால், படப்பிடிப்பு ஆறு மணிக்கு பதிலாக ஆறரை அல்லது ஏழு மணிக்கு முடிந்தால், லைட்மேன் முதலான தொழிலாளர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் முதலானோருக்கு தயாரிப்புத் தரப்பில் சம்பளம் கொடுத்தது ஒருபக்கம் இருக்க, எவருக்கும் தெரியாமல் எல்லோருக்கும் ஒரு தொகையைக் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லுவாராம். ‘’அந்த காக்கி நிற உடை என்பது டிஸிப்ளினின் அடையாளம். ஆனால், அவர் மனதோ வெண்மையின் அடையாளம்’’ என்று நடிகை ராதிகா கே.விஸ்வநாத் குறித்து நெக்குருகிச் சொல்கிறார்.

மிகுந்த சிவ பக்தரான கே.விஸ்வநாத், கோயிலில் படப்பிடிப்பு நடத்தினாலும் கோயிலுக்கு அருகில் படப்பிடிப்பு நடத்தினாலும் வேஷ்டியும் சட்டையும் தயாராக வைத்திருப்பாராம். படப்பிடிப்புக்கு முன்னதாகவே ஆலயத்துக்கு வேஷ்டி சட்டையில் சென்று வணங்கிவிட்டு, பிறகு, சரியான நேரத்துக்கு காக்கி உடையுடன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து நின்றுவிடுவாராம்!

கே.விஸ்வநாத் படங்களுக்கென ஸ்டைல் உண்டு. அதேபோல், கே.விஸ்வநாத்துக்கே உண்டான ஸ்டைல்களில், காக்கிச் சீருடையும் ஒன்று போல!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in