கே.பாக்யராஜ்: திரைக்கதையில் ஜாலம் செய்த மாயக்காரர்!

- பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

,படத்தைத் தயாரித்து இயக்கியவர்கள் அந்தக் காலத்திலேயே உண்டு. வீணை பாலசந்தர், சில படங்களைத் தயாரித்து, இயக்கி, நடிக்கவும் செய்தார். ஆனால், படத்தின் சிறந்த வசனங்களாலும் மிக எளிமையான கதைகளாலும் தெள்ளத்தெளிவாகச் சொல்லப்பட்ட திரைக்கதைகளாலும் ஒரு படத்தில் உள்ள அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நம் மனதில் பதியச் செய்து, நாயகனாகவும் நடித்துப் பேரெடுத்து தனியிடத்தில் ஜொலித்த பெருமை, கே.பாக்யராஜுக்கு உண்டு.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என்பதுடன் நாயகனாகவும் வலம் வந்து, நம் மனதில் தனித்துவமானதொரு இடத்தைப் பிடித்தார் பாக்யராஜ். இயக்குநர் பீம்சிங், ஸ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, மணி ரத்னம் முதலானோரின் தாக்கத்தில் படம் இயக்கியவர்களும் இயக்கிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால், குருநாதர் பாரதிராஜாதான் என்றபோதும், அவரின் படங்களுக்கும் தனது படங்களுக்கும் தேனிக்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைக் காட்டினார் பாக்யராஜ் என்பதுதான் அவரின் முதல் வெற்றி.

கொங்கு மண்டலத்துக்காரர். சிறுவயதில், பாட்டி, அத்தை, சித்தி, அம்மா என்று பெண்கள் சூழ வளர்ந்தவருக்கு, பழைய படங்கள், புதிய படங்கள் எல்லாமே மனப்பாடமாகின. எந்தப் படம் வந்தாலும் அவர்கள் சிறுவனாக இருந்த பாக்யராஜை கைப்பிடித்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது... ‘சின்னப்பையனை வீட்டில் விட்டுவிட்டுச் செல்லமுடியாது’. அடுத்தது... ‘சின்னப்பையனை அழைத்துக் கொண்டு சென்றால், எவ்வளவு கூட்டத்திலும் சின்னப்பையனுக்கு டிக்கெட் கொடுத்துவிடுவார்கள். எல்லோரும் நிம்மதியாக டிக்கெட் எடுத்து கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இப்படியாக ஆரம்பமான பாக்யராஜின் வாழ்க்கை, சினிமா, கதை, வசனம் என தாகமும் ஏக்கமுமாக வளர்ந்தது. ஊரில் நாடகங்கள் போட்டார். அதுவொரு வடிகால். ஆனால், நாடகங்கள் போடுவதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. ஒருபக்கம், அங்கே உள்ள மன்றத்தில் இருக்கும் கேரம்போர்டு விளையாட்டு, இன்னொரு பக்கம், நாடகத்துக்கான நட்புக் கூட்டம். கேரம்போர்டு பழக்கத்தால் கிடைத்த நண்பர் பழனிச்சாமியையும் ராம்லியையும் திரையுலகிலும் பயன்படுத்திக் கொண்டார் பாக்யராஜ். பழனிச்சாமியை தன் மேலாளராக்க்கி, பிறகு தயாரிப்பாளராகவும் உருவாக்கி அழகு பார்த்தார். அதேபோல், பள்ளியில் ஒன்றாகப் படித்து, நாடகத்திலும் வளர்ந்த நட்புக்கு உரியவர்... ஆர்.சுந்தர்ராஜன். பின்னாளில் அவரும் இயக்குநரானார்.

சினிமாவில் சேருவது என்று வந்தவருக்கு உடனே வாசல் திறந்துவிடவில்லை. கதையை எடுத்துக்கொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறினார். “ஒரு வரில கதை சொல்லு” என்று சின்னப்பா தேவர் சொன்னார். “சரி, அஞ்சு நிமிஷத்துல கதை சொல்லு” என்று சொன்னதைக் கேட்டு மிரண்டுபோனார். அவரை தேவர் பிலிம்ஸ் இலாகாவில் உள்ள தூயவன் ஊக்கப்படுத்தினார். சின்னச் சின்ன வேலைகளைக் கொடுத்தார். பாக்யராஜின் கதையும் அவர் எழுதுகிற வசனங்களும் அழகாக இருப்பது போல், அவரின் கையெழுத்தும் அச்சில் வார்த்தாற் போல் அருமையாக இருந்ததும் இன்னொரு ப்ளஸ் அவருக்கு!

பின்னாளில், ‘கன்னிப்பருவத்திலே’ படத்தை இயக்கிய பி.வி.பாலகுரு, பாக்யராஜின் நன்றிக்கு உரியவர். கே.வி.சுப்ரமணியம் எனும் இயக்குநரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த பாக்யராஜுக்கு, படப்பிடிப்பு நடந்த இரண்டாவது நாளே மிகப்பெரிய சோதனை. அந்தப் படமே நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில்தான் அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, ‘16 வயதினிலே’ படத்தைத் தயாரித்தார். இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜாவுக்கு அதுவே முதல் படம். படத்தில் ஒரெயொரு உதவி இயக்குநராக, பி.வி.பாலகுரு இருந்தார். “இன்னொருவரும் இருந்தா நல்லாருக்கும் சார்” என்று பாரதிராஜாவிடம் சொல்லி, பாக்யராஜையும் உள்ளே இழுத்துக் கொண்டார்.

பாக்யராஜின் திறமைகளைக் கூர்ந்து கவனித்த பாரதிராஜா, ஒருநாளின் படப்பிடிப்பில், “ராஜூ... ராஜூ” என்று நூறுமுறையாவது அழைக்கின்ற அளவுக்கு பாக்யராஜ் மீது பேரன்பு கொண்டார். அடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’ படத்துக்கு பாக்யராஜை கதை, வசனம் எழுத வைத்ததுடன் ஒரு பாடலையும் எழுதவைத்து, ஒரு கேரக்டரும் கொடுத்தார்.

அடுத்தடுத்து பாரதிராஜா உயர்ந்தார். பாக்யராஜும் வளர்ந்தார். அவரின் கதையில் நெக்குருகினார்கள் ரசிகர்கள். வசனங்களுக்கு பலத்த கரவொலி கிடைத்தது. ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் நாயகனாக நடித்தார். பாக்யராஜ் என்றாலே அவரின் குரல் நமக்குப் பரிச்சயம் இன்றைக்கு. ஆனால், இந்தப் படத்தில் அவருக்குக் குரல் கொடுத்தவர் கங்கை அமரன்.

பிறகு பாரதிராஜாவிடம் இருந்து வெளியே வரும் சூழல். தானே படம் இயக்கும் நிலை. ‘’அம்மன் கிரியேஷன்ஸுக்கு படம் பண்ணப்போறே. அதனாலதானே அவருக்கு சாதகமா நடந்துக்கறே’’ என்று பாரதிராஜாவுக்கு யாரோ தப்புத்தப்பாக பாக்யராஜை பற்றி சொல்ல, இருவருக்கும் செல்லக்கோபம், பெரிதானது. ஆனால் பாக்யராஜ், மாறவே இல்லை. அம்மன் கிரியேஷன்ஸின் ‘கன்னிப்பருவத்திலே’ படத்துக்கு கதை, வசனம் எழுதிக்கொடுக்க, பி.வி.பாலகுரு இயக்கினார். வில்லனாகவும் நடித்தார் பாக்யராஜ். படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஓடிக்கொண்டிருக்க, தன் படத்துக்கான தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டே இருந்தார் பாக்யராஜ்.

‘கன்னிப்பருவத்திலே’ நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் போது, எஸ்.ஏ.ராஜ்கண்ணு இரண்டு கவர்களை பாக்யராஜிடம் கொடுத்தார். முதல் கவரில், ‘கன்னிப்பருவத்திலே’ படத்துக்கான சம்பள செக் இருந்தது. அடுத்த கவரைப் பிரித்தார் பாக்யராஜ். அது ப்ளாங்க் செக். கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்தது. ‘’அடுத்த படத்தை நீதான் டைரக்ட் பண்றே. உன்னை முதன்முதலா டைரக்டராக்கின பெருமை எனக்கு இருக்கட்டும்’’ என்று ராஜ்கண்ணு சொல்ல, பாக்யராஜ், ப்ளாங்க் செக் இருந்த கவரை திருப்பிக் கொடுத்தார்.

‘’ஏற்கெனவே என் குருநாதர், உங்களுக்குப் படம் பண்றதாலதான் உங்களுக்கு சாதகமா நடந்துக்கிட்டேன்னு சொல்லிக்கிட்டிருக்கார். இப்போ நீங்க சொன்னபடி நடந்துச்சுன்னா, அவர்கிட்ட பலரும் சொன்னதெல்லாம் உண்மையாயிரும்’’ என்று மறுத்தவர், தயாரிப்பாளரைத் தேடுகிற பணியைத் தொடர்ந்து மேற்கொண்டார். பிறகு கோபிநாத் தயாரிக்க, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கி நடித்தார். இரண்டாம் நாயகனாக அதில் வலம் வந்தார்.

பிறகு, சொந்தமாகவே ‘ஒரு கை ஓசை’ படத்தைத் தயாரித்து இயக்கி நடித்தார் பாக்யராஜ். பேச இயலாத கதாபாத்திரத்தில் பிரமிக்க வைத்தார். இதையடுத்து, ‘மெளன கீதங்கள்’ பண்ணினார். இந்தப் படத்தில் அதுவரை இல்லாத புதுமையொன்றைச் செய்திருந்தார் பாக்யராஜ். இன்றைக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் போஸ்டர், டீஸர், ஒரேயொரு பாடல் வெளியீடு, டிரெய்லர், ஸ்னீக் பீக் காட்சிகள் என்றெல்லாம் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்புகிறார்கள். ஆனால், ‘மெளன கீதங்கள்’ படத்தின் கதையையும் வசனங்களையும் படத்தின் காட்சிகளையும் வாரப் பத்திரிகையில் தொடராகவே வெளியிட்டு வந்தார்.

பத்திரிகையில் வந்த நாவலை படமாக்குவது ஒருபக்கமிருக்க, படமாக்குவதையே கதை போல் பத்திரிகையில் தொடர்கதையாகச் சொல்லி புதுமை பண்ணி அசத்தினார் பாக்யராஜ். அநேகமாக, இந்தப் படத்தில் இருந்துதான் பாக்யராஜுக்கு பெண் ரசிகைகள் எக்கச்சக்கமாக உருவானார்கள்.

தன்னுடைய பலம் என்பதை அறிந்துகொண்டு வெற்றி பெறுவது ஒருவகை. தன்னுடைய பலவீனத்தை மறைத்து வெற்றி பெறுவது இன்னொரு வகை. ஆனால், எவருமே செய்யத் தயங்குகிற இன்னொரு வழியை உருவாக்கிக் கொண்டார் பாக்யராஜ். மைனஸ் பாயின்ட் என்பது அவரின் மூக்குக்கண்ணாடியும் கீச்கீச் குரலும்தான்! ஆனால், தன் மைனஸையே பிளஸ்ஸாக்கிக் கொண்டு தனக்கென ஒரு பாணியையும் ரசிகர் கூட்டத்தையும் வளைத்துப் போட்டதும் தமிழ் சினிமாவின் சிறப்புமிக்க வரலாறு.

பாக்யராஜிடம் இன்னொரு விஷயம்... படத்துக்குப் படம் நாயகியை மாற்றிக்கொண்டே இருப்பார். இசையமைப்பாளரையும் தான்! ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன், ‘ஒரு கை ஓசை’க்கு மெல்லிசை மன்னர், ‘மெளன கீதங்கள்’ படத்துக்கு கங்கை அமரன், ‘இன்று போய் நாளை வா’, ‘விடியும் வரை காத்திரு’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’, ‘தாவணிக்கனவுகள்’ படம் என இளையராஜா, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘எங்க சின்னராசா’ படங்களுக்கு சங்கர் கணேஷ் என இசையமைப்பாளர்களை மாற்றிக்கொண்டே வந்த பாக்யராஜ், ஒரு கட்டத்தில் ‘காவடிச்சிந்து’ என்ற படத்தில் தானே இசையமைப்பாளராகவும் உருமாறினார்.

அமலாவுடன் நடித்த அந்தப் படம் வெளிவரவில்லை. பாதியிலேயே நின்றது. ஆனால், படத்தின் பாடல் கேசட்டுகள் வெளியாகி சக்கைப்போடு போட்டது. எழுத்தாளர் பாலகுமாரன் இயக்க, பாக்யராஜின் மேற்பார்வையில் உருவான ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு இசையமைப்பாளராகவும் பாடகராகவும் அறிமுகமாகி, அத்தனை பாடல்களையும் ஹிட்டாக்கினார் பாக்யராஜ்.

கே.கே.செளந்தர், கல்லாப்பெட்டி சிங்காரம், காஜாஷெரீப், நடிகர் செந்தில், சிவராமன், சின்ன முருகன், சங்கிலி முருகன், ஜெய்கணேஷ், சோமயாஜுலு, குமரிமுத்து, வி.ஆர்.திலகம், ஷோபனா, தீபா அவ்வளவு ஏன்... எம்.என். நம்பியாருக்கு வித்தியாசமான கேரக்டர் என பலருக்கும் வாய்ப்புக் கொடுத்து அசத்துவதில் சூரர் பாக்யராஜ்!

பாக்யராஜின் நண்பர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பிறகு பாக்யராஜைச் சந்தித்தார்கள். ‘’டேய் பாக்கி (நெருங்கியவர்களும் உறவுக்காரர்களும் ‘பாக்கி’ என்றுதான் அழைப்பார்கள். நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் இப்படித்தான் அழைப்பார்) டைட்டில் வைக்கும்போது ஜாக்கிரதையான டைட்டிலா, பாஸிட்டீவ் டைட்டிலா வெச்சா என்னடா? நீ வைக்கிற எல்லா டைட்டிலும் நெகட்டீவ் சிந்தனைகளைச் சொல்ற மாதிரி இருக்குடா’’ என்று சொன்னார்கள். ஆனால், பாக்யராஜுக்கு சென்டிமென்ட், நெகட்டீவ் சிந்தனைகள் இதிலெல்லாம் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

‘’சுவரில்லாமல் சித்திரம் எப்படி? ஒரு கையில் ஓசை வருமா? மெளனமாக கீதங்கள் இருக்குமா? இன்று போய் நாளை வா என்று வைத்தால் எப்படி? விடியும் வரை காத்திரு என்று வைக்காமல் விடிஞ்சாச்சு என்றே வைக்கலாமே. தூறல் நின்னு போச்சுன்னுதான் வைக்கணுமா?” என்றெல்லாம் நண்பர்கள் சொல்ல, எதையும் கேட்கவில்லை. ‘’எம் மேலயும் என் கதை மேலயும் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்குடா’’ என்று சொல்லிவிட்டவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மூடநம்பிக்கையோ சினிமா சென்டிமென்டுகளோ துளியும் இல்லை.

முதல் பாதியில் கலகலப்பும் இரண்டாம் பாதி முழுக்க சோகமுமாக ‘சுவரில்லாத சித்திரங்கள்’ இருக்கும். பேச முடியாதவனுக்கு இறுதியில் பேச்சு வரும். ஆனால், மெளனமாக இருக்கிறான் என்பதைச் சொல்லியிருப்பார். நாயகனும் நாயகியும் தனித்தனியே பேருந்தில் ஏறுகிறார்கள். நாயகியுடன் மகன். கொஞ்சம் கொஞ்சமாக நடுநடுவே வருகிற ஃப்ளாஷ்பேக் யுக்தியால், கதையைச் சொல்லியிருப்பார் பாக்யராஜ்.

மூன்று நண்பர்கள் கான்செப்ட் உருவாக்கினார். அவர்களின் ஜாலியும் கேலியுமான ‘இன்று போய் நாளை வா’ தமிழ்த் திரையுலகில் தனித்துவமான காமெடிப் படமாக அமைந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு நாயகியைத் திருமணம் செய்து கொண்டு, மனைவியையே கொல்லத் திட்டமிடும் நெகட்டீவ் கதாபாத்திரமும் செய்தார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் வாத்தியார். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வாத்தியார். ‘சுந்தரகாண்டம்’ படத்திலும் வாத்தியார். ஆனால், ஒன்றுக்கொன்று எத்தனை வித்தியாசங்கள்? எவ்வளவு நேர்த்தியான கதாபாத்திரங்கள்? தன் ஆசிரியருக்கு நன்றி கூறும் விதமாக, ‘சுந்தரகாண்டம் ‘ படத்தில் இவர் வைத்த ‘சண்முகமணி’ கதாபாத்திரம் இன்றைக்கும் வெகு பிரபலம்.

ஏவி.எம். எனும் மிகப்பிரம்மாண்டமான நிறுவனம், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன் என்று குறிப்பிட்ட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் என்று படமெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், பாக்யராஜை அழைத்து ‘முந்தானை முடிச்சு’ பண்ணச் சொன்னதுதான் முதல் ஆரம்பம். பிறகு பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், ஷங்கர் என பலரும் வந்து இயக்கினார்கள்.

தமிழ்த் திரையுலகில் பாக்யராஜின் படங்கள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் சாதனைப் படைத்திருக்கிறதுதான். பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு கதை வசனம் என்று பாக்யராஜின் பெயர் டைட்டிலில் கூட இடம்பெறவில்லை. சில வருடங்கள் கழித்து, கமலை வைத்து பாரதிராஜா இயக்கிக்கொண்டிருந்த ‘டாப் டக்கர்’ பாரதிராஜாவுக்கே திருப்தி தராமல் 20 நாளிலேயே நிறுத்தப்பட்டது. பாக்யராஜை அழைத்துப் படத்தைப் போட்டுக்காட்டினார் பாரதிராஜா.

அவரும் திருப்தி இல்லை என்று சொல்ல, ‘’ஒரு கதை ரெடி பண்ணு ராஜூ. கமல் கால்ஷீட் வேஸ்ட்டாகக் கூடாது’’ என்று பாரதிராஜா சொல்ல, நான்கே நாளில் பாக்யராஜ் உருவாக்கியதுதான் ‘ஒரு கைதியின் டைரி’. இந்தப் படம் இங்கே வெற்றி பெற, இந்தப் படத்தை அப்படியே அமிதாப்பை வைத்து ‘ஆக்ரிரஸ்தா’ என இந்தியில் இயக்கினார். அதுவரை இந்தியாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் நடித்த படங்கள் அனைத்துமே ‘அமிதாப் படம்’ என்றுதான் ரசிகர்களால் திரையுலகத்தால் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் ‘ஆக்ரிரஸ்தா’ ‘டைரக்டர் பாக்யராஜின் படம்’ என்று வடக்கே கொண்டாடப்பட்டது. இதற்காக அமிதாப் ஒரு நள்ளிரவில் பாக்யராஜுக்கு போன் செய்து வாழ்த்தினார்.

எல்லாப் படங்களிலும் அருமையான கதையும் முடிச்சுகளும் போடப்பட்டிருக்கும். அதேபோல, எம்ஜிஆரின் புகைப்படங்கள், எம்ஜிஆர் நடித்த படங்கள் என்று காட்டப்படும். பிறகு, எம்ஜிஆருக்கும் இவருக்கும் நல்ல நெருக்கமும் பழக்கமும் ஏற்பட்டது. இதனால் மூன்று விஷயங்கள் நடந்தன. பாக்யராஜ் - பூர்ணிமா திருமணத்தை முதல்வராக இருந்த எம்ஜிஆர், தலைமையும் முன்னிலையும் ஏற்று நடத்திவைத்தார். ‘’என் கலையுலக வாரிசு பாக்யராஜ்’’ என்று எம்ஜிஆரே மேடையில் அறிவித்தார்.

எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு, அமெரிக்காவின் ப்ளூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது, தமிழகத்தில் இருந்து சென்று அவரைச் சந்திக்க அனுமதி கிடைத்து பார்த்துவிட்டு வந்த ஒரே மனிதர்... பாக்யராஜ்தான்! எம்ஜிஆர், பாக்யராஜை வரவழைத்து சந்திக்கும்போதெல்லாம், ‘’உனக்கு என்ன வேணும்... என்ன வேணும்’’ என்று வள்ளல் குணத்துடன் கேட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் பாக்யராஜ் எம்ஜிஆரிடம் சொன்னது இதுதான்... ‘’உங்களை எப்போ வேணா சந்திக்கலாம்னு எனக்கு அனுமதியும் அன்பும் கொடுத்திருக்கறதை விட உங்ககிட்ட எனக்கு வேற எதுவுமே வேணாம் தலைவரே’’ என்று சொல்லியதை அவரை பேட்டியெடுத்த போது, நினைவுகூர்ந்தார்.

சிறுவயதில் இருந்தே பத்திரிகை நடத்த வேண்டும் எனும் ஆசையும் பாக்யராஜுக்கு இருந்தது. திரையுலகில் தடம் பதித்து பல இயக்குநர்களை உருவாக்கி ஆளாக்கி வளர்த்துவிட்ட பிறகு, ‘பாக்யா’ எனும் பத்திரிகையைத் தொடங்கி அசத்தினார் பாக்யராஜ். தமிழ்ப் பத்திரிகை உலகில், பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையானது ஒரு சாதனை. அட்டைப்படமே புது பாணியில் அமைத்தது மற்றொரு சாதனை. தமிழ்வாணன் பதில்களுக்குப் பிறகு, பாக்யராஜின் பதில்களுக்காகவே ‘பாக்யா’வை பலரும் வாங்கினார்கள் என்பது எட்டமுடியாத சாதனை.

எம்ஜிஆருக்கும் நெருக்கம். கலைஞருக்கும் சிவாஜிக்கும் நெருக்கம். தனிக்கட்சி தொடங்கியதிலும் வலி. ஆனால், இத்தனையும் கடந்து நன்றியுணர்வுடனும் பேரன்புடனும் அன்றைக்குப் போலவே இப்போதும் இருக்கிறார் பாக்யராஜ். ’குருநாதரே’ என்றும் ‘டைரக்டர்’ என்றும் பாரதிராஜாவைப் புகழ்ந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எஸ்.ஏ.ராஜ்கண்ணு பாக்யராஜின் முதல் படத்தை இயக்க, ப்ளாங்க் செக் கொடுத்ததை மறுத்தவர், பிறகு பல வருடங்கள் கழித்து, பாரதிராஜா சொன்னபிறகுதான் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு ‘எங்க சின்னராசா’ படத்தை இயக்கித் தந்து, அவரின் கடன்களையெல்லாம் அடைக்கச் செய்தார்!

எளிமையும் நேர்மையும் கொண்டு, சினிமாவில் ‘கதைத் திருட்டு’ சமாச்சாரத்தில் அவர் போராடியதெல்லாம் அவரின் உண்மைக்கும் பண்புக்கும் சாட்சிகள்!

பண்பும் அன்புமாக, எளிமையும் நேர்மையுமாக, எண்பதுகளில் கலக்கியெடுத்து ஆட்சி செய்த திரைக்கதை ஜாலக்காரர் பாக்யராஜின் 70-வது பிறந்த நாளான இன்று (ஜனவரி 7) அவரை வாழ்த்துவோம்!

மனமார்ந்த வாழ்த்துகள் பாக்யராஜ் சார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in