`நடிகை சுஷ்மிதாவை காதலிக்கிறேன்; திருமணம் செய்யவில்லை'- புகைப்படத்தை வெளியிட்ட 56 வயதான லலித் மோடி

`நடிகை சுஷ்மிதாவை காதலிக்கிறேன்; திருமணம் செய்யவில்லை'- புகைப்படத்தை வெளியிட்ட 56 வயதான லலித் மோடி

"நான் மூன்று முறை திருமணம் செய்யும் சூழலில் இருந்தேன்" என்று நடிகை சுஷ்மிதா சென் அண்மையில் கூறியிருந்த நிலையில், `சுஷ்மிதா சென்'னை காதலிப்பதாகவும், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியிருக்கிறார்.

பிரபல இந்தி நடிகையான சுஷ்மிதா சென், தமிழில் நாகார்ஜுனா நடித்த ரட்சகன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஷங்கரின் முதல்வன் படத்தில், ஷக்கலக்க பேபி பாடலுக்கு ஆடியிருந்தார். முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் ஆன இவர், 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ரெனி, அலிஷா என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அண்மையில் 'தி ஐகான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மிதா, திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியிருந்தார்.

"அதிர்ஷ்டவசமாக, என் வாழ்வில் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்ததால், திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கும் என் குழந்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் மூன்று முறை திருமணம் செய்யும் சூழலில் இருந்தேன். அதில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார். அப்போது நடந்த சிக்கல்களை என்னால் வெளிப்படுத்த முடியாது" என்று கூறியிருந்தார் சுஷ்மிதா.

இந்நிலையில், நடிகை `சுஷ்மிதா சென்'னை காதலிக்கிறேன், திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படத்தை 56 வயதான லலித் மோடி வெளியிட்டுள்ளார். அதில், "புதிய வாழ்க்கையை தொடங்கியிருப்பதாகவும், `சுஷ்மிதா சென்'னை காதலிக்கிறேன் என்றும் அதே நேரத்தில் அவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றும் விரைவில் அதுவும் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in