தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு என்ன அளவுகோல்? - விளாசும் பிரபல இயக்குநர்

தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு என்ன அளவுகோல்? - விளாசும் பிரபல இயக்குநர்

``தேசிய திரைப்பட விருது கமிட்டியில் பாலிவுட் ரசிகர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்'' என்று பிரபல இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

இந்திய திரைப்படச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழா கோழிக்கோடு பகுதியில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து அடூர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, ``தேசிய திரைப்பட விருது கமிட்டியில், பாலிவுட் ரசிகர்கள்தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சினிமா புரியாதவர்கள், விருதுகளை வேண்டியவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று கூட தெரியவில்லை.

ஒரு காலத்தில், நாட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள், விமர்சகர்கள் மற்றும் கலைஞர்கள் நடுவர்களாக இருந்தார்கள். இப்போது யார் நடுவர் என்றே தெரியவில்லை. விருது படங்களுக்கு என்ன அளவுகோல் என்பதும் தெரியவில்லை. அவர்களின் பட்டியலில் சிறந்த படங்கள் இல்லை. பிளாக்பஸ்டர் படங்களுக்குத்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது பயங்கர நகைச்சுவையாக இருக்கிறது.

இதெல்லாம் ஏன், எதற்கு என்று கேள்விக் கேட்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். இது பெரிய அநியாயம் என்றுதான் என்னால் சொல்ல முடியும். கேரளாவை அனைத்துத் துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் சூர்யாவின் ’சூரரைப் போற்று’, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, பின்னணி இசை, திரைக்கதை ஆகிய ஐந்து விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in