ஜூடோ ரத்தினம்: சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்த வித்தைக்காரர்!

ஜூடோ ரத்தினம்
ஜூடோ ரத்தினம்

சினிமாவில், எந்தக் காட்சி ஈர்த்திருந்தாலும் எல்லோராலும் வெகுவாக ரசிக்கப்படுவது சண்டைக்காட்சிகளாகத்தான் இருக்கும். நாம் எதிராளியிடம் நம் உடல்மொழியால் பேசுவோம். வசனமெல்லாம் கூட பேசிக்காட்டுவோம். சில தருணங்களில், பாட்டுக்கூட பாடுவோம். ஆனால், நிஜ வாழ்வில் நமக்கும் சண்டைக்கும் வெகு தூரமுண்டு. அதனால்தான், கெட்டவனை அடித்து துவம்சமாக்கும் போது, மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்கிறோம்.

அந்தக் காலத்தில், 22 ரீல் படத்தில் 16 பாடல்களும் 12 சண்டைக் காட்சிகளும் இடம்பிடித்திருக்கும். கத்திச்சண்டை, வாள் சண்டை, மான் கொம்புச் சண்டை, துப்பாக்கிச் சண்டை என்றெல்லாம் காலத்துக்காலம் உருமாறிக்கொண்டே வந்த சமயத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களின் சண்டைக்காட்சிகள், ஆங்கிலப்படத்துக்கு நிகராகப் பேசப்பட்டன.

ஸ்டண்ட் சோமு, ஆர்.என்.நம்பியார், ஷ்யாம் சுந்தர், ஏ.டி.வெங்கடேசன், மாடக்குளம் அழகிரிசாமி என்றெல்லாம் சண்டைக்காட்சிகளை ஒவ்வொரு தருணத்திலும் மெருகேற்றிக் கொண்டே வந்தார்கள். மாடர்ன் தியேட்டர்ஸில், பணியாற்றிக் கொண்டிருந்த அந்த ஸ்டண்ட்மேன், எல்லோரையும் கவர்ந்தார். ‘’டேய் ரத்தினம்... உன் ஸ்டெப்ஸெல்லாம் புதுசா இருக்குடா. என்னடா இது’’ என்று மாடர்ன் தியேட்டர்ஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ‘’இது ‘ஜூடோ’ங்கற கலை’’ என்று சொல்ல, ‘’பிரமாதம் பண்றியா. நிறைய்ய பண்ணு. இனிமே நீ வெறும் ரத்தினம் இல்ல. ஜூடோ ரத்தினம்’’ என்று வாழ்த்தியது மாடர்ன் தியேட்டர்ஸ்.

இப்படித்தான் ஜூடோ ரத்தினம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். ஐம்பதுகளின் மத்தியிலும் இறுதியிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பல சண்டைக் காட்சிகளை உதவியாளராக இருந்து அமைத்துக் கொடுத்து அசத்தினார். தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கருக்கு விதம்விதமான சண்டைகளையெல்லாம் கொடுத்து அசத்தினார். முக்தா பிலிம்ஸின் ‘தாமரைக்குளம்’ படம்தான் நகைச்சுவையில் புது பாணியை உருவாக்கிய நாகேஷின் முதல் படம். எத்தனையோ நடிகர்களுக்கு வில்லனாக நடித்து நம் அடிவயிற்றைக் கலக்கிய எம்.ஆர்.ராதா இந்தப் படத்தில் நாயகன். அப்படியெனில் எம்.ஆர்.ராதாவுக்கு வில்லனாக நடித்தவர் யாராக இருக்கும்?

ஸ்டண்ட் உலகில் சினிமாவில் புதுப்புது பாணிகளை உருவாக்கிய ஜூடோ ரத்தினம்தான், இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார்! படத்தின் தயாரிப்பாளர் கம்யூனிஸ்ட். இயக்குநரான முக்தா சீனிவாசன் முதலானோர் கம்யூனிஸ்ட். எனவே, சென்சாரில் படத்தில் இருந்து பல காட்சிகளை நீக்கினார்கள். பல வசனங்களை எடுத்துவிட்டார்கள். அதனால் படம் பெரிதாகப் போகவில்லை. ஆனாலும் நாகேஷையும் ஜூடோ ரத்தினத்தையும் தமிழ் சினிமா கொண்டாடத் தவறவில்லை.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் இருந்தும் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜிடம் இருந்தும் வந்த உதவியாளர்கள் ஏகப்பட்ட பேர் இயக்குநர்களாகியிருக்கிறார்கள். அதேபோல், பி.சி.ஸ்ரீராமிடம் இருந்து வந்தவர்கள்தான் இன்றைக்கு ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவாளர்களாக ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல், திரையுலகில், ஜூடோ ரத்தினம் எனும் ஸ்டண்ட் மாஸ்டர் வந்த பிறகு, அவரிடம் இருந்து ஒவ்வொருவராக, முழுமையாகக் கற்றுக்கொண்டு, ஸ்டண்ட் மாஸ்டர்களானார்கள்.

சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, தளபதி தினேஷ், ராம்போ ராஜ்குமார், ஜாகுவார் தங்கம், பெப்சி விஜயன், பொன்னம்பலம், ஜூடோ கே.கே.ராமு, ஆம்பூர் ஆர்.எஸ்.பாபு, இந்தியன் பாஸ்கர் என ஏகப்பட்ட பேர், ஜூடோ ரத்தினத்திடம் உதவியாளர்களாக இருந்து பிறகு ஸ்டண்ட் மாஸ்டர்களாக உயர்ந்து, தமிழ் சினிமாவின் சண்டைக்காட்சிகளை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

‘’ஆளைப் பார்க்கத்தான் பயமாக இருக்கும். அதேபோல், சண்டைக் காட்சியில் இவரைப் பார்த்தாலே நம்மையும் பந்து போல் வீசிவிடுவாரோ என்று தோன்றும். ஆனால், மிக இனிமையான மனிதர். பண்பும் அன்புமாக எல்லோரிடமும் பழகுகிற இனியவர்.

‘’டேய் ரத்தினம், சண்டைக்காட்சிக்கான காரணம் இதுதான். சண்டை நடக்கிற இடம் இதுதான். அதுக்குத் தகுந்த மாதிரி சண்டை நடக்கணும்’’ என்று சொல்லிவிட்டால் போதும்... அங்கே என்னென்ன பொருட்கள் இருக்குமோ அதை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் சண்டையில் சுவாரஸ்யமும் திகிலும் ஏற்படுத்த முடியும் என்பதை அடுத்த அரைமணி நேரத்தில், நமக்கு விளக்கிவிடுகிற சாமர்த்தியம் ரத்தினத்துக்கு உண்டு’’ என்கிறார் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி.

‘சகலகலாவல்லவன்’ படத்தில் மாட்டுவண்டிக்காரரிடம் உள்ள கழியை வைத்துக்கொண்டே சண்டை போடும் காட்சியை பிரமிப்பாக்கியிருப்பார். ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் ‘டைரி’ ஒன்றை வைத்துக் கொண்டே, சண்டை போடுவது போல் செய்திருப்பார். அதேபடத்தில், டீக்கடையில் உள்ள சிறிய பெஞ்ச்சை வைத்துக்கொண்டு சண்டையில் விளையாடியிருப்பார் ஜூடோ ரத்தினம்.

‘முரட்டுக்காளை’ படத்தின் க்ளைமாக்ஸில், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் சண்டையிடுவது போல் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். மிகப்பெரிய ரிஸ்க்குகளுடன் இந்தப் படத்தை எடுத்தார் ஜூடோ ரத்தினம். இந்தச் சண்டையை திரும்பத் திரும்பப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே, மீண்டும் மீண்டும் வந்தார்கள் ஸ்டண்ட் ரசிகர்கள்.

கமலுக்கு மாஸ்டராக இருந்தால் அந்தச் சண்டையில் ஒரு நளினத்தைப் புகுத்துவார். ரஜினிக்கு என்றால், இடையிடையே கொஞ்சம் ஸ்டைலை நுழைப்பார். விஜயகாந்துக்கு சண்டை என்றால், காலால் உதைப்பது போலவே காட்சிகள் வைப்பார். அர்ஜுனுக்கு ஒரு ஸ்டைல், சத்யராஜுக்கு ஒரு ஸ்டைல், பிரபுவுக்கு ஒரு ஸ்டைல் என்று வெரைட்டி காட்டிக் கொண்டே இருப்பார் ஜூடோ ரத்தினம்.

சண்டைக் காட்சியில் ‘சம்மர் ஷாட்’ என்பது மிகப்பிரபலம். இதை சினிமாவில் அப்போது அதிகம் பயன்படுத்தியவர் இவர்தான். ரஜினி சம்மர் ஷாட் அடிக்க எகிறுவார். அவருக்கு டூப் போட்டிருப்பவர், பறந்து வந்து விழுவார். அப்படிப் பறந்து விழுபவரை ஆறேழு பேர் ரெடியாக இருந்து தாங்கிக் கொள்வார்கள். ஜூடோ ரத்தினத்தின் நேரம் எப்போதுமே மிஸ்ஸாகாது என்று திரையுலகினர் வியந்து சொல்லுகிறார்கள்.

தமிழ் சினிமாவில், சண்டைக்காட்சிகளில் பல நவீனங்களையும் புதுப்புது யுக்திகளையும் சேர்த்தவர்களில் ஜூடோ ரத்தினத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

அனல் தெறிக்கும் சண்டைக்காட்சிகள், பறந்து பறந்து எரிந்து சாம்பாலாகிற வாகனங்கள், சகதிக்குள் இறங்கி அடித்துக்கொள்கிற சண்டை, மாட்டுவண்டிகளில் பயணித்தபடி மோதிக்கொள்கிற சண்டைகள், ‘பாயும்புலி’ மாதிரியான படத்தில் வாள் சண்டை, கத்திச்சண்டை, நவீனச் சண்டை என மூன்று விதமான சண்டைகள், கண்ணில் அம்பு குத்துவது, அம்பு குத்தப்பட்டு, பறந்து மண்டபத்தில் இருந்து விழுவது, பைக் சேஸிங், கடைசியாக பைக் தியேட்டருக்குள் சென்று நிற்பது என்று சண்டைக் காட்சிகளுக்குள் பல சாகசங்களைச் செய்து விளையாட்டுக் காட்டியவர் ஜூடோ ரத்தினம்!

‘தலைநகரம்’ மாதிரியான படங்களிலும் நடித்தார். 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்த ஜூடோ ரத்தினம், சொந்த ஊரான குடியாத்தத்தில் வாழ்ந்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக, 2023-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, தன் 93-வது வயதில் மறைந்தார்!

சண்டைக் கலையில் பல சாகசங்களையும் நவீனங்களையும் புகுத்தி, பல சிஷ்யர்களை உருவாக்கி உயர்த்திவிட்ட ஜூடோ ரத்தினம் மாதிரியான கலைஞர்களுக்கு, மரணமே இல்லை. கலை இருக்கும் வரை, இவர்களும் எவர் மூலமாகவோ எப்போதும் பேசப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in