`கணவருக்கு 116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்'- பிரபல நடிகைக்கு எதிராக அதிரடி தீர்ப்பு

`கணவருக்கு 116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்'- பிரபல நடிகைக்கு எதிராக அதிரடி தீர்ப்பு

ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கணவருமான ஜானி டெப்புக்கு 116 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவதூறு வழக்கில் முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவான நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். ஒன்றரை ஆண்டுகளில் இவர்களின் திருமண வாழ்க்கை கசந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனிடையே, ஆம்பர், கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான கட்டுரை ஒன்றை பிரபல பத்திரிகையில் எழுதினார். அதில், ஜானி டெப் பெயரை நேரிடையாக குறிப்பிடாமல் இருந்தார் ஆம்பர் ஹேர்ட். இதனிடயே, திரையுலகில் ஜானி டெப்பின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.

இதையடுத்து, முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட்டுக்கு எதிராக ஜானி டெப் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில், தனது பெயர், புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் செயல்படுவதால் இழப்பீடாக 380 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், ஜானி டெப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்த ஆம்பர், தனக்கு நஷ்ட ஈடாக 776 கோடி இழப்பீடு வழக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்குகள் அந்நாட்டு நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், ஜானி டெப்புக்கு ஆதரவாக நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.

அதில், ஜானியின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவும், அவதூறு பரப்பும் நோக்கத்தோடு பொய்யாக பத்திரிகையில் ஆம்பர் கட்டுரை எழுதியுள்ளார் எனவும் ஜானி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜானிக்கு இழப்பீடாக 116 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in