இந்திய உணவகத்தில் ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து: செலவழித்த தொகை தெரியுமா?

இந்திய உணவகத்தில் ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து: செலவழித்த தொகை தெரியுமா?

முன்னாள் மனைவிக்கு எதிரான வழக்கில், வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தி இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், திருமண உறவில் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

அவர் யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும் அந்தக் கட்டுரை, தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார், ஜானி டெப். ஆம்பர் ஹெர்ட்டும் 100 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குகளின் விசாரணை வெர்ஜினியா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

பின்னர் ஜானி டெப்புக்கு 15 மில்லியன் டாலரை நஷ்டஈடாக வழங்க தீர்ப்பளித்தது நீதிமன்றம். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனது நண்பர்களுக்கு ஜானி டெப், பிரம்மாண்ட விருந்து வைத்து அசத்தி இருக்கிறார். இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள ’வாரணாசி’ என்ற இந்திய உணவகத்திற்கு, நண்பர்கள் ஜெஃப் பெக் உட்பட 21 பேருடன் ஜானி டெப் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றார்.

ஏழு மணிக்கு சென்ற அவர்கள் நள்ளிரவு வரை அங்கிருந்தனர். அவர்களுக்கு ஷிஷ் கெபாப்ஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா மசாலா, லேம்ப் கராஹி, பட்டர் சிக்கன், இறால் என விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த விருந்துக்காக, இந்திய மதிப்பில் சுமார் ரூ.48.1 லட்சத்தை ஜாலியாக செலவு செய்துள்ளார் ஜானி டெப்.

அந்த உணவகத்தின் செயல் இயக்குநர் முகமது ஹூசைன் கூறும்போது, ``விருந்தின் போது ஜானி டெப்பின் எளிமையாக நடந்துகொண்டார். தங்கள் ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in