25 வருடத்துக்குப் பிறகு படம் இயக்கும் பிரபல நடிகர்!

ஜானி டெப்
ஜானி டெப்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் இவர். இந்தப் படத்தின் ஜாக் ஸ்பேரோ கேரக்டர், தனி ரசிகர் பட்டாளத்தை அவருக்கு உருவாக்கிக் கொடுத்தது.

இவர், நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், திருமண உறவில் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

அந்தக் கட்டுரை, தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார், ஜானி டெப். ஆம்பர் ஹெர்ட்டும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த வெற்றியில் மிதக்கும் நடிகர் ஜானி டெப், மீண்டும் இயக்க இருக்கிறார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ’தி பிரேவ்’ என்ற படத்தை இயக்கினார். அதில், மார்லான் பிராண்டோவுடன் டெப்பும் நடித்திருந்தார். அந்தப் படம் அமெரிக்க விமர்சகர்களால் கடுமையாக கிழித்துத் தொங்கவிடப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இந்தப் படம் வெளியாகவில்லை. மற்ற நாடுகளிலும் டிவிடியிலும் இந்தப் படம் வெளியானது.

இந்நிலையில் 25 வருடத்துக்குப் பிறகு மீண்டும் படம் இயக்க வருகிறார் ஜானி டெப். 1884-ல் இருந்து 1920ம் ஆண்டு வரை வாழ்ந்த இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானி (Amedeo Modigliani)யின் வாழ்க்கை கதையை டெப் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல நடிகர் அல் பசினோ தயாரிக்கிறார்.

இதுபற்றி ஜானி டெப் கூறும்போது," மோடிக்லியானியின் வாழ்க்கை சரித்திரத்தை திரைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி. அனைத்து ரசிகர்களும் அடையாளம் காணக்கூடிய உலகளாவிய மனிதனின் கதை இது’’என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in