ரூ.26 கோடியை ஏமாற்றினோமா?-பிரபல நடிகை விளக்கம்

ரூ.26 கோடியை ஏமாற்றினோமா?-பிரபல நடிகை விளக்கம்
ஜீவிதா

செக் மோசடி வழக்கில், பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

டாக்டர் ராஜசேகர் நடித்த தெலுங்கு படம், ’பிஎஸ்வி கருடவேகா’. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ராஜசேகருக்கு இந்தப் படம் ஹிட்டானது. பிரவீன் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா குமார், ஸ்ரத்தா தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கோட்டீஸ்வர ராஜூ தயாரித்திருந்தார்.

டாக்டர் ராஜசேகருடன் ஜீவிதா
டாக்டர் ராஜசேகருடன் ஜீவிதா

இந்நிலையில், நடிகை ஜீவிதாவும் டாக்டர் ராஜசேகரும் ’கருடவேகா’ படத்துக்காக ரூ.26 கோடியை தங்களிடம் வாங்கியதாகவும் அதைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் இதற்காக அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி வந்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூவும் அவர் மனைவியும் நேற்று புகார் கூறினர்.

அதோடு நகரி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுக்கப்பட்டதாகவும் காசோலை மோசடி வழக்கில் அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இதுபற்றி நடிகை ஜீவிதா, செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ``கருடவேகா படத்துக்கு அவர்தான் தயாரிப்பாளர்கள். பிறகு எப்படி அவர் எங்களுக்கு கடன் கொடுத்திருக்க முடியும்? வேறு ஏதோ காரணத்துக்காக, அவர் இப்படி சொல்கிறார். அவரால் பாதிக்கப்பட்ட சிலர் எங்களுடன் இருக்கின்றனர்.

கோட்டீஸ்வர ராஜூ, 2 மாதத்துக்கு முன் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அதை இப்போது செய்தியாளர்களைச் சந்தித்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்கள் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைத்தால், அந்த தந்திரங்களில் சிக்கமாட்டேன். நான் பலவீனமானவள் அல்ல. அந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். யார் குற்றவாளி என்பது நீதிமன்றம் மூலம் தெரியவரும்'’ என்றார்.

Related Stories

No stories found.