’மும்பை ஹீரோயின்களின் நாய்க்குட்டிக்கு கூட அறை ஒதுக்குகிறார்கள்’ : சீனியர் நடிகை விளாசல்!

’மும்பை ஹீரோயின்களின் நாய்க்குட்டிக்கு கூட அறை ஒதுக்குகிறார்கள்’ : சீனியர் நடிகை விளாசல்!

மும்பையில் இருந்து வரும் ஹீரோயின்களின் நாய்க்குட்டிக்கு கூட சினிமாவில் அறை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள் என்று பிரபல முன்னாள் ஹீரோயின் விளாசினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்திருப்பவர் ஜெயசுதா. முன்னாள் நாயகியான இவர், தமிழில், கே.பாலசந்தரின் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பாக்தாத் பேரழகி, அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யின் ’வாரிசு’ உட்பட பல படங்களில் நடித்து வரும் ஜெயசுதா, சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆனதை ஒட்டி தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதா வது:

சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்திருந்தாலும் யாரும் ஒரு பூங்கொத்து கூட கொடுக்கவில்லை. இந்தப் பழக்கம் பாலிவுட்டில் இருக்கிறது. இதுவே ஒரு ஹீரோவுக்கு நடந்திருந்தால் பெரிய கொண்டாட்டமாக இருந்திருக்கும். என்னிடம் பலர் இதற்காக விருந்து வைக்கலாமே என்று சொன்னார்கள். அதை விரும்பவில்லை. இந்த 50 ஆண்டுகால பயணத்தில், வெற்றி பெற்ற ஹீரோக்களை ஒரு விதமாகவும் நடிகைகளைக் குறைத்தும் மதிப்பிடுவதைப் பார்க்கிறேன்.

நான் முன்னணி ஹீரோயினாக இருந்தபோதும் இப்போதும் அந்த வித்தியாசத்தைப் பார்க்கிறேன். ஒரு டாப் ஹீரோ, சரியாக நடனம் ஆடவில்லை என்றால் இயக்குநர், ஹீரோயினைதான் குறை சொல்வார். இதுபற்றி, ஏதாவது கேள்வி எழுப்பி இருந்தால் இத்தனை வருடங்கள், என்னால் இங்கே நிலைத்திருக்க முடியாது. எப்போதோ அனுப்பி இருப்பார்கள் .

மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களின் நாய்க்குட்டிக்குக் கூட அறை ஒதுக்குகிறார்கள்.

’இத்தனை வருடமாக சினிமாவில் இருக்கும் உங்களுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது கொடுக்கவில்லை’ என்று கேட்கிறார்கள். இதற்கு என்னிடம் பதில் இல்லை. நடிகை கங்கனா ரனாவத்திற்கு பத்மஸ்ரீ கொடுத்தார்கள். ஒரு வேளை அரசாங்கத்துடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் கொடுத்திருக்கலாம். பத்மஸ்ரீ விருதுக்கு பாலிவுட் நடிகைகள் மட்டுமே தகுதியானவர்களா? மற்ற ஹீரோயின்களுக்கு தகுதி இல்லையா?” இவ்வாறு ஜெயசுதா கூறியுள்ளார்.

இந்த புரமோ வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in