நடிப்பில் ஜெயலலிதா ஜொலித்த ‘எங்கிருந்தோ வந்தாள்!’

எம்எஸ்வி - கவியரசர் கூட்டணியில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்!

நடிப்பில் ஜெயலலிதா ஜொலித்த ‘எங்கிருந்தோ வந்தாள்!’

கலைஞரின் ‘பராசக்தி’ 1952-ம் ஆண்டு வெளியானது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான இந்தப் படத்தில் அவரது கேரக்டரின் பெயர் குணசேகரன். இந்தப் படம் வந்து 70 ஆண்டுகளாகிவிட்டன. ’பராசக்தி’க்குப் பிறகு, தமிழகத்தில் நிறைய வீடுகளில் ஆண் குழந்தை பிறந்தால், ‘குணசேகரன்’ என்று பெயர் சூட்டினார்கள். இன்றுவரைக்கும் ‘குணசேகர’ தாக்கம் ‘பராசக்தி’யின் மூலம் நிறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குணசேகரன் எனும் கதாபாத்திரம் ஏற்ற சிவாஜி கணேசன், மீண்டும் அதே பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார். அதுதான் ‘எங்கிருந்தோ வந்தாள்’.

’குல்ஷன் நந்தா’ எனும் எழுத்தாளர் எழுதிய ’பத்தர் கே ஹோந்த்’ என்ற நாவல் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்தியில் இந்த நாவல் படமாக எடுக்கப்பட்டது. பின்னர் 1963-ம் ஆண்டு தெலுங்கில் ‘புனர்ஜென்மா’ எனும் பெயரில் படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது. இதையடுத்து ஏழு வருடங்களுக்குப் பிறகு ‘எங்கிருந்தோ வந்தாள்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மேஜர் சுந்தர்ராஜன். இவருக்கு பாலாஜி, சிவாஜி, முத்துராமன் என்று மகன்கள். இவர்களில் சிவாஜி ஒரு பெண்ணைக் காதலிப்பார். எதிர் வீட்டில் உள்ளவரின் தொந்தரவாலும் சிக்கலாலும் காதல் கைகூடாமல் போகும். மேலும் காதலி, மாடியில் இருந்து தவறுதலாக விழுந்து இறந்துவிடுவாள்.

அந்த அதிர்ச்சியில், பிரமை பிடித்தது போலாகிவிடுவார் சிவாஜி. தனியறையில் சிவாஜியைப் பூட்டி வைத்திருப்பார்கள். ஏதேதோ சொல்லி உளறிக்கொண்டே இருப்பார். தவறான இடத்தில் ஜெயலலிதாவை மேஜர் சுந்தர்ராஜன் சந்திக்க நேரிடும். அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து, சிவாஜியைப் பார்த்துக்கொள்ளும் வேலையைத் தருவார்.

ஆனால் ஜெயலலிதாவை வீட்டில் உள்ள எல்லோரும் வெறுத்து ஒதுக்குவார்கள். ஆரம்பத்தில் சிவாஜி முரண்டுபிடித்து, கையில் கிடைத்ததையெல்லாம் வீசியெறிவார். இதில் ரத்தமே வந்துவிடும் ஜெயலலிதாவுக்கு. ஆனால் தன் குடும்பச் சூழலால் சகலத்தையும் பொறுத்துக்கொள்வார்.

கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜியிடம் மாற்றம் வரும். இதில் சிவாஜி குடும்பத்தில் உள்ள பெண்ணுக்கு சினிமா மோகம் இருக்கும். அவளை அந்த எதிர்வீட்டுக்காரன் தன் வலையில் விழச் செய்வான். அவளிடம் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு வரச் சொல்வான். சினிமாவில் சேர்த்துவிடுவதாக பொய் சொல்வான். இதை தெரிந்துகொண்ட ஜெயலலிதா, அவனைக் கடிந்துகொள்வார். ஆனால் அவனுக்கும் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக சிவாஜியின் குடும்பத்தினர் நினைப்பார்கள்.

இந்த நிலையில், ஒரு சூழலில், சிவாஜிக்கும் ஜெயலலிதாவும் ‘உறவு’ நிகழ்ந்துவிடும். இதில் அவர் கர்ப்பமாகிவிடுவார். சிவாஜியும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். ஜெயலலிதா தப்பானவள். அதனால்தான் கர்ப்பமாகி இருக்கிறாள். பணமும் சொத்தும் இருப்பதால் நம் பையன் மீது பழிபோடுகிறாள் என்று வீடு ஏசித்தள்ளும். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும். சிவாஜிக்கு ஒரே குழப்பம். சிவாஜிக்கு ஜெயலலிதா யாரென்றே தெரியாமல் இருக்கும்.

‘மூன்றாம் பிறை’ படத்தில் கடைசிக் காட்சியில் கமலை ஸ்ரீதேவிக்கு யாரென்றே தெரியாமல் இருக்குமே... அப்படித்தான் சிவாஜிக்கு ஜெயலலிதாவை தெரியாமல் இருக்கும். ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்துவார் ஜெயலலிதா. கெஞ்சுவார். அழுவார். ஆனால், சிவாஜிக்கு ஞாபகம் வராது. அவர்தான் பழைய நினைவுக்கு மீண்டு வந்துவிட்டாரே..! அந்த சமயத்தில்தான் முத்துராமன் வெளியூரில் இருந்து வருவார். அவரும் ஆசிரமம் வைத்திருக்கும் நாகையாவும் ஜெயலலிதாவைப் பற்றியும் ஜெயலலிதா சொல்வதெல்லாம் உண்மை என்பதையும் சொல்லிப் புரியவைப்பவர்கள்.

எங்கிருந்தோ வந்து, சிவாஜியை பழைய நிலைக்குக் கொண்டு வந்த ஜெயலலிதாவை மொத்த வீடும் அரவணைக்கும். ஏற்றுக்கொள்ளும். சிவாஜியும் மன்னிப்புக் கேட்பார். ஜெயலலிதாவின் தியாகம் உணருவார். அவரின் கரம் பற்றுவார். திருமணம் இனிதே நடந்தேறும்.

அந்தக் காலத்தில் ஒரு பேச்சுக்கு சொல்வார்கள். எம்ஜிஆருடன் ஏராளமான படங்களில் நடித்தவர்கள் ஜெயலலிதாவும் சரோஜாதேவியும். ஆனால் அவர்கள் இருவரின் நடிப்பு பிரமாதமாக வெளிப்படும் கதாபாத்திரங்கள், சிவாஜியுடன் நடிக்கும்போதுதான் கிடைத்தது என்பார்கள். யோசித்துப் பார்த்தால், சரியென்றே சொல்லத் தோன்றுகிறது.

‘கலாட்டா கல்யாணம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘எங்க ஊர் ராஜா’, ‘நீதி’, ‘ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் ஜெயலலிதாவின் ஆகச்சிறந்த நடிப்பைப் பார்க்கலாம். இந்தப் படத்திலும் காட்சிக்குக் காட்சி ஜெயலலிதா தன் நடிப்பால் ஸ்கோர் செய்துகொண்டே இருப்பார். சிவாஜியின் நடிப்பைச் சொல்லவும் வேண்டுமா? நல்ல நாளிலேயே பிரமாதப்படுத்தும் சிவாஜி, மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்தால், அப்புறமென்ன... தூள் கிளப்பி அதகளம் பண்ணுவார்.

பாலாஜி, முத்துராமன், நாகையா, மேஜர், தேவிகா, நாகேஷ் முதலானோரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் நாயகியான ஜெயலலிதாவுக்கு ‘ராதா’ என்று பெயர். பாலாஜி படத்தில் ‘ராஜா - ராதா’ என்று பெயர்தானே சூட்டப்படும். இந்த ‘ராதா’தான் முந்திக்கொண்டிருக்கிறாள் போல!

கே.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் படத்தைத் தயாரித்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் எல்லாப் பாடல்களையும் எழுதினார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. சிவாஜியை ரசித்து ரசித்து இயக்குநர்களில் ஒருவரான ஏ.சி.திருலோகசந்தர், அற்புதமாக இயக்கியிருந்தார்.

ஒவ்வொரு பாடலிலும் டி.எம்.எஸ் தன் வசீகரக் குரலால் ஜீவன் சேர்த்திருப்பார். ‘ஒரே பாடல் உன்னை அழைக்கும்’ செம ஹிட்டானது. ’வந்தவர்கள் வாழ்க’ என்று ஜெயலலிதாவுக்கு ஜானகி பாடியிருப்பார். சகுந்தலை துஷ்யந்தன் கதையையும் சிவாஜி ஜெயலலிதாவின் நிகழ்வையும் இணைத்து காட்சிப்படுத்தியிருக்கும் பாடலை சீர்காழி கோவிந்தராஜனும் சுசீலாவும் பாடியிருப்பார்கள். ’நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்’ பாடலை அந்தக் காலத்து காதலர்கள் பாடிக்கொண்டு காதல் வளர்த்தார்கள். ’சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே’ என்ற பாடலை டி.எம்.எஸ், சுசீலா இணைந்து பாடியிருப்பார்கள். இப்படி பாட்டுகள் எல்லாமே தித்தித்தன.

1970 அக்டோபர் 29-ம் தேதி தீபாவளியன்று வெளியானது ‘எங்கிருந்தோ வந்தாள்’. இதே நாளில், சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் கே.பாலாஜியும் நடித்த டி.ஆர்.ராமண்ணாவின் ‘சொர்க்கம்’ படமும் வெளியானது. தமிழ் சினிமா சரித்திரத்தில், முதன்முதலாக, ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியானது எனும் பெருமை சிவாஜி கணேசனுக்குத்தான் சென்று சேர்ந்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. படம் வெளியாகி, 52 ஆண்டுகளாகிவிட்டன.

‘எங்கிருந்தோ வந்தாள்’ பட விமர்சனத்தில் ஜெயலலிதாவின் நடிப்பைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நூறுநாள் பல தியேட்டர்களிலும் வெள்ளிவிழா சில தியேட்டர்களிலும் என்று வெற்றி வாகை சூடி ஓடினாள்... ‘எங்கிருந்தோ வந்தாள்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in